கொரோனா பெருந்தொற்றை போல பாதிப்பு ஏற்படுத்துக்கூடிய மிகவும் ஆபத்தான 30-க்கும் மேற்பட்ட நோய்க்கிருமிகள் அடங்கிய புதிய பட்டியலை உலக சுகாதார அமைப்பு(WHO) வெளியிட்டுள்ளது.
ஒரு குறிப்பிடத்தக்க நடவடிக்கையாக, உலக சுகாதார அமைப்பு (WHO) தனது நோய்க்கிருமிகளின் பட்டியலைத் திருத்தியுள்ளது. திருத்தப்பட்ட பட்டியலில் எதிர்காலத்தில் பெரும் ஆபத்தை ஏற்படுத்தக்கூடிய பரந்த அளவிலான வைரஸ்கள் மற்றும் பாக்டீரியாக்களை அடையாளம் உலக சுகாதார அமைப்பு கண்டுள்ளது. இந்த புதுப்பிக்கப்பட்ட பட்டியலில் இப்போது 30-க்கும் மேற்பட்ட நோய்க்கிருமிகள் உள்ளன.
இது இன்ஃப்ளூயன்ஸா A வைரஸ், டெங்கு மற்றும் Mpox போன்ற நன்கு அறியப்பட்ட நோய்களும், அத்துடன் நிபா வைரஸ் போன்ற வளர்ந்து வரும் சுகாதார அச்சுறுத்தல்களும் இடம்பெற்றுள்ளது.
உலக சுகாதார அமைப்பின் இந்த விரிவான மதிப்பீடு உலகளாவிய சுகாதார அச்சுறுத்தல்களின் வளர்ந்து வரும் தன்மையை எடுத்துக்காட்டுவதாகவும், தொடர்ந்து விழிப்புணர்வு மற்றும் தயார்நிலையின் அவசியத்தை வலியுறுத்தும் ஒன்றாகவும் அமைந்துள்ளது.
பட்டியலில் அமெரிக்காவில் பெருமளவில் பரவிவரும் மிகவும் ஆபத்தான H5N1 பறவைக் காய்ச்சலும் இடம்பெற்றுள்ளது. H5N1 வைரஸ் மனிதர்களிடையே பரவுவதற்கு வாய்ப்பு உள்ளதாகவும் அச்சம் தெரிவிக்கப்படுகிறது.
2001-ம் ஆண்டு முதல் இந்தியாவில் பரவி வரும் நிபா வைரஸ், உலக சுகாதார அமைப்பின் புதுப்பிக்கப்பட்ட பட்டியலில் முன்னிலை பெற்றுள்ளது. வெளவால்களிடமிருந்து மனிதர்களுக்கு பரவும் ஜூனோடிக் நோய் எனப்படும் நிபா வைரஸ் நோய்க்கு எதிராக பயனுள்ள சிகிச்சைகள் அல்லது தடுப்பூசிகள் இல்லாததால் குறிப்பிடத்தக்க சவாலாக உள்ளது.
பயனுள்ள சிகிச்சைகள், தடுப்பூசிகள் மற்றும் நோய் கண்டறியும் கருவிகளை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டு நோய்க்கிருமிகளில் அதிகம் பரவும் தன்மை மற்றும் வீரியம் ஆகியவற்றால் வகைப்படுத்தி உலக சுகாதார அமைப்பு பட்டியலை திருத்தியும் புதுப்பித்தும் வருகிறது.