கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு முன்னாள் ஐஜி பொன் மாணிக்கவேல் வீட்டில் சிபிஐ மூன்று மணி நேரம் ரெய்டு நடத்தியது. இந்த ரெய்டில் ஏராளமான ஆவணங்களை அதிகாரிகள் கைப்பற்றிச்சென்றுள்ளனர். இதைத்தொடர்ந்து பொன் மாணிக்கவேல் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், நான் சாவதற்கு கடைசி நொடி முன்பு வைரை என்னை போலீஸ் விசாரிக்கும். ஆனால், நான் அப்பழுக்கற்றவன். என்னை கைது செய்வதற்கான சூழ்ச்சி நடக்கிறது என்று கூறினார்.
பொன் மாணிக்கவேல் வீட்டில் சிபிஐ அதிரடி சோதனை நடத்தியதன் பின்னணி என்ன?
2008ல் இருந்து 2011வரை சிலை கடத்தல் பிரிவின் இன்ஸ்பெக்டராக இருந்தவர் காதர் பாட்ஷா. இவர் சிலைகடத்தல் விவகாரத்தில் மிகவும் கறாராக செயல்பட்டு வந்துள்ளார். அரியலூர் மாவட்டம் சுத்தமல்லியில் ஒரு வரதராஜ பெருமாள் கோவிலில் உள்ள சிலைகள் கடத்தப்பட்ட சம்பவத்தில் விசாரணை நடத்திய காதர் பாட்ஷா, சர்வதேச சிலை கடத்தல் மன்னன் பஞ்சாப்பைச் சேர்ந்த சுபாஷ் சந்திர கபூரூக்கு தொடர்பு இருப்பதை கண்டறிந்தார். இந்த விவகாரத்தை இந்திய ஒன்றிய அரசிடம் தெரிவித்து சுபாஷ் சந்திர கபூரை பிடிக்க ரெட் கார்னர் நோட்டீசை வெளியிட வைக்க வழிவகை செய்தார் காதர் பாட்ஷா.
இதனைத்தொடர்ந்து 2011 ஆகஸ்ட்டில் ஜெர்மனியில் உள்ள ஃபிராங்க் ஃபர்ட் விமான நிலையத்தில் சர்வதேச போலீசாரால் கைது செய்யப்பட்டார் சுபாஷ் சந்திர கபூர். ஆனால், சர்வதேச போலீசிடம் இருந்து சுபாஷ் சந்திர கபூரை இந்திய போலீசிடம் ஒப்படைப்பதற்கான கால இடைவெளியில் சிலை கடத்தல் பிரிவில் இருந்து காதர் பாட்ஷா பதவி மாற்றம் செய்யப்பட்டு, திருவள்ளுவர் டிஎஸ்பியாக பொறுப்பேற்கிறார்.
2012ல் சிலை கடத்தல் பிரிவின் ஐஜியாக பொறுப்பேற்றுக்கொண்டார் பொன் மாணிக்கவேல். இந்த நிலையில்தான் சுபாஷ் சந்திர கபூர் இந்தியாவிற்கு கொண்டு வரப்பட்டு சிறையில் அடைக்கப்படுகிறார்.
இதன்பின்னர், சிலை கடத்தலில் ஈடுபட்டார் என்று சர்வதேச சிலை கடத்தல் மன்னன் தீனதயாளனுடன் தொடர்புபடுத்தி, பொன் மாணிக்கவேலினால் கைது செய்யப்படுகிறார் காதர் பாட்ஷா. சஸ்பெண்ட் செய்யப்பட்ட அவர் பின்னர் ஜாமீனில் வெளியே வந்தார். இதன் பின்னணியில் பொன் மாணிக்கவேல் உள்ளார் என்று காதர் பாட்ஷா குற்றம்சாட்டினார்.
தீனதயாளனுக்கு ஆதரவாக இருந்தார் பொன் மாணிக்கவேல். ஆனால் எனக்குக் தொடர்பு இருப்பதாக பொய் சொல்லி என்னை கைது செய்தார் என்று உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார் காதர் பாட்ஷா. இதை சிபிஐ விசாரிக்க உத்தரவிட்டது உயர்நீதிமன்றம்.
இந்த வழக்கு இப்போது சிபிஐ வசம் உள்ளது. தீனதயாளனை தப்பிக்க வைக்க பொன் மாணிக்கவேல் முயற்சி செய்தாரா என்று விசாரணை நடக்கிறது. காதர் பாட்ஷா, பொன் மாணிக்கவேல் மற்றும் மறைந்த தீனதயாளன் ஆகியோரின் வங்கிக்கணக்குகளை ஆய்வு செய்து வருகிறது சிபிஐ.
இந்த வழக்கில் காதர் பாட்ஷா அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில்தான் இப்போது பொன் மாணிக்கவேல் வீட்டில் சிபிஐ ரெய்டு நடந்துள்ளது.
இதற்கிடையில் பேட்டி அளிக்கும்போது பிரதமர் மோடியை புகழ்ந்து பேசுவதும், ஓய்வு பெற்ற நிலையில் இருக்கும் பொன் மாணிக்கவேல் மீண்டும் சிலை கடத்தலை துப்பறிவேன் என்றும் சொன்னதும், அவர் பாஜகவுக்கு செல்வாரோ என்று பேச்சு எழக்காரணமானது. ஆனால், பாஜக பக்கம் செல்லப்போவதில்லை என்று மறுத்திருக்கிறார் பொன் மாணிக்கவேல்.
காதர்பாட்ஷா – பொன் மாணிக்கவேல் விவகாரத்தில் என்ன நடந்தது என்பது சிபிஐ விசாரணையின் முடிவில்தான் தெரியவரும்.