போலி என்.சி.சி. முகாம் நடத்தி கிருஷ்ணகிரியில் தனியார் பள்ளி மாணவிகளை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் கைதான நாம் தமிழர் கட்சியின் முன்னாள் நிர்வாகி சிவராமன், எலி பேஸ்ட் தின்றதால் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த நிலையில், அவரது தந்தை சாலை விபத்தில் உயிரிழந்த நிலையில், இந்த மரணங்களின் பின்னணியில் யாரோ இருக்கிறார்கள். அவர்களை காப்பாற்ற இவர்கள் கொல்லப்பட்டிருக்கிறார்கள் என்று எடப்பாடி பழனிச்சாமி, அண்ணாமலை உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் குற்றம்சாட்டி வருகின்றனர்.
ஆனால், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானோ இதை மறுக்கிறார்.
’’சிவராமன் மரணத்தில் எங்களுக்கு சந்தேகம் இல்லை. அவர் குற்றச்செயலில் ஈடுபட்டுள்ளார் என்று தெரிந்ததுமே அவரை போலீசில் பிடித்துக்கொடுத்ததே நாம் தமிழர் பிள்ளைகள்தான். தான் செய்த தவற்றுக்கு வருந்தி அவரே தற்கொலை செய்துகொண்டுவிட்டார். அவரது தந்தை விபத்தில் இறந்துவிட்டார். இதில் எங்களுக்கு எந்த சந்தேகமும் இல்லை. இதன் பின்னணியிலும் யாரும் இல்லை.
தவறு செய்ததும், நான் சாகப்போகிறேன்; என்னை மன்னித்து விடுங்கள் என்று எனக்கு வருத்தக்கடிதம் எழுதி இருந்தார் சிவராமன். அதை தம்பிகளிடம் கொடுத்து விசாரிக்க சொன்னேன். தான் செய்தது தவறு என்பதால் அவர் தற்கொலை முடிவை எடுத்துள்ளார். இது தற்கொலைதான். அதனால்தான் நாங்கள் எந்த எதிர்ப்பும் தெரிவிக்கவில்லை’’ என்கிறார்.