பொது கணக்கு குழு ஆய்வில் கடந்த அதிமுக ஆட்சியில் நடந்த சிறைத்துறை மெகா ஊழல் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. சிறைச்சாலைகளில் ஜாமர் பொருத்தியதில் பல கோடி ரூபாய் சுருட்டப்பட்டிருப்பதும், கைதிகளுக்கு சிக்கன், முட்டை வாங்கியதில் முறைகேடு நடந்திருப்பதும் கண்டறியப்பட்டுள்ளதால் முன்னாள் டிஜிபி ஜார்ஜ்க்கு சம்மன் அனுப்ப உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த விவகாரம் அதிமுக வட்டாரத்தில் மட்டுமல்லாது தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
சிறை வளாகத்திற்குள் கைதிகள் திருட்டுத்தனமாக செல்போன் பயன்படுத்துவதை தடுக்கும் பொருட்டு ஜாமர் கருவிகள் கொண்டு செயலிழக்கச்செய்யலாம் என்று முடிவெடுத்த சிறைத்துறை, தமிழகத்தின் 9 சிறைகளிள் ஜாமர் கருவிகள் பொருத்த ஒன்றரை கோடி ரூபாய் செலவாகும் என்றும், இத்திட்டத்தை நிறைவேற்ற வேண்டுமென்றும் கடந்த 2006ம் ஆண்டில் அப்போதைய அரசுக்கு கோரிக்கை வைத்திருந்தது சிறைத்துறை.
அப்போது உடனே இந்த திட்டம் நிறைவேற்றப்படாமல் கிடப்பில் போடப்பட்டு இருந்தது. 2017ம் ஆண்டில் சிறைகளில் பாதுகாப்பை பலப்படுத்த வேண்டுமென்று நடவடிக்கை எடுத்தபோது மீண்டும் ஜாமர் கருவி பொருத்துவது தொடர்பான பேச்சுவார்த்தை வந்தபோது அந்த திட்டத்தை நிறைவேற்ற முடிவு செய்து அதன்படி 9 சிறைகளில் ஜாமர் கருவி பொருத்தப்பட்டது என்றும், அதற்காக 10.10 கோடி ரூபாய் செலவிடப்பட்டது என்றும் அப்போதைய அதிமுக ஆட்சியின் சிறைச்சாலைகள் கொள்கை விளக்க குறிப்பில் விபரங்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது தமிழ்நாடு சட்டமன்ற பொது கணக்கு குழு தலைவர் செல்வப்பெருந்தகை தலைமையிலான 6 பேர் கொண்டு குழு சிறைகளில் நடத்திய ஆய்வில் அதிமுக ஆட்சியில் ஜாமர் கருவி பொருத்தியதில் பல கோடி ரூபாய் சுருட்டப்பட்டுள்ளது என்று தெரியவந்துள்ளதால் அப்போது சிறைத்துறை டிஜிபியாக இருந்து ஓய்வு பெற்ற ஜார்க்கு சம்மன் அனுப்ப உத்தரவிட்டுள்ளது இந்த குழு.
இந்த ஊழலை அடுத்து அதிமுக ஆட்சியில் சிறைக்கைதிகளுக்கு சிக்கன், முட்டை வழங்கியதில் நடந்த முறைகேடுகளும் இனி ஆதாரத்துடன் இந்தக்குழு அம்பலப்படுத்த இருக்கிறது.