எடப்பாடி பழனிச்சாமிக்கு தமிழில் பிடிக்காத வார்த்தை எது என்றால் அது ‘இணைப்பு’ தான் போலிருக்கிறது. அந்த அளவுக்கு அந்த வார்த்தையைப் பற்றி கேட்டாலே டென்ஷன் ஆகிவிடுகிறாராம்.
தனக்கு எதிராக 25 எம்.எல்.ஏக்கள் உள்ளார்கள் என்ற தகவலைக்கேட்டதும் ஆடிப்போன எடப்பாடி, அவசர அவசரமாக மா.செ.க்கள் கூட்டத்தை கூட்டுவதாக அறிவித்தார். அந்த கூட்டத்தில் பலரும் இணைப்பு பற்றி பேச முடிவெடுத்திருக்கிறார்கள் என்பதை அறிந்ததும் கடுப்பாகி, கூட்டத்தையே ரத்து செய்துவிட்டார்.
அறிவித்த கூட்டத்தை ஏன் ரத்து செய்ய வேண்டும்? என்று பலரும் கேள்வி எழுப்பி குடைச்சல் கொடுத்து வந்த நிலையில்தான் செயற்கூழுவை கூட்டுவதாக அறிவித்திருக்கிறார் எடப்பாடி. எப்படித்தான் எடப்பாடி நழுவி நழுவிப்போனாலும் இணைப்பு பற்றி பேசாமல் விடப்போவில்லை என்று பலரும் உறுதியாக உள்ளார்களாம்.
மா.செ.க்கள் கூட்டத்தில் இணைப்பு பற்றி பேசமுடியாவிட்டாலும் பரவாயில்லை. செயற்குழுவில் ஓபிஎஸ், சசிகலா, தினகரனை கட்சியில் இணைப்பது தொடர்பாக குரல் எழுப்பிவிட வேண்டும் என்று பலரும் தீர்க்கமான முடிவில் இருக்கிறார்களாம்.
செயற்குழுவில் இணைப்பு பற்றி பேசக்கூடாது என்று தனக்கு மிகவும் நெருக்கமானவர்களிடம் பேசி வருகிறாராம் எடப்பாடி. இணைப்பு பற்றி பேசியே ஆகவேண்டும் என்று அதிமுக மாஜி அமைச்சர் ஒருவர் தனது சென்னை வீட்டில் வைத்து பலருடன் ரகசிய ஆலோசனைகள் நடத்தி வருகிறாராம்.
நிலைமை இப்படி இருப்பதால் செயற்குழுவில் அனல் பறக்கும் விவாதங்களும் நடக்கலாம் என்பதாலும், நாற்காலிகள் பறந்தாலும் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை என்பதால் அச்சத்தில் இருகிறது எம்.ஜி.ஆர். மாளிகை.