போலி ஆவணம் தயாரித்து ரூ.50 கோடி மதிப்பிலான நிலத்தை அபகரித்த வழக்கில் போலீசார் கைது செய்யாமல் இருக்க தலைமறைவாக உள்ள அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ.வின் கணவரைத்தேடுகிறது போலீஸ்.
திருச்செங்கோடு தொகுதியின் அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ. பொன்.சரஸ்வதியின் கணவர் பொன்னுசாமி. ரியல் எஸ்டேட் தொழில் செய்து வரும் இவர், கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு சிலுவம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த விவசாயி எட்டிக்கண்ணுக்குச் சொந்தமான 50 கோடி ரூபாய் மதிப்பிலான 5 ஏக்கர் நிலத்தை போலி ஆவணம் தயாரித்து தன் பெயருக்கு மாற்றிக் கொண்டிருக்கிறார்.
பின்னர் அந்த இடத்தை பிளாட்களக மாற்றி 4 பேருக்கு விற்பனை செய்துள்ளார். இது தொடர்பாக சிலுவம்பட்டி ஊராட்சியில் அனுமதி கேட்டு விண்ணப்பித்த போதுதான் இந்த முறைகேடு தெரியவந்துள்ளது. இதையடுத்து எட்டிக்கண் அளித்த புகாரின் பேரில் நாமக்கல் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தி பொன்னுசாமி உள்ளிட்ட 5 பேர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.
இந்த வழக்கின் கீழ் பொன்னுசாமியை கைது செய்ய திருச்செங்கோட்டில் உள்ள அவரது வீட்டிற்கு சென்றபோது அவர் தலைமைறைவாகிவிட்டது தெரியவந்துள்ளது. போலீசார் அவரை கைது செய்ய தேடி வருகின்றனர்.