ஒன்றிய பாஜக அரசின் வக்பு வாரிய சட்ட திருத்தத்திற்கு எதிராக பலரும் குரல் எழுப்பி வரும் நிலையில், அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிராக செயல்படுகிறது ஒன்றிய அரசு. சிறுபான்மையினருக்கு அரசியல் சாசனம் வழங்கிய பாதுகாப்பை நேரடியாகவே தகர்க்கிறது என்று கேட்டு தனது எதிர்ப்பினை பதிவு செய்திருக்கும் கனிமொழி எம்.பி.,
’’இஸ்லாமியர்கள் இந்து கோவில்களை நிர்வகிக்க அனுமதிப்பீர்களா?’’ என்ற கேள்வியை எழுப்பி இருக்கிறார்.
இதற்கு வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ., ‘’அப்போது இந்து அறநிலையத்துறை வருமானத்தை இந்துக்களுக்கு மட்டும் செலவழிக்க தமிழக அரசு ஒத்துக்கொள்ளுமா? அரசு எப்படி இந்து அறநிலைய துறையை எவ்வாறு நிர்வகிக்கலாம்! இல்லை என்றால் வாக்பு வாரிய சொத்துக்களை அரசே நிர்வகிக்கட்டும். அதில் உங்களுக்கு உடன்பாடு உள்ளதா? ’’ என்ற கேள்வியை எழுப்பி இருக்கிறார்.
’’இன்று வக்ஃப் சட்ட திருத்தத்தை அறிமுக நிலையிலேயே எதிர்ப்பவர்கள் திருச்சி மாவட்டம் திருச்செந்துரையில் உள்ள 1025ல் ராஜேந்திர சோழனால் கட்டப்பட்ட சிவன் கோவிலை தமிழ்நாடு வக்ஃப் வாரியம் தன்னுடையது என்று உரிமை கொண்டாடியதை ஏன் எதிர்க்கவில்லை. இந்து கோவிலை முஸ்லிம் வக்ஃப் எப்படி கோரலாம்? என்று கேட்கிறார் பாஜகவின் முன்னாள் தேசியச் செயலாளர் எச்.ராஜா.
ஒன்றிய அமைச்சர் கிரண் ரிஜிஜூவும் எதிர்க்கட்சியினரின் விமர்சனங்களுக்கு விளக்கம் அளித்திருக்கிறார். வக்பு திருத்த மசோதா மூலம் எந்த மத அமைப்பின் சுதந்திரத்திலும் தலையிட முடியாது. எதிர்க்கட்சியினர் இஸ்லாமியர்களை தவறாக வழிநடத்துகின்றனர் என்கிறார்.
வக்பு வாரியங்களை மாபியாக்கள் கைப்பற்றி இருக்கிறார்கள். அதனால் வக்பு வாரிய திருத்த மசோதா சரியானதுதான் என்றும், அரசியல் காரணமாக எதிர்க்கும் சில எம்பிக்கள், தன்னிடம் நேரில் ஆதரவு தெரிவித்ததாகவும் விளக்கம் அளித்து வக்பு வாரிய திருத்த மசோதா கொண்டு வந்ததை நியாயப்படுத்தி இருக்கிறார்.