சென்னை வள்ளுவர் கோட்டத்தில் அனுமதி பெறாமல் ஆர்ப்பாட்டம் நடத்தியதாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீதும், அந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற 300 பேர் மீதும் நுங்கம்பாக்கம் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
அந்த ஆர்ப்பாட்டத்தில் பேசிய சீமான், காவல்துறை உயரதிகாரிகள் குறித்து, குறிப்பாக ஐபிஎஸ் அதிகாரிகள் குறித்து தரக்குறைவாக பேசியதாக சீமானுக்கு கண்டனம் தெரிவித்திருக்கிறார் வருண்குமார் எஸ்.பி.
சீமானின் இந்த பேச்சை தமிழ்நாடு மக்கள் ஒருபோது ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்று தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்டிருக்கும் வருண்குமார், சீமானின் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்து வழக்கறிஞர் நோட்டீஸ் அனுப்பி இருக்கிறார்.
வள்ளுவர் கோட்டத்தில் நடந்த அந்த ஆர்ப்பாட்டத்தில் பேசிய சீமான், 15 வருடங்களாக ஒரு பொம்பளய வச்சு தன் மேல் களங்கம் ஏற்படுத்துவதாக திமுக மீது குற்றம்சாட்டி இருந்தார். இது அவதூறு என்று சம்பந்தபட்ட நடிகை விஜயலட்சுமியே மறுத்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டிருக்கும் வீடியோவில், 46 வயது வரைக்கும் வாழ்க்கை இல்லாமல் சீமான் அலைந்து கொண்டிருந்தபோது தான் வாழ்க்கை கொடுத்ததாகவும், இப்போது பெங்களூருவில் ஒதுங்கி இருப்பதாகவும், தேவையில்லாமல் தன் மீதும் திமுக மீதும் அவதூறு செய்வதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
கணவன் என்ற முறையில் சீமான் தனக்கு பண உதவிகள் செய்து வந்ததாகவும், இப்போது ஏன் மாற்றி பேசவேண்டும்? என்றும் அந்த வீடியோவில் மிகவும் ஆவேசமாக கேட்டிருக்கும் விஜயலட்சுமி, தான் பேசக்கூடாது என்று ஆளை வைத்து மிரட்டும் சீமான், தன் மீது அவதூறு பரப்பி பேசத்தூண்டுவது ஏன்? என்று கேள்வியை எழுப்பி, தான் பேச ஆரம்பித்தால் சீமான் தாங்கமாட்டார் என்றும் எச்சரித்திருக்கிறார்.
சீமானின் இந்த பேச்சுக்கு ஜென் தத்துவ கதையைச்சொல்லி கண்டனம் தெரிவித்திருக்கிறார் விசிகவின் துணை பொதுச்செயலாளர் வன்னி அரசு.
‘’தன் கட்சியின் பெண் நிர்வாகியை தரக்குறைவாக பேசுவதும் அதை நியாயப் படுத்துவதும் கொடுமை என்றால், பிசிறென்பேன், ம..ரென்பேன், உசிரென்பேன் என்றதும் கூட்டத்தினர் கைதட்டுவதும் தரமிழத்திலின் உச்சம்’’என்கிறார் சிபிஎம் கே.கனகராஜ்.