பா.ரஞ்சித்துக்கு பதில் சொல்லும் விதமாக பலர் பேசினாலும் பாமகவையும் நாதகவையும் கடுமையாக சிலர் விமர்சித்ததே பரபரப்புக்குள்ளாகி இருக்கிறது.
சென்னையில் காமராஜர் அரங்கத்தில் நடந்த விசிக தலைவர் திருமாவளவனின் பிறந்தநாள் விழாவில் பேசிய வழக்கறிஞர் சினேகா, பாமகவையும் நாம் தமிழர் கட்சியையும் ஒரு பிடி பிடித்தார்.
’’தமிழகத்தின் நவீன கோமாளி. இவர் மேடை ஏறி சிரித்தால் கேட்கும் தம்பி எல்லாம் ஏமாளி. இந்த நூற்றாண்டின் மகத்தான போராளி பிரபாகரனை ஆமை சமைப்பவராய் அவமதிக்கும் இவரு தமிழகத்தின் ஆர்.எஸ்.எஸ்.-ன் பிசிறு! ஒரு நாள் பெரியாரின் பேரன் என்பார். மறுநாள் என் முப்பாட்டன் முருகன் என்பார். திராவிடத்தால் வீழ்ந்தோம் உறவே..என்பார். அயலக தமிழரிடம் திரள் நிதி வாங்கி திண்பார். இவர் திராவிடத்தை அழிக்க ஆரியம் அனுப்பிய விஷக்குப்பி. தமிழகமே நாளை விரட்டும் முகத்தில் காரி துப்பி’’ என்று நாதக தலைமை ஒருங்கிணைப்பாளரை கடுமையாக விமர்சித்தார்.
அடுத்து பாமக நிறுவனர் ராமதாசை, ’’செங்கோல் பிடித்து ஆண்ட பரம்பறை என அடித்தொண்டையில் கத்துவார். மறுபக்கம் உள் ஒதுக்கீடு வேண்டும் என்று அரசின் கால்பிடித்து சுற்றுவார். கொள்கை ஏதுமில்லா சாதி வெறி பிடித்த கிறுக்கு. அரசியல் அதிகாரம் ஒன்றே அதன் இலக்கு. தேர்தலுக்கு தேர்தல் கூட்டணி மாறும். பச்சோந்தியே அவர்களைப்பார்த்தால் நாணும். அழுகிய பழம் எறிந்து பானை உடையுமா? ஆளப்பிறந்தவர்தான் எங்கள் திருமா!’’ என்று சொல்லி கடுமையாக விமர்சித்தார்.
சினேகா பேசப்பேச அதற்கு எதிர்ப்பேதும் தெரிவிக்காமல் அவர் பேசுவதைக்கேட்டு ரசித்துக்கொண்டிருந்த திருமா மீது பாமகவினரும் நாதகவினரும் அதிருப்தி அடைந்துள்ளனர். சமூக வலைத்தளங்களில் அவர் தங்களது எதிர்ப்பினை தெரிவித்து வருகின்றனர்.
நாதக நிர்வாகி இடும்பாவனம் கார்த்திக், ‘’பாமகவையும், விசிகவையும் விமர்சிக்க கூடாது என்று அண்ணன் சீமான் எங்களுக்கு சொல்லி இருக்கிறார். குறிப்பாக மருத்துவர் ராமதாஸ் அய்யாவையும், திருமா அண்ணனையும் விமர்சிக்க கூடாது என்று அறிவுறுத்தி இருக்கிறார். வன்னியரசு உள்ளிட்டோர் நாதகவை பற்றி விமர்சிக்கும் போதும் அதற்கு எதிர்வினை ஆற்றக்கூடாது என்று சொல்லி இருக்கிறார் அண்ணன் சீமான்.
நாடாளுமன்றத் தேர்தலில் சிதம்பரம் தொகுதியில் திருமா அண்ணன் போட்டியிட்ட போதும், கடலூரில் ரவிக்குமார் போட்டியிட்டபோதும் அந்த தொகுதிகளில் விசிகவை விமர்சித்து பிரச்சாரம் செய்யக்கூடாது என்று கேட்டுக்கொண்டார். நாங்களும் அப்படியே செய்தோம். நாம் தமிழர் அனைவரும் திருமாவை அண்ணனாகவே நினைத்துக் கொண்டிருக்கிறோம். ஆனால், அவர் எங்களை தம்பிகளாக நினைக்கவில்லையா?
நாம் தமிழர் கட்சியையும் அண்ணன் சீமானையும் பற்றி சினேகா பேசும்போது அதை எதிர்க்காமல், கேட்டு சிரித்துக்கொண்டிருந்தபோது எங்கள் மனது வலித்தது’’என்று சொல்லி இருக்கும் அவர், ‘’எங்களுக்கு நீங்கள் அண்ணன் இல்லை? இத்தனை நாளும் நாங்கள்தான் உங்களை தவறாக நினைத்துவிட்டோமா?’’ என்று திருமாவைப்பார்த்து கேட்கிறார்.