ஒன்றிய இணை அமைச்சர் எல்.முருகன் சொன்னக்கேட்டதும், எஸ்.சி. பட்டியலை மூன்றாக பிரிக்கப்போகிறார்களோ? பாஜகவின் திட்டமாக இருக்குமோ? என்ற அச்சம் ஏற்பட்டிருக்கிறது விசிக எம்.பி. ரவிக்குமாருக்கு.
நாடாளுமன்ற வளாகத்தில் உச்ச நீதிமன்றம் அளித்த அருந்ததியர் உள் ஒதுக்கீடு தீர்ப்பு குறித்த பேச்சு வந்தபோது, ’’ரிசர்வேஷன் கொடுத்து என்ன பிரயோசனம்?’’ என்று விசிக எம்பியிடம் கேட்டிருக்கிறார் ஒன்றிய இணை அமைச்சர் எல்.முருகன். மேலும், ’’ஒதுக்கீடு கொடுத்துவிட்டு தகுதியானவர்கள் இல்லை என்றால் மற்றவர்களை வைத்து நிரப்பிக்கொள்ளுங்கள் என்று ஆர்டர் போட்டுவிட்டார்கள். அப்புறம் ரிசர்வேஷன் கொடுத்து என்ன பிரயோஜனம்?’’ என்று கேட்டிருக்கிறார்.
அதற்கு ரவிக்குமார், ‘’கடந்த 15 ஆண்டுகளில் அருந்ததியர் சமூக மக்கள் உயர் படிப்புகளில் சேர்வதற்கும், வேலையில் சேர்வதற்கும் இட ஒதுக்கீடு பெரிய அளவில் உதவியிருக்கிறதே. அதெப்படி பிரயோஜனம் இல்லாமல் போகும்?’’ என்று கேட்க, ‘’வெறும் 3% தானே கொடுத்திருக்கிறார்கள். 6% கொடுக்க வேண்டும்’’ என்றிருக்கிறார் எல்.முருகன்.
2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி அருந்ததியர் மக்கள் தொகை 2.9%தானே? பின்னர் எப்படி 6% ஒதுக்கிடு வரும்? என்று ரவிக்குமார் கேட்க, ‘’இருக்கின்ற 18%ஐ மூன்றாக பிரித்து அருந்ததியினர் -6%, ஆதி திராவிட -6%, தேவேந்திரகுல வேளாளர் -6% என்று பிரித்து கொடுப்பதுதான் நியாயம்’’ என்று சொல்லி இருக்கிறார்.
அருந்ததியர் -2.9%, தேவேந்திரகுல வேளாளர் -3.4%, ஆதி திராவிடர் பறையர் சேர்த்து -12.71% என்று இருக்கும்போது, எல்.முருகன் இப்படி சொல்கிறார் என்றால், பிரதமர் மோடிக்கு மிகவும் நெருக்கமானவர், ஒன்றிய பாஜக அரசின் கொள்கை முடிவுகளில் செல்வாக்கு செலுத்தக்கூடியவர் இப்படிச் சொல்கிறார் என்றால், அதுதான் பாஜகவின் திட்டமாக இருக்குமோ? என்ற அச்சம் வந்திருக்கிறது ரவிக்குமாருக்கு.
எதிர்காலத்தில் தமிழ்நாட்டில் உள்ள எஸ்.சி. பிரிவினரை மூன்றாக பிரித்து ஒவ்வொரு பிரிவுக்கும் 6% என்று ஒதுக்கீடு செய்துவிடுவார்களோ என்ற அச்சத்தில் உள்ளார் ரவிக்குமார்.