இந்தியா ஒரு நாடு என்பதைத் தாண்டி துணைக் கண்டம், உபகண்டம், பல மொழிகள் பேசும் தேசிய இனங்களைக் கொண்ட ஒன்றியம் என்பதே அதன் சிறப்பாகும். இந்திய அரசியல் சட்டமும் “India that is Barath shall be a union of states” என்றுதான் குறிப்பிடுகிறது. அதாவது, இந்தியா என்கிற பாரதம் மாநிலங்களின் ஒன்றியம் என்பதாகும்.
சுதந்திர இந்தியாவில் மொழிவாரியாக மாநிலங்கள் பிரிக்கப்பட்டதற்கு காரணம், அந்தந்த மொழி பேசும் மக்களின் தனிப்பட்ட பண்பாடு, பழக்கவழக்கங்கள் ஆகியவற்றைப் பாதுகாக்கும் வகையில் ஜனநாயக அமைப்பு இருக்க வேண்டும் என்பதுதான்.
மொழிவாரி மாநிலங்களைத் தொடர்ந்து, நிர்வாக வசதிகளுக்காகவும் சில மாநிலங்கள் உருவாக்கப்பட்டன. உத்தரகாண்ட், சட்டீஸ்கர், ஜார்கண்ட், தெலங்கானா உள்ளிட்ட மாநிலங்கள் அந்தந்தப் பகுதி மக்களின் தேவைகளைக் கருதி நிர்வாக வசதிக்காகப் பிரிக்கப்பட்டவை. முதல் பிரதமர் நேரு தொடங்கி, பிரதமர் மன்மோகன்சிங் ஆட்சிக்காலம் வரை புதிய மாநிலங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. யூனியன் பிரதேசங்களாக இருந்தவை மாநிலங்களாகத் தரம் உயர்த்தப்பட்டிருக்கின்றன.
டெல்லி, கோவா உள்ளிட்டவை அப்படிப்பட்ட மாநிலங்கள்தான். புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் உள்ள அரசியல் கட்சிகள் இப்போதும் மாநில அந்தஸ்தைக் கோருகின்றன. கூர்காலாந்த், விதர்பா உள்ளிட்ட மாநிலக் கோரிக்கைகளும் பல ஆண்டுகளாக ஒலிக்கின்றன. மத்தியில் ஆளும் பா.ஜ.க. இந்த கோரிக்கைகளை கண்டுகொள்வதில்லை. மாறாக, மாநிலங்களாக இருப்பவற்றை யூனியன் பிரதேசங்களாக அதிகாரக் குறைப்பு செய்வதிலேயே கவனமாக இருக்கிறது.
இந்திய வரைபடத்தில் தலைப்பகுதி போல இருப்பது ஜம்மு-காஷ்மீர். அரசியல் சாசனத்தின் 370வது பிரிவில் வழங்கப்பட்ட சிறப்புரிமைகளுடன் இருந்த மாநிலத்தின் சிறப்பு அதிகாரங்களைப் பறித்தும், ஜம்மு-காஷ்மீருக்கான மாநில அந்தஸ்தை ரத்து செய்தும் 2019 ஆகஸ்ட் 5 அன்று நாடாளுமன்றத்தில் உள்துறை அமைச்சர் அமித்ஷா அறிவித்தார். அதற்கு முந்தைய நாள் இரவே காஷ்மீர் மாநிலத்தின் முன்னாள் முதல்வர்கள், அரசியல் தலைவர்கள் உள்ளிட்டோர் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டனர்.
ஜம்மு-காஷ்மீர் மாநிலம் இனி ஜம்மு-காஷ்மீர் மற்றும் லடாக் ஆகிய இரண்டு யூனியன் பிரதேசங்களாக செயல்படும் என்பதே உள்துறை அமைச்சரின் அறிவிப்பு. அமைதியை ஏற்படுத்தவும், பாதுகாப்பை உறுதி செய்யவும், வேலைவாய்ப்புகள் பெருகிடவும், வளர்ச்சியைக் கருத்தில் கொண்டும் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக அறிவிக்கப்பட்டதுடன், இவற்றைக் கவனிப்பதற்காக உயர்மட்டக் குழுவும் அமைக்கப்பட்டது. குறிப்பாக, லடாக் பகுதி மிகவும் புறக்கணிக்கப்பட்டிருப்பதால் அதன் வளர்ச்சியைக் கருத்திற்கொண்டே தனி யூனியன் பிரதேசமாக்கப்படுகிறது எனவும் தெரிவிக்கப்பட்டது.
