ஒருவனையும் விட்டு வைக்கக்கூடாது என்று முன்னாள் அதிமுக அமைச்சர் விஜயபாஸ்கர் தனது ஆத்திரத்தை வெளிப்படுத்தி இருக்கிறார்.
கொல்கத்தாவின் முதுநிலை மருத்துவக்கல்லூரி பயிற்சி மாணவி பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்ட சம்பவத்தை கண்டித்து நாடு முழுவதும் இன்று மருத்துவர்கள் வேலை நிறுத்தப்போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில், அதிமுக முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் விஜயபாஸ்கர், வன்கொடுமை செய்து கொல்லப்பட்ட முதுநிலை பெண் மருத்துவருக்கு நீதி கேட்டு நாடு முழுவதும் போராடுகிற ஒவ்வொரு மருத்துவரின் குரலும், முழக்கமும் ஓங்கி ஒலித்திட வேண்டும் என்கிறார்.
உயிர் காத்திடும் உன்னத பணியில் தங்களை அர்ப்பணித்துக் கொண்டு சேவை செய்யும் பயிற்சி மருத்துவர்களின் பாதுகாப்பிற்கான சூழலை உருவாக்கித் தரவேண்டியது அரசின் கடமை என்று சொல்லும் விஜயபாஸ்கர், இந்த படுபாதக செயலில் ஈடுப்பட்ட ஒருவனையும் விட்டு வைக்காமல் தண்டனையை பெற்றுத்தரவேண்டும். இனி எங்கும் இப்படி ஒரு சம்பவம் நடக்காத வண்ணம் பாதுகாப்பை உறுதி செய்து தரவேண்டியது ஒன்றிய மற்றும் மாநில அரசுகளின் கடமை என்கிறார்.
இதையடுத்து, இது தொடர்பாக குழு அமைத்து மருத்துவர்களின் பாதுகாப்பு பிரச்சனைகள் குறித்த தகவல்கள் பெறப்படும் என்று உறுதி அளித்திருக்கும் ஒன்றிய சுகாதாரத்துறை, வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மருத்துவர்கள் உடனே பணிக்கு திரும்ப வேண்டும் என்று அழைப்பு விடுத்துள்ளது.