சேலம், மதுரை, திருச்சி, கடலூரில் நடந்த முயற்சிகள் எல்லாம் பலனளிக்காமல் போனதால் கடைசியாக விக்கிரவாண்டியில் தவெக மாநாடு நடத்துவது என்று முடிவாகி இருக்கிறது.
இதற்காக 200 ஏக்கரில் விக்கிரவாண்டியில் டோல்கேட் அருகே இடம் தேர்வு செய்யப்பட்டு செப்டம்பர் மாதம் 30ம் தேதி வரையிலும் அந்த இடத்திற்கு வாடகை ஒப்பந்தம் செய்யப்பட்டிருக்கிறது. செப்டம்பர் 22ல் மாநாடு நடைபெறுவதால் 30ம் தேதி வரையிலும் ஒப்பந்தம் போடப்பட்டிருக்கிறது.
விஜய்க்கும் தவெகவுக்கும் ஆஸ்தான ஜோதிடராக இருக்கும் கடலூர் சந்திரசேகர்தான் மாநாட்டிற்காக தேதியினையும் குறித்துக் கொடுத்திருக்கிறார்.
தமிழ்நாடு மட்டுமல்லாது வெளிமாநில, வெளிநாட்டில் இருந்தும் முக்கிய பிரமுகர்கள் பலரும் இந்த மாநாட்டில் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டு அதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. புதுச்சேரி, கேரளா, கர்நாடகா, ஆந்திரா ஆகிய 4 மாநில முதல்வர்களுக்கு சிறப்பு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
மாநாட்டை முன்னிட்டு கட்சிக்கொடி, கொள்கைகள், தீர்மானங்கள் தயாராகி வரும் நிலையில், தவெகவில் இணைய திமுக, அதிமுக, காங்கிரஸ், பாஜக, பாமக, நாதக, தேமுதிக என்று பல கட்சியில் இருந்து முக்கிய நிர்வாகிகள் பலரும் முயன்றுவந்தாலும், நாதக, தேமுதிக , மதிமுக நிர்வாகிகளை மட்டும் தவெகவில் இணைக்க தயக்கம் காட்டி வருகிறார் விஜய்.
தம்பி என்று உரிமையோடு சீமான் பேசிக்கொண்டிருக்கும்போது அவரின் நிர்வாகிகளை எப்படி தவெகவில் இணைக்க முடியும்? அதே மாதிரி செந்தூரபாண்டி படம் மூலம் திரையுலகில் தனக்கு திருப்புமுனையை ஏற்படுத்திக்கொடுத்த விஜயகாந்தின் தேமுதிக நிர்வாகிகளை தவெகவில் இணைப்பது தேவையில்லாத பொல்லாப்பு என்று நினைக்கிறாராம் விஜய். அதனால் இந்த இரு கட்சி நிர்வாகிகளை தவிர்த்து மற்ற கட்சி நிர்வாகிகளை தவெகவில் இணைக்க ஆலோசித்து வருகிறார்.
தவிர, திமுக – அதிமுக – காங்கிரஸ் கட்சிகளைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர்கள், எம்.எல்.ஏக்கள், எம்.பிக்கள் 12 பேரை தவெகவில் இணைத்துக்கொள்ள விஜய் சம்மதித்திருக்கிறார். இந்த 12 பேரையும் மாநாட்டு மேடையில் ஏற்றவும் முடிவு செய்திருக்கிறார்.