திருச்சி எஸ்.பி. வருண்குமாருக்கும் நாம் தமிழர் கட்சிக்கும் இடையேயான மோதல் போக்கு வலுத்து வருகிறது. மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதி குறித்து அவதூறு பரப்பியதாக நாம் தமிழர் கட்சி நிர்வாகி சாட்டை துரைமுருகன் கைது செய்யப்பட்டபோது அவரது செல்போன் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. அந்த செல்போனில் உள்ள வீடியோ ஆடியோக்கள் வெளியாகி நாம் தமிழர் கட்சிக்கு பெரும் பின்னடைவை கொடுத்துள்ளது.
இதற்கு காரணம் வருண்குமார் ஐபிஎஸ்தான் என்று ஆத்திரம் அடைந்த நாம் தமிழர் கட்சியினர் வருண்குமாரையும் அவரது குடும்பத்தினரையும் வலைத்தளங்களில் ஆபாசமாக பேசி அவதூறு செய்வதாக வருண்குமார் தரப்பில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. சம்பந்தப்பட்ட நபர்களும் கைதாகி வருகிறார்கள்.
வருண்குமாரையும் அவரது குடும்பத்தினரையும் அவதூறு செய்தவற்கு என்றே சமூக வலைத்தளத்தில் பக்கங்கள் உருவாக்கப்பட்டுள்ளது. இதைக்கண்டு காங்கிரஸ் எ.பி.ஜோதிமணியும் கொதித்தெழுந்து சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி இருக்கிறார்.
இது குறித்து வருண்குமார், ‘’என் வீட்டில் உள்ள பெண்களையும் என் குழந்தைகளையும் அவதூறாக பேசி, மிரட்டல் விடுத்த நபர்களை விடமாட்டேன். தூண்டிவிட்டவர்களையும் கண்டிப்பாக சட்டத்தின் முன் நிறுத்துவேன். வெளிநாடுகளில் இருந்து ஆபாசமாக பதிவு செய்யும் போலி ஐடிகளையூம் விடப்போவதில்லை. ஆபாத்திற்கும் அவதூறுக்கும் முடிவுரை எழுதுவோம்’’ என்று தனது எக்ஸ் தள பக்கத்தில் குறிப்பிட்டிருந்தார்.
இதையடுத்து வெளிநாட்டில் இருந்து போலி ஐடி மூலம் அவதூறு செய்யும் ஒரு நபரை கண்டறிந்துள்ளார் வருண்குமார். அவர் பெயர் செல்வகாந்தன் என்பதும், சென்னை அண்ணாநகர் வசந்தம் காலனி முகவரியில் போலி பாஸ் பாஸ்போர்ட் எடுத்து கனடாவில் வேலை பார்த்து வருகிறார் என்கிற விபரங்கள் தெரியவந்துள்ளன.
அதனால், ‘’விரைவில் இவனும் இவனது முதலாளியும் இவர்கள் செய்த, செய்கின்ற குற்றத்திற்கு பிடிபடுவார்கள்.’’ என்று பதிவிட்டிருக்கிறார்.
இது குறித்து செய்தியாளர்களின் கேள்விக்கு, ‘’அது போலி பேக் ஐடி. அவர்களே அந்த பேக் ஐடியை உருவாக்கி விட்டு நாம் தமிழர் கட்சி மீது பலி போடுகிறார்கள். எங்கள் பிள்ளைகளுக்கு அந்த வேலை கிடையாது. அவர்கள் அப்படி செய்ய மாட்டார்கள். அப்படி செய்தவர்களை உடனுக்குடன் கட்சியை விட்டு நீக்கி இருக்கிறேன்.
நான் சொல்லித்தான் என் தம்பிகள் அவதூறு செய்கிறார்கள் என்கிறார்கள். நான் அப்படிச் சொல்வதில்லை. நீங்கள் கண்ணியமற்று 100 எழுதும்போது சகித்துக் கொள்கிறோம். என்னை பற்றி கூட பரவாயில்லை. என் தாயைப்பற்றியும், என் மனைவியைப் பற்றியும் எவ்வளவோ அவதூறு பரப்புகிறார்கள். இவர்கள் சொல்லித்தான் பரப்புகிறார்கள் என்று நான் சொல்ல வேண்டுமா?’’ என்று கேட்டவர், ‘’எத்தனையோ வழக்குகளை பார்த்துள்ளோம்’’ என்று சொல்லி சிரித்துவிட்டு அந்தக் கேள்வியைக் கடந்தார்.