சிஏஏ சட்ட திருத்தத்தின் படி இலங்கைத் தமிழர்களுக்கு இந்தியாவில் குடியுரிமை இல்லை. ரோஹிங்கியா முஸ்லீம்களுக்கும் இந்தியாவில் குடியுரிமை இல்லை. இந்திய தேசம் வேண்டும் என்று விரும்பும் இவர்களுக்கு குடியுரிமை மறுக்கிறது ஒன்றிய பாஜக அரசு. ஆனால், இந்த தேசம் வேண்டாம் என்று குடியுரிமை துறந்து வெளிநாட்டு குடியுரிமை பெறுவது அதிகரிக்கிறது. இதற்கான காரணம் என்ன என்ற கேள்வி எழுந்திருக்கிறது.
குடியுரிமை துறக்கும் இந்தியர்களின் எண்ணிக்கை ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்துக்கொண்டே செல்கிறது என்கிறது ஒன்றிய அரசு வெளியிட்டிருக்கும் புள்ளி விபரங்கள். ஆண்டுதோறும் சராசரியாக 1 லட்சத்திற்கும் அதிகமானோர் இந்திய குடியுரிமையை உதறிவிட்டு வெளிநாட்டு குடியுரிமையை பெற்று வருகின்றனர். பெரும்பாலும் இங்கிலாந்து, சிங்கப்பூர், ஐக்கிய அரபு அமீரகம் நாடுகளின் குடியுரிமை பெறுவோரின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே செல்கிறது. கடந்த 2023ல் மட்டும் 2.16 லட்சம் இந்தியர்கள் தங்களின் குடியுரிமையை துறந்திருக்கிறார்கள். கடந்த 10 ஆண்டுகளில் இப்படி ஆண்டிற்கு சராசரியாக 1 லட்சம் பேர் இந்திய குடியுரிமையை துறந்திருக்கிறார்கள்.
2011ம் ஆண்டு முதல் 2019ம் ஆண்டு வரையிலும் ஆண்டிற்கு சராசரியாக ஒரு லட்சம் இந்தியர்கள் குடியுரிமையை துறக்கும் நிலை இருந்தது. இது கொரோனா பெருந்தொற்றுக்கு பிறகு மாறிவிட்டது. அதன் பின்னர் சராசரியாக 2 லட்சத்திற்கும் அதிகமானோர் ஆண்டொன்றுக்கு குடியுரிமை துறக்கிறார்கள். ஆண்டிற்கு ஆண்டு இந்த எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே செல்கிறது. 2011ம் ஆண்டி இருந்து 2020 அக்டோர்பர் மாதம் வரையிலான புள்ளி விபரத்தின்படி, 11 ஆண்டுகளில் 16 லட்சத்து 21 ஆயிரத்து 561 இந்தியர்கள் குடியுரிமை துறந்துள்ளனர்.
பொருளாதாரத்தில் உயர்ந்த நிலையில் இருப்பர்கள்தான் இப்படி குடியுரிமையை துறக்கிறார்கள் என்பதால் நாட்டிற்கு பொருளாதார இழப்பு ஏற்படும் என்று பொருளாதார நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். தேசத்தின் நலன் கருதி ஒன்றிய அரசு இதை கட்டுப்படுத்தக்கூடாதா? என்ற கேள்விகள் எழுந்திருக்கின்றன.
கடந்த மூன்று ஆண்டுகளில் மட்டும் 17 ஆயிரம் செல்வந்தர்கள் இந்தியாவை விட்டு வெளியேறி இருக்கிறார்கள் என்று சொல்லும் காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ், படித்தவர்களும், செல்வந்தர்களும், திறமையான தொழிலாளர்களும் இப்படி இந்தியாவை விட்டு வெளியேறினால் நாட்டின் பொருளாதாரம் கடுமையாக பாதிக்கும் என்கிற இருக்கிறது என்று எச்சரிக்கிறார்.
என்ன வளம் இல்லை இந்த திருநாட்டில்? என்ற பாடலுக்கேற்ப எல்லா வளமும் இருக்கிறது இந்தியாவில். அப்படி இருக்கும் போது அறிவு – பணம் கொண்ட மனித வளம் குறைந்துகொண்டே போவது இந்தியாவுக்கு பெரும் ஆபத்தாக முடியும் என்பதும், இதை ஆளும் ஒன்றிய அரசு உணராமல் இருப்பது என்பதும் ஒருபுறமிருக்க, நன்றாக படித்து, வாழ்ந்துவிட்டு வெளிநாட்டுக்கு செல்வோர் நாட்டின் துரோகிகள் என்றும், ஒருநாள் அவர்கள் துரத்தி அடிக்கப்படுவார்கள். அப்போதும் தாய்நாட்டிற்குத்தான் ஓடி வரவேண்டும் என்றும் பலரும் ஆதங்கத்துடன் சொல்லிவருகிறார்கள்.
இந்தியாவில் இருந்து குடியுரிமை துறப்போரின் எண்ணிக்கை இப்படி லட்சங்களில் இருக்க, பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தான் நாடுகளில் இருந்து குடியுரிமை பெறுவோரின் எண்ணிக்கை மிக சொற்பம்தான். கடந்த 2021ம் ஆண்டில் 42 வெளிநாட்டினரே இந்திய குடியுரிமை பெற்றுளனர். 2022ம் ஆண்டில் அக்டோபர் மாதம் வரையிலும் 60 வெளிநாட்டினரே இந்திய குடியுரிமை பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.