அதானி குழும நிறுவனங்களில் செபி தலைவர் மாதபி புரி புச் முதலீடு செய்திருப்பதை அமெரிக்காவின் ஹிண்டன்பர்க் நிறுவனம் ஆதாரத்துடன் அம்பலப்படுத்தி இருக்கிறது. இதனால் பங்குச்சந்தையில் பாதிப்பு ஏற்படுமா? என்று பங்கு முதலீட்டாளர்கள் அச்சத்தில் உள்ளனர்.
அதானி குழுமம் பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டிருக்கிறது என்று அமெரிக்காவைச் சேர்ந்த ஹிண்டன்பர்க் நிறுவனம் கடந்த ஆண்டு குற்றம் சாட்டியது. இந்த குற்றச்சாட்டினை செபி அமைப்பு விசாரித்து வந்தது. இந்த விசாரணை நேர்மையாக நடைபெறவில்லை என்று உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதை விசாரித்த உச்சநீதிமன்றம், செபியின் அதிகார வரம்பிற்குள் ஓரளவுக்கு மேல் தலையிடமுடியாது. செபியே இந்த விவகாரத்தை தொடர்ந்து விசாரிக்கும் என்று உத்தரவிட்டது.
இந்நிலையில், ஹிண்டன்பர்க் மீண்டும் ஒரு குற்றச்சாட்டினை தற்போது முன்வைத்துள்ளது. செபி தலைவரும், அவரது கணவரும் அதானி குழும நிறுவனங்களில் பங்கு வைத்திருப்பதை ஆதாரத்துடன் வெளியிட்டுள்ளது.
கடந்த ஆண்டு ஹிண்டன்பர்க் நிறுவனம் வைத்த குற்றச்சாட்டினால் அதானியின் குழும நிறுவனங்களின் பங்குகள் 20%க்கு மேல் சரிவைச் சந்தித்தன. அதாவது 3 லட்சம் கோடி ரூபாய் அதானி குழும பங்குகள் மதிப்பு குறைந்தது. தற்போது செபி தலைவர் – அதானி குழும நிறுவனங்கள் குறித்த தகவல் வெளியாகி உள்ளதால் பங்குச்சந்தையில் பாதிப்பு ஏற்படுமா? என்று பங்கு முதலீட்டாளர்கள் அச்சத்தில் உள்ளனர்.
இவ்வார பங்குச்சந்தையின் போக்கினை அதானி – செபி விவகாரம்தான் தீர்மானிக்கும் என்று பங்குச்சந்தை வட்டாரம் தெரிவிகிறது.