ஆதி திராவிடர் நலத்துறையின் பெயரை சமூக நீதித்துறை என்றோ அல்லது சமத்துவத்துறை என்றோ மாற்ற வேண்டும். இந்த மாற்றத்திற்கு விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவனும் குரல் கொடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகிறார்1996 முதல் 1998 வரை தமிழக ஆதி திராவிடர் நலத்துறை செயலாளராக இருந்த ஓய்வு பெற்ற ஐஏஎஸ் கிறிஸ்துதாஸ் காந்தி.
இந்தியாவில் எந்த மாநிலத்திலும் இல்லாத வகையில் பட்டியலினத் தவர்களுக்கு என்று இருக்கின்ற துறைக்கு, ஆணையத்திற்கு அந்த பட்டியலில் உள்ள ஏதாவது ஒரு இனக்குழுவின் பெயர் சூட்டப்படவில்லை. ஆனால், தமிழ்நாட்டில் மட்டும் ஆதி திராவிடர் என்று பெயர் சூட்டியிருக் கிறார்கள். காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில் அரிஜன நலத்துறை என்று இருந்தது எம்.ஜி.ஆர் ஆட்சிக்காலத்தில் ஆதி திராவிடர் நலத்துறை என்று ஆனது. இந்த துறையின் பெயரை பொதுவானதாக மாற்ற வேண்டும் என்று பள்ளர் சமூகத்தினரை அடுத்து அருந்ததியர்களும் வலியுறுத்தி வருகின்றார்கள் என்கிறார் கிறிஸ்துதாஸ் காந்தி.
இதற்கு விசிக எம்.பி. ரவிக்குமார், ‘’ஆதி திராவிடர் நலத்துறை என்ற பெயரை மாற்ற வேண்டும் என்று சொல்வது ஆதி திராவிடர் என்ற பெயர் எப்படி வந்தது என்பதை அறியாமல் அதை மறுத்துப்பேசும் பேச்சு இது என்கிறார்.
தமிழ்நாட்டில் ஆதி திராவிடர் என்கிற ஒரு சாதி இருந்தது இல்லை. அது ஒரு சாதி கடந்த அடையாளம் என்று சொல்லும் ரவிக்குமார், 100 ஆண்டுகளுக்கு முன்பே ஆதி திராவிடர் பெயரை சக்கிலியர், தேவேந்திரகுலத்தார் ஏற்கவில்லை. இதன் தொடர்ச்சிதான் கிறிஸ்துதாஸ் காந்திக்கு ஏற்பட்டிருக்கும் ஒவ்வாமை என்கிறார்.
7 சாதிகள் கொண்ட அருந்ததியர் என்பதும், 7 சாதிகள் கொண்ட தேவேந்திரகுல வேளாளர் என்பதும் சட்டப்படி 2 தொப்புகளாக உருவாகிவிட்டன. அந்த 14 சாதிகள் போக மீதமிருக்கும் சாதிகளை ஆதி திராவிடர் என்று ஒரே பெயரில் அறிவிக்க வேண்டும் என விசிக சார்பில் தமிழ்நாடு அரசிடம் வலியுறுத்துகிறோம். இதற்கு முதலில் ஆதரவு தெரிவிக்கட்டும் என்கிறார்.