ஒன்றிய அரசுக்கும் மாநில அரசுகளுக்கும் இடையே ஆளுநர்கள் பாலமாக இருக்க வேண்டும் என்று டெல்லியில் நேற்று நடந்த மாநில ஆளுநர்கள் மாநாட்டில் அறிவுறுத்தினார் பிரதமர் மோடி.
அதே நேரம், பிரதமரின் கைப்பாவையாக செயல்படுகிறார் ஆளுநர். கர்நாடகாவில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கத்தை ஆளுநரை பயன்படுத்தி சீர்குலைக்க முயற்சிக்கிறது ஒன்றிய அரசு என்று குற்றம் சாட்டி இருக்கிறார் கர்நாடக முதல்வர் சித்தராமையா.
அவர் மேலும், மூடா மாற்று நில விவகாரத்தில் நான் எந்த தவறும் செய்யவில்லை. என் பங்கும் என்று அதில் எதுவுமே இல்லை. அப்படி இருக்கும்போது, சட்ட நிபுணர்களுடன் ஆலோசிக்காமல் எனக்கு ஷோ காஸ் நோட்டீஸ் அனுப்பி இருக்கிறார் ஆளுநர். இது இந்திய அரசிலமைப்பின் சட்டத்தையும் ஜனநாயகத்தையும் கொலை செய்கின்ற செயல்.
அமைச்சர்களின் ஆலோசனையின் படிதான் ஆளுநர் செயல்படவேண்டும். அதனால்தான் ஆளுநரின் செயல் அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிராக உள்ளது. முதல்வருக்கு அனுப்பப்பட்ட நோட்டீசை வாபஸ் பெற வேண்டும் என்று அமைச்சரவை கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டிருக்கிறது என்கின்றனர்.
கர்நாடகாவில் மட்டுமல்ல, பாஜக ஆட்சி இல்லாத மாநிலங்களில் எல்லாம் ஆளுநர்களின் செயல் சட்டவிரோதமாகவே உள்ளதால், பிரதமர் சொன்னது போல் ஆளுநார்கள் பாலமா? இல்லை பாரமா? என்ற கேள்வி எழுந்திருக்கிறது.