செந்தூரபாண்டி படத்தில் நடித்து விஜய்யின் திரையுலக வாழ்க்கையில் திருப்புமுனையை ஏற்படுத்தினார் அப்போது முன்னணி நடிகராக இருந்த விஜயகாந்த். இதற்கு பிரதிபலனாக விஜயகாந்த் மகன் சண்முகபாண்டியன் படத்தில் விஜய்யை நடிக்க வைக்க முயற்சிகள் நடந்தன. இது எதுவும் நடைபெறவில்லை. இதனால் விஜயகாந்த் குடும்பத்தினர் கடும் அதிருப்தியில் இருந்தனர்.
விஜயகாந்த் மறைவின் போது சண்முகபாண்டினுக்கு ஏதாவது செய்வதாக உறுதி அளித்திருந்தார் விஜய். இதற்கிடையில் தான் நடிக்கும் கோட் படத்தில் விஜயகாந்தை புதிய தொழில்நுட்பத்தில் நடிக்க வைத்துள்ளனர். இதற்கு தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா அனுமதி கொடுத்திருந்தார்.
இந்நிலையில் கோட் படம் அடுத்த மாதம் திரைக்கு வரவிருக்கும் நிலையில், விஜய்யும், படக்குழுவினரும் பிரேமலதாவை நேரில் சந்தித்து பேசி இருக்கிறார்கள். அப்போது கோட் படத்தில் விஜய் வரும் காட்சிகளை விளக்கி இருக்கிறார்கள்.
இந்த சந்திப்பின்போது விஜயகாந்த் மகன்களிடம் நீண்ட நேரம் பேசி இருக்கிறார் விஜய். இதனால் தனது அடுத்த படத்தில் சண்முகபாண்டியனை நடிக்க வைப்பதாக வாக்குறுதி அளித்திருக்கிறார் விஜய் என்றும், தவெகவுடன் தேமுதிக எதிர்காலத்தில் இணைய வாய்ப்புண்டு என்றும் தகவல் பரவுகின்றன.