பாஜகவுக்கு ஆதரவாக செயல்பட்டு வந்ததால் எஸ்.பி.வேலுமணிக்கும் எடப்பாடி பழனிச்சாமிக்கும் இடையே மனக்கசப்பு இருந்து வந்தது. இருவருக்கும் இடையே பிரச்சனை இருப்பதாக அண்ணாமலையும் சொல்லி இருந்தார். அடுத்ததாக சசிகலாவை மீண்டும் கட்சிக்கு சேர்க்க வேண்டும் என்று தங்கமணி, செங்கோட்டையன் உள்ளிட்ட 6 பேருடன் எடப்பாடி வீட்டிற்கே சென்று பேச்சுவார்த்தை நடத்திய வேலுமணி மீது ஏகப்பட்ட எரிச்சலில் இருந்திருக்கிறார் எடப்பாடி.
தனக்கு நம்பிக்கையானவராக இருப்பார் என்று பார்த்தால் இன்னமும் சசிகலாவுக்கே விசுவாசமாக இருக்கிறாரே இந்த வேலுமணி என்று மீது அதிக ஆத்திரத்தில் இருந்திருக்கிறார் எடப்பாடி. அந்த ஆத்திரம் ஆய்வுக்கூட்டத்தில் வெடித்திருக்கிறது.
நாடாளுமன்றத் தேர்தலில் தோல்வி அடைந்தது குறித்து தொகுதிவாரியாக ஆலோசனைக்கூட்டம் நடத்தி நிர்வாகிகளின் கருத்துக்களை கேட்டறிந்து வருகிறார் எடப்பாடி. அந்த வகையில் கடந்த ஜூலை மாதம் 30ம் தேதி அன்று தூத்துக்குடி நாடாளுமன்ற தொகுதிக்கான ஆய்வுக்கூட்டத்தில் தோல்விக்கான காரணங்கள் குறித்து காரசாரமாக விவாதம் நடந்திருக்கிறது.
அதிமுக வர்த்தக அணி மாநில செயலாளர் சி.த.செல்லப்பாண்டியனுக்கும், அதிமுக துணை பொதுச்செயலாளர் முனுசாமிக்கும் இடையே கடும் வாக்குவாதம் நடந்திருக்கிறது. அப்போது, தூத்துக்குடி சட்டமன்ற தொகுதியில் 161வது வார்டில் அதிமுகவுக்கு ஒரே ஒரு வாக்கு மட்டும் வந்திருக்கிறது. அந்த அளவுக்கு அங்கே வேலை பார்த்திருக்கிறீர்கள் என்று முனுசாமி சொல்ல, பதிலுக்கு செல்லப்பாண்டியனும் ஆவேசமாக பேசியிருக்கிறார்.
வேலுமணி எழுந்து, முனுசாமியை அமைதிப்படுத்த முயன்றிருக்கிறார். உடனே எடப்பாடி, அவர்கள் பேசட்டும் நீங்கள் உட்காருங்கள் என்று கோபமாக சொல்லி இருக்கிறார். அத்தனை பேர் மத்தியில் தன்னை எடப்பாடி அப்படிச்சொல்வார் என்று கொஞ்சமும் எதிர்பார்த்திராத வேலுமணிக்கு ரொம்பவே அதிர்ச்சியாக இருந்திருக்கிறது. அதுக்கு பிறகு எவ்வளவோ காரசாரமான பேச்சு எல்லாம் நடந்தும் கூட வேலுமணி வாயை திறக்கவே இல்லையாம்.
வேலுமணி மீது உள்ளுக்குள் இருந்த ஆத்திரத்தை எல்லாம் கட்சி நிர்வாகிகள் மத்தியிலேயே கொட்டும் அளவுக்கு எடப்பாடி – வேலுமணி மோதல் வலுத்துவிட்டது என்கின்றனர்.