தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதி அவர்களின் நூற்றாண்டு நிறைவு விழாவினையொட்டி மத்திய அரசின் சார்பில் கலைஞர் கருணாநிதியின் உருவம் பொறித்த நாணயம் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் அவர்களால் வெளியிடப்பட்டது.
சென்னை கலைவாணர் அரங்கில் நடந்த இந்த விழாவிற்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையேற்று நடத்தினார். இந்த அரசு விழா என்பது தமிழ்நாட்டு அரசியலில் புதிய புயலை உருவாக்கி இருக்கிறது. நாடாளுமன்றத் தேர்தலில் பாஜகவிற்கு எதிராக ‘இந்தியா’ கூட்டணி என்ற வலியாமை கூட்டணி அமைக்கவும், காங்கிரஸ் மீண்டும் எதிர்க்கட்சி அந்தஸ்தைப் பெறவும் முன்னெடுப்பை மேற்கொண்டவர் திமுக தலைவரான மு.க.ஸ்டாலின். அதன்பிறகே வடமாநிலங்களில் பல கட்சிகள் ‘’இந்தியா’ கூட்டணியில் இணைந்து பாஜகவிற்கு பல மாநிலங்களிலும் கடுமையான போட்டியை உருவாக்கினார்.
உத்தரப்பிரதேசம் போன்ற டபுள் எஞ்சின் சர்க்கார் நடைபெறும் மாநிலங்களில் கூட இந்த முறை பாஜகவால் அதிக அளவில் எம்.பி. சீட்களை பெற முடியவில்லை. பாஜகவிற்கு எதிரான ஒரு கூட்டணி அமைத்து தனிப்பெரும்பான்மை பெற முடியாத அளவில் ஒரு அரசு அமைவதற்கு காரணமாக இருந்தது ‘இந்தியா’கூட்டணியும் அதை முன்னெடுத்த மு.க.ஸ்டாலினும்.
காங்கிரஸ், கம்யூனிஸ்டுகள் உள்ளிட்ட கட்சிகளும் முஸ்லீம் அமைப்புகளும் , தலித் அமைப்பினரும் பங்கெடுத்துள்ள ‘இந்தியா’கூட்டணியில் உள்ள முக்கிய கட்சியான திமுக , பாஜக அமைச்சருடன் சேர்ந்து விழாவில் பங்கேற்கலாமா? என்பதுதான் இப்போது இருக்கக்கூடிய அரசியல் கேள்வி.
கலைஞர் கருணாநிதி உருவம் பொறித்த அந்த நாணயம் வெளியிடப்பட்ட நிகழ்வு குறித்து கூட்டணி கட்சியினரிடம் வெளிப்படையாக அதிருப்திகள் வெளிப்படாவிட்டாலும் சுதந்திர தினத்தன்று ஆளுநர் அளித்த தேநீர் விருந்தில் முதலமைச்சர் என்ற முறையில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினும் , அவருடைய அமைச்சரவை சகாக்களும் கலந்துகொண்டது குறித்து பல்வேறு வியூகங்கள் வெளிப்பட்டு வருகின்றன.
திமுகவின் தோழமைக்கட்சிகள் அனைத்தும் தேநீர் விருந்தை புறக்கணித்த நிலையில், திமுக என்ற கட்சி புறக்கணித்தது. ஆனால், அரசு சார்பில்தான் பங்கேற்றோம் என்கின்ற திமுகவின் அறிவிப்பை விமர்சனத்துடன் அணுகக்கூடிய நிலையைப் பார்க்க முடிகிறது.
எதிர்க்கட்சியான அதிமுகவின் பொதுச்செயலாளர், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி அளித்த பேட்டியில், திமுகவிற்கும் பாஜகவிற்கும் ரகசிய உறவு இருக்கிறது என்ற கருத்தை வெளிப்படுத்தி இருப்பதுடன், கலைஞர் கருணாநிதி உருவம் பொறித்த நாணயத்தில் இந்தி எழுத்துக்கள் எதற்காக இடம்பெற்றன? இதுதான் இவர்களின் இந்தி எதிர்ப்பா? என்றும் கேட்டிருக்கிறார்.
அதற்கு பதிலளித்திருக்கக்கூடிய திமுகவின் துணை பொதுச்செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ஆ.ராசா, ”ரூபாய் நாணயத்தில் ஆங்கிலமும் இந்தியும் இடம்பெறுவது எப்பொழுதும் உள்ள நிலைமைதான். அதேதான் கலைஞர் கருணாநிதியின் நாணயத்திலும் இடம்பெற்றிருக்கிறது.
எம்.ஜி.ஆருக்கு நாணயம் வெளியிடப்பட்டபோதும் இதுதான் இருந்தது என்பதை எடப்பாடி பழனிச்சாமி எப்படி மறந்துபோனார்? ”என்று கேட்டிருப்பதுடன், கலைஞர் கருணாநிதி உருவம் பொறித்த நாணயத்தில் ’தமிழ் வெல்லும்’ என்று அவருடைய கெயெழுத்திலேயே பொறிக்கப்பட்டிருப்பதையும் சுட்டிக்காட்டி இருக்கிறார்.
நாடாளுமன்றத்தில் பாஜகவும் காங்கிரசும் எதிரெதிராக இருந்தபோதும் மாறி மாறி ஆட்சி அமைத்த போதும் பொது நிகழ்வுகளில் வாஜ்பாய் , சோனியாகாந்தி, அத்வானி, கபில்சிபல் என்று இருதரப்பு கட்சிகளும் பங்கெடுத்துக் கொண்டிருக்கிறார்கள்.
இடதுசாரியைச் சேர்ந்தவர்களும் அது போன்ற பொதுவான நிகழ்வுகளில் பங்கெடுத்திருக்கிறார்கள். ஆனால் தமிழ்நாட்டைப் பொறுத்தவரை இது போன்ற ஒரு பொதுவானநிகழ்வுகளில் எதிரெதிர் துருவங்களாக இருக்கக்கூடிய கட்சிகள், அதுவும் கொள்கை முரண்டுபாடு உள்ள கட்சிகள் ஒன்றாக இருந்தால் சர்ச்சைகள் ஏற்படுவது தொடர்கதையாகவே இருக்கிறது.
இது கூட்டணி மாற்றத்திற்கு வழிவகுக்குமா? என்ற கேள்வியையும் தற்போது பரவலாக ஏற்படுத்தி இருப்பதால் சந்தேகங்களை தீர்க்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறது திமுக. இதுதான் நாணய அரசியல்.