தமிழக வெற்றிக்கழகத்தின் கொடியை அறிமுகப்படுத்திய விஜய், கட்சியின் பாடலையும் வெளியிட்டார். இந்த கட்சிக்கொடியின் பின்னால் ஒரு வரலாறு இருக்கிறது என்று சொன்ன விஜய், அந்த வரலாறு பற்றி கட்சியின் முதல் மாநில மாநாட்டில் சொல்வதாக கூறியிருக்கிறார்.
கட்சிக்கொடி அறிமுக விழாவில் விஜய்யின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர், தாயார் ஷோபா சந்திரசேகர் இருவரும் பங்கேற்றனர்.
விஜய் தவெக கொடி அறிமுகம் செய்தது குறித்து ஷோபா சந்திரசேகர் கவிதை வடிவில் வாழ்த்து தெரிவித்திருக்கிறார்.
’’ஒரு தாயின் தொப்புள் கொடி உறவு தம் மக்கள். அப்படி எனக்கு என் மகன் விஜய். அவர் தம் மக்களுக்காக துவங்கி இருக்கும் கட்சிக்கான கொடியை அறிமுகப்படுத்தும் விழா என்பது மனதில் குதூகல ஒளி பட்டொளி வீசி பட படவென்று பறக்கிறது பரவசத்தில்.
பரவசம் சரி, அது என்ன.. படபடவென்று…? நாட்டுக்கே ராஜாவானலும் தாய்க்கு பிள்ளைதானே? சினிமாவில் உயர்ந்த அந்தஸ்தில் ஆட்சி புரிகிறார் என்பதே அளவிட முடியாத ஆனந்தம் எனக்கு. விஜய் எதையுமே அமைதியாக உள்வாங்கி ஆர்ப்பரிப்பில்லாமல் ஆக்கப்பூர்வமாக வெளிப்படுத்தத் தெரிந்த பிள்ளை. அமைதியில் அவர் ஒரு கடல். சான்றோன் என கேட்ட தாய் வள்ளுவன் வாக்கை ஏற்கனவே விஜய் எனக்கு பெற்றுத்தந்திருக்கிறார்.
பெயரிலேயே வெற்றி கண்ட நீ கட்சியின் பெயரிலும் வெற்றியை வைத்திருக்கிறாய். திரையில் உன் முகம் பார்த்து உயர்த்திய மக்களுக்கு தரையில் நடந்து வந்து ஏதேனும் செய். பசித்தோர் முகம் பார். மக்களை தேடிச்சென்று நேரில் சந்தி! தொடு!அணை! கட்டிப்பிடி! அவர்களின் குறைகளை காதுகொடுத்துக்கேள்! அவர்களில் ஒருவனாகு.
தமிழ்மொழியின் பாரம்பரியம் போற்று. பெண்ணியம் காப்பாற்று. மக்களுக்கு புரட்சிகர திட்டங்கள் தீட்டு. உன் அரசியல் பயணம் பணம் தாண்டிய லட்சியம் என்பதை ஊரே பாராட்டும்போது உள்ளம் நெகிழ்கிறேன். கயிற்றில் ஏறி கம்பத்தில் உயர்ந்தி காற்றில் விரிந்து மலர்கள் பொழிந்து வானில் பறக்கும் உன் கொடி. உன் அரசியல் வெற்றிக்கு இதுவே முதல் படி. எண்ணியதெல்லாம் நல்லபடி முடி.
உன் நண்பா நண்பிகளின் நம்பிக்கை நீ. உன் கழகத்தின் முதல் தொண்டன் நீ. இப்போது போல் எப்போதும் உண்மையாக இரு. வாகை சூடு விஜய். உன்னை வாழ்த்தி தமிழக வெற்றிக்கழகத்திற்கு வாக்களிக்க காத்திருக்கும் தாய்மார்களில் ஒருத்தி.
ஏற்கனவே நான் ஒரு சி.எம். Celebrity Mother. இனி நானும் ஒரு பி.எம். Proud Mother. ’’