தங்களது ஒரே மகளை இழந்துவிட்டதால் அதிர்ச்சியிலும் மன வேதனையிலும் இருக்கும் கொல்கத்தா பெண் மருத்துவரின் தந்தை, மகளின் கொலை குற்றத்தில் மருத்துவ துறையைச் சேர்ந்த சிலருக்கு தொடர்பு இருப்பதாக சந்தேகிக்கிறோம் என்று கண்ணீருடன் தெரிவித்திருக்கிறார்.
கொல்கத்தா ஆர்.ஜி.கர். மருத்துவமனையில் கடந்த 9ம்தேதி அன்று பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருக்கின்றன. மருத்துவர்களும், மருத்துவ மாணவர்களும் என நாடு முழுவதும் இந்த சம்பவத்திற்கு நீதி கேட்டு போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் தன் மகள் மரணத்தில் மேற்கு வங்க மாநில முதல்வர் மம்தாவின் நடவடிக்கையில் திருப்தி இல்லை என்கிறார் தந்தை. ‘’என் மகளுக்கு நீதி வழங்குவேன் என்று சொல்லும் முதல்வர் மம்தா, என் மகளுக்காக நீதி கேட்டு போராடும் சாமானிய மக்களை ஏன் சிறைக்கு அனுப்புகிறார்? அதனால் அவரின் நடவடிக்கையில் தங்களுக்கு திருப்தி இல்லை என்கிறார்.
பெண் மருத்துவரின் உடல் பிரேத பரிசோதனை முடிந்து உடனடியாக தகனம் செய்யப்பட்டதால், ஆதாரங்களை அழிக்கும் நோக்கம் உள்ளதா என்று சந்தேகம் உள்ளது என்கிறார் மருத்துவரின் தந்தை. தகனம் செய்யப்பட்ட இடத்தில் மொத்தம் 3 உடல்கள் தகனம் செய்வதற்காக இருந்த நிலையில் தன் மகள் உடலை மட்டும் ஏன் அவசர அவசராம தகனம் செய்தார்கள்? என்ற சந்தேகத்தை எழுப்புகிறார். அந்த நேரத்தில் மகளை இழந்த துக்கத்தில் இருந்ததால் இதுபற்றி எல்லாம் யோசிக்கவில்லை என்கிறார்.
என் மகளின் கொலைக்கு இந்த கொல்கத்தா மருத்துவறைதான் காரணம். இந்த குற்றத்தில் அந்த துறையைச் சேர்ந்த சிலருக்கு தொடர்பு இருக்கிறது என்று சந்தேகிக்கிறோம் என்று சொல்லும் அவர், இந்த இக்கட்டான சூழலில் தங்கள் குடும்பத்திற்கு ஆதரவாக இருக்கும் அனைவரையும் தங்கள் மகளாகவும், மகன்களாகவும் பாவிக்கிறோம் என்று கண்ணீர் வடிக்கிறார்.