ஜம்மு-காஷ்மீரின் மாநில அந்தஸ்தும் அதன் சிறப்பு உரிமைகளும் பறிக்கப்பட்டு 5 ஆண்டுகள் ஆன நிலையில் என்னென்ன வளர்ச்சிகள் ஏற்பட்டிருக்கின்றன என்ற கேள்விக்கு சாதகமான பதில்கள் இல்லை. மாறாக, லடாக் தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினர் (சுயேட்சை) முகமது ஹனீஃபா அளித்துள்ள ஒரு பேட்டியில், லடாக் மக்களின் பண்பாடு, அடையாளம், நிலம், அவர்களின் வேலைவாய்ப்பு ஆகியவை வெளியாட்களிடமிருந்து பாதுகாக்கப்பட வேண்டும் எனத் தெரிவித்துள்ளார். உயர் மட்டக் குழுவின் செயல்பாடுகளோ, உள்துறை அமைச்சரிடம் நேரடியாக வைத்த கோரிக்கைகளோ பலன் தரவில்லை என்பதையும் சுட்டிக்காட்டியுள்ளார்.
லடாக் பகுதியில் கடந்த ஐந்தாண்டுகளில் இதுவரை அரசுப் பணிகளுக்கான எந்தத் தேர்வும் நடைபெறாததால் படித்த இளைஞர்கள் மிகவும் அதிருப்தியடைந்து மனஉளைச்சலுக்கு ஆளாகியுள்ளனர். லடாக் நிர்வாகத்தை லாடக் மக்களே நிர்வகிக்க கூடிய வகையில் அரசுப் பணிகளில் லடாக் வசிப்பிடச் சான்று உள்ளவர்களுக்கே வாய்ப்பு வழங்கப்பட வேண்டும் என்பதையும் ஹனீஃபா வலியுறுத்தியுள்ளார்.
லடாக்கில் ஒரு மருத்துவக் கல்லூரியும், பொறியியல் கல்லூரியும் அமைக்கப்படும் என்ற வாக்குறுதியும் நிறைவேற்றப்படவில்லை என்கிற லடாக் எம்.பி., “4 லட்சம் மக்கள் தொகை கொண்ட லடாக்கின் தனித்தன்மையான பண்பாடு காக்கப்படாமல், வெளியாட்களை நிர்வாகத்திற்கு உட்படுத்தி, அவர்களை இங்கே தங்க வைத்தால், எங்கள் பண்பாடு சீரழியும் என்கிற அச்சம் உள்ளது” என்கிறார்.
லடாக் யூனியன் பிரதேசத்தின் நிர்வாகத்திற்குத் தேர்தல் கிடையாது. நேரடியாக மத்திய அரசின் நேரடிக் கட்டுப்பாட்டிற்குட்பட்டது. ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசம் ஏறத்தாழப் புதுச்சேரியைப் போன்ற தன்மையைக் கொண்டது. அதன் சட்டமன்றத்திற்கானத் தேர்தல் இதுவரை நடத்தப்படவில்லை. ஜம்மு-காஷ்மீர் அரசியல் கட்சிகளும் மனித உரிமை அமைப்புகளும் விரைந்து தேர்தலை நடத்த வேண்டும் என வலியுறுத்தியும், மத்திய அரசும் தேர்தல் ஆணையமும் இதில் கவனம் செலுத்தவில்லை.
தேர்தல் தள்ளிப் போகப் போக ஜம்மு-காஷ்மீரில் தீவிரவாத தாக்குதல்கள் அதிகரிக்கும் ஆபத்தும் உள்ளது என்ற எச்சரிக்கையையும் தரவுகளின் அடிப்படையில் மனித உரிமை அமைப்புகள் வெளியிட்டுள்ளன.
இந்தியாவை மாநிலங்களின் ஒன்றியம் என்று அரசியல் சட்டம் குறிப்பிட்டிருப்பதற்கு மாறாக, மாநிலங்கள் இல்லாத இந்தியாவை உருவாக்க நினைக்கிறதா மத்திய பா.ஜ.க அரசு?