ஒரு யானை தன் சாணத்தின் மூலம் ஒரு நாளைக்கு 300 முதல் 500 விதைகளை விதைக்கின்றது. ஒரு மாதத்திற்கு 3 ஆயிரம் மரங்களை நடுகின்றது. ஒரு வருடத்திற்கு 36,500 மரங்களை நடுகின்றது. தன் வாழ்நாளில் 10 இலட்சத்து 25 ஆயிரம் மரங்கள் வளரக் காரணமாகிறது. யானைகள் காட்டையே உருவாக்குகின்றன. அதனால்தான் காடுகளின் மூத்த தாய் என்று யானைகள் கொண்டாடப்படுகின்றன.
யானைகள் அழிந்தால் காடுகள் அழியும். காடுகள் அழிந்தால் நீர்வளம் குறையும். நீர்வளம் குறைந்தால் விவசாயம் பறிபோகும். இதுதான் பல்லுயிர்ச்சூழல். அதனால்தான் யானைகளை காப்போம்! பல்லுயிர்ச்சூழலை காப்போம்! என்கிறார்கள்.
இந்த மகத்தான விலங்குகளின் முக்கியத்துவத்தைக் கொண்டாடுவதற்காக ஆண்டுதோறும் ஆகஸ்ட் 12 அன்று யானை தினம் அனுசரிக்கப்படுகிறது என்று சொல்லும் அமைச்சர் மனோ தங்கராஜ், ’’சுற்றுச்சூழல் அமைப்புக்கு இன்றியமையாத இந்த கம்பீரமான உயிரினங்களின் பாதுகாப்பு மற்றும் பாதுகாப்பின் அவசியத்தை இந்த நாள் எடுத்துக்காட்டுகிறது.
யானைகள் வாழ்விட இழப்பு, வேட்டையாடுதல் மற்றும் மனித-வனவிலங்கு மோதல் உட்பட பல அச்சுறுத்தல்களை எதிர்கொள்கின்றன. யானைகளின் இயற்கையான வாழ்விடங்களைப் பாதுகாப்பதன் முக்கியத்துவம் மற்றும் நெறிமுறை நடைமுறைகளை ஊக்குவிப்பதற்கான விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக பல்வேறு அமைப்புகள் யானைகள் தினத்தைக் கொண்டாடுகின்றன.
கல்வி நிகழ்வுகள், நிதி திரட்டுதல் மற்றும் அவுட்ரீச் நிகழ்ச்சிகள் ஆகியவை விழிப்புணர்வை வளர்ப்பதற்காகவும், யானைகளின் உயிர்வாழ்விற்கு பங்களிக்கும் செயல்களை ஊக்குவிக்கவும் உலகளவில் நடத்தப்படுகின்றன. யானைகள் தினத்தை கொண்டாடுவது, முக்கியமான சுற்றுச்சூழல் பொறியாளர்களாக அறியப்படும் இந்த நம்பமுடியாத விலங்குகள் நம்முடன் தொடர்ந்து செழித்து வளரும் எதிர்காலத்தை உறுதிப்படுத்த உதவுகிறது’’ என்கிறார்.
இத்தகைய மாபெரும் இயற்கை வளம் மனிதப்பேராசையினால் அழிந்து கொண்டிருக்கிறது என்பது வேதனை.
ஆப்பிரிக்க யானைகள், ஆசிய யானைகள் என்று உலகில் இருவகைப்படுகின்றன யானைகள். ஜிம்பாப்வே, போட்ஸ்வோனா, நமீபியா உள்ளிட்ட நாடுகளில் வசிக்கின்றன ஆப்பிரிக்க யானைகள். இந்தியா, இலஙை, தாய்லாந்து, நேபாளம், இந்தோனேஷியா உள்ளிட்ட 13 நாடுகளில் ஆசிய யானைகள் வசிக்கின்றன. கடந்த 2017ம் ஆண்டின் கணக்கெடுப்பின்படி இந்தியாவில் 29,964 யானைகள் இருப்பது தெரியவந்துள்ளது. அதில் தமிழ்நாட்டில் 2761 யானைகள் உள்ளன.
குறைந்து வரும் யானைகளின் எண்ணிக்கை குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாகவும், காட்டு யானைகளின் வாழ்விடத்தை பாதுகாக்கவும், வளர்ப்பு யானைகள் சுதந்திரமாக வாழ்வதற்கும் வழிவகுக்கின்ற வகையில் ஆண்டுதோறும் ஆகஸ்ட் மாதம் 12ம் தெதி அன்று உலக யானைகள் தினம் கொண்டாடப்படுகிறது.