என்ன வேண்டுமானாலும் நடக்கலாம், எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிராக போர்க்கொடி தூக்குவார்கள், எடப்பாடிக்கு எதிராக எஸ்.பி.வேலுமணி ஆதரவாளர்கள் அடிதடியில் இறங்க திட்டமிட்டுள்ளார்கள், எடப்பாடி பழனிச்சாமியை வெளியேறி விடுவார்கள், இல்லை என்றால் தனக்கு எதிராக நிற்பவர்களை வெளியேற்ற முடியாத நிலைக்கு சென்றுவிடுவார் எடப்பாடி என்று அதிமுக அவசர செயற்குழு குறித்து ஒவ்வொரு நாளும் செய்திகள் வந்துகொண்டிருந்தன.
சி.வி.சண்முகம் செயற்குழுவில் ஒரு கலகத்தை ஏற்படுத்துவார். இதற்காக அவர் ரகசிய ஆலோசனைகள் மேற்கொண்டு வருகிறார். எஸ்.பி.வேலுமணியும் செயற்குழுவில் பெரிதாக வெடிப்பார் என்றெல்லாம் செய்திகள் வந்தன.
அதிமுக ஒருங்கிணைப்பாக சசிகலா, ஓபிஎஸ் உள்ளிட்டோர் தொடர்ந்து குரல் கொடுத்து வருகின்றனர்.
கடைசியில் இதுவெல்லாம் இல்லாமல் அதிமுக செயற்குழு முடிந்து, அடுத்து வரும் தேர்தல்களில் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில்தான் நடைபெறும் என்று முடிவாகி இருக்கிறது. எடப்பாடிக்கு சாதகமாகவே இந்த செயற்குழு நடந்து முடிந்திருக்கிறது.
இணைப்பு பற்றி யாரும் பேசாத அளவிற்கு பார்த்துக் கொண்டிருக்கிறார் எடப்பாடி பழனிச்சாமி. சசிகலா, ஓபிஎஸ் இணைப்பு பற்றி பேசவில்லையே தவிர, அதிமுகவில் இருந்து பிரிந்து நிற்கும் மற்ற நிர்வாகிகளை அதிமுகவிற்குள் கொண்டு வர தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செல்வேன் என்று செயற்குழுவில் சொல்லி இருக்கிறார் எடப்பாடி பழனிச்சாமி.
செயற்குழுவிற்கு பின் செய்தியாளர்களிடம் பேசிய செல்லூர் ராஜூ, ‘’சசிகலாவுக்கும் பாஜகவுக்கு அதிமுகவில் இடமில்லை. ஒருங்கிணைப்பு என்ற பேச்சுக்கெல்லாம் இடமில்லை. எடப்பாடி பழனிச்சாமியின் தலைமையில்தான் அடுத்து வரும் தேர்தல்களை சந்திப்போம். 2026ல் எடப்பாடி பழனிச்சாமிதான் முதல்வர் ஆவார். இதை ஆணித்தரமாக சொல்கிறேன்’’ என்கிறார்.
செயற்குழுவிற்கு பின் செய்தியாளர்களிடம் பேசிய வைகைச்செல்வன், ‘’சசிகலா சுற்றுப்பயணம் போவது பற்றி எங்களுக்கு கவலையில்லை. இணைப்பு பற்றியும் செயற்குழுவில் பேசவில்லை. விரைவில் எடப்பாடி பழனிச்சாமி தமிழ்நாடு முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவிருக்கிறார்’’ என்கிறார்.
ஜெயக்குமாரும், ‘’அடுத்து வரும் உள்ளாட்சி தேர்தல், அதற்கடுத்து வரும் 2026 சட்டமன்ற தேர்தல் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில்தான் நடக்கும்’’ என்கிறார்.
இந்த செயற்குழுவில் எப்படியாவது கலகம் பிறக்கும். அதன் மூலம் உள்ளே நுழைந்துவிடலாம் என்று நினைத்திருந்த சசிகலாவுக்கும் ஓபிஎஸ்க்கும் ஏமாற்றம். எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலேயே உள்ளாட்சி மற்றும் சட்டமன்ற தேர்தல்களை சந்திப்போம் என்றும், கூட்டணி பற்றி எடப்பாடி பழனிச்சாமி எடுக்கும் முடிவிற்கு உறுதுணையாக நிற்போம் என்றும் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருக்கிறது.
இதனால் சசிகலா, ஓபிஎஸ் தரப்பு செம கடுப்பில் இருப்பதாக தகவல்.