பாஜகவுடனான கூட்டணி தற்கொலைக்குச் சமம் என்று பேசியிருந்தார் அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூ ராஜூ. இதற்கு பதிலடி கொடுத்த தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, ’’கூட்டணி வேண்டாம், வேண்டும் என்று சொல்லிக் கொண்டிருக்கிறார்கள் என்றால் அவர்களின் பய உணர்வைக்காட்டுகிறது. எங்களை கூட்டணிக்கு அழைக்கிறார்கள் என்றுதான் நினைக்கத்தோன்றுகிறது. நாங்கள் எங்கள் பாதையில் தெளிவாக போய்க்கொண்டிருக்கிறோம்.
திருப்பூர் கூட்டத்தில் அதிமுகவைப்பற்றி அண்ணாமலை பேசிவிட்டதாக சொல்கிறார்கள். அதற்காக எனக்கு பதிலடி கொடுக்க கிளம்பி இருக்கிறார்கள். நாங்கள் அதிமுகவை மறந்து ஒரு வருடம் ஆகிவிட்டது. அவரின் (செல்லூர்ராஜூ) பேச்சும் எனக்கு நகைச்சுவையாகத்தான் தெரிகிறது’’என்றார்.
இதற்கு அதிமுக நிர்வாகி நடிகை விந்தியா, ‘’அண்ணாமலை அதிமுகவை ஞாபகம் வைத்துக்கொள்வதாக இருந்தாலும் அதன்மூலமாக கூட்டணியில் எந்தவொரு மாற்றமும் வரப்போவதில்லை. அதனால் அண்ணாமலையின் அன்பு, ஆதரவு எங்களுக்கு தேவையில்லை. நாடாளுமன்ற தேர்தல் ரிசல்ட்டுக்கு பிறகே அதிமுகவின் பெருமை அவருக்கு தெரிந்திருக்கும்’’ என்று அதிமுக செயற்குழுவிற்கு வந்தபோது செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
’’அவர் எங்களைபற்றி பேசினதால்தான் நாங்கள் அவரைப்பற்றி பேசுகிறோம். அண்ணாமலை விரைவில் மக்களால் மறக்கடிக்கப்படுவார். அதிமுகவுடன் கூட்டணி அமையாமல் போனதால்தான் பாஜக தனிப்பெரும்மையினை இழந்து நிறகிறது. ஒரு நல்ல கூட்டணியை உடைத்ததே அண்ணாமலைதான்’’ என்றார்.