சென்னையில் ஆகஸ்ட் மாதம் ஃபார்முலா 4 கார் பந்தயம் நடக்கவிருக்கிறது. தெற்காசியாவில் முதன் முறையாக சாலை வழியாக இரவுப்போட்டியாக நடைபெற இருப்பதால் இந்த கார் பந்தயத்திற்கு பெரிய அளவில் எதிர்பார்ப்பு உள்ளது.
இந்த கார் பந்தயத்திற்காக தொழிலதிபர்களையு, நிறுவனங்களையும் கட்டாயப்படுத்தி விளம்பரம் வாங்குவதாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, ஆதாரமில்லாமல் குற்றம் சாட்டுகிறார் என்கிறார் பாஜகவில் இருந்து நீக்கப்பட்ட திருச்சி சூர்யா.
’’வேதம் ஓதுவதற்கு சாத்தானுக்கு தகுதி உண்டா?’’ என்றும் அண்ணாமலையைப் பார்த்து கேட்கிறார் சூர்யா.
ஃபார்முலா ரேஸ்-ஐ தமிழ்நாடு அரசு வெற்றிகரமாக நடத்திவிட்டால் மாநில அரசின் விளையாட்டு துறை பெயர் வாங்கிவிடும் என்பதற்காக அபாண்டமாக குற்றம் சாட்டுவது சரியா? என்றும் கேள்வி எழுப்பி இருக்கும் சூர்யா, பாஜகவின் விளையாட்டுப் பிரிவு மாநில துணைத்தலைவராக இருக்கும் அலிஷா அப்துல்லாஹ், பார்முலா ரேஸ்க்கு நேரடியாகவே ஆதரவு தெரிவிக்கின்றபோது, அதே கட்சியின் மாநில தலைவராக இருக்கக்கூடிய அண்ணாமலை அதை கண்டித்து அறிக்கை வெளியிடுவதால், ’’அரசியலுக்கு வந்தீங்களா? நடிக்க வந்தீங்களா அண்ணாமலை?’’ என்றும் கேட்கிறார் சூர்யா.
’’மோடி கபடி லீக் என்ற பெயரில் அமர்பிரசாத் ரெட்டி செய்த ஊழல், முறைகேடுகளும் பொதுநல ஆசைகளுக்காக செய்யப்பட்டதா? என்று கேட்கும் சூர்யா, அமர் பிரசாத்
ரெட்டி மீது ’கை நீட்டி’ எடுத்த நடவடிக்கைகள் என்ன?’’ என கேட்கிறார். ’’தமிழ்நாடு பாஜகவினரால் மிரட்டப்பட்ட தொழிலதிபர்கள் லிஸ்ட் வேண்டுமா இந்திய அளவில் அமலாக்கத்துறையை ஏவி, பின்னர் தேர்தல் பத்திரத்திற்கு பணம் வசூலிக்கப்பட்ட கதை தான் ஊரே நாறியது. குற்றம் சாட்டுவதை விட தொழில் அதிபர்களை மிரட்டி பணம் வாங்குவதை பற்றி அண்ணாமலை பேசுவதற்கு தகுதி இருக்கிறதா?’’என்றும் கேள்வி எழுப்பி இருக்கிறார் சூர்யா.