ரஜினி பேச்சு என்றாலே அது சர்ச்சைகளையும் சலசலப்புகளையும் ஏற்படுத்தி விடும் என்பது வழக்கம்தான். அப்படித்தான் ’கலைஞர் எனும் தாய்’நூல் வெளியீட்டு விழாவில் ரஜினி பேசியது சலசலப்புகளை ஏற்படுத்தி விட்டது.
அவ்விழாவில் பேசிய ரஜினி, ’’டீச்சருக்கு புதிய மாணவர்களை கையாளவது ரொம்ப எளிது. பழைய மாணவர்களை கையாளவதுதான் ரொம்ப கடினம். இங்கே(திமுக) நிறைய பழைய மாணவர்கள் இருக்கிறார்கள். இவர்கள் எல்லாம் பெயில் ஆனவர்கள் இல்லை. தேர்ச்சி பெற்று நல்ல ரேங்க் எடுத்தவர்கள். இந்த வகுப்பறையை விட்டு போக மாட்டேன் என்கிறார்கள். அதிலும் துரைமுருகன்னு ஒருத்தர் இருக்கார். அவர் கலைஞர் கண்ணிலேயே விரலை விட்டு ஆட்டியவர். இவர்களை வைத்து சமாளித்த முதல்வருக்கு தலைவணங்குகிறேன்’’ என்றார்.
ரஜினியின் இந்த பேச்சைக்கேட்டு முதல்வர் மு.க.ஸ்டாலின், அமைச்சர் உதயநிதி உள்பட அரங்கமே சிரித்து, கைதட்டி ஆரவாரித்தது.
மூத்த அமைச்சர்களை வைத்து முதல்வர் மு.க.ஸ்டாலின் சிரமப்படுகிறார் என்று பேசிய ரஜினிய கருத்து குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்ப, ‘’மூத்த நடிகர்கள் எல்லாம் வயதாகிப்போய், பல் விழுந்து, தாடி வளர்த்து சாகுற நிலையில இருக்குவன் எல்லாம் நடிக்கிறான். இதனால் இளைஞர்கள் நடிக்க வாய்ப்பில்லாமல் இருக்கிறார்கள்’’என்று சீறிப்பாய்ந்தார்.
ரஜினியின் பேச்சுக்கு துரைமுருகன் இவ்வாறு ஆவேச பாய்ச்சலை காட்டிய நிலையில், ரஜினியின் பேச்சை மேற்காள் காட்டி திமுக இளைஞர் அணி கூட்டத்தில் பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், ’’இளைஞர்கள் நம்ம பக்க வருவதற்கு தயாராக இருக்கிறார்கள். நாம்தான் அவர்களுக்கு வழிவிட்டு, கைப்பிடித்து வழிநடத்திச் செல்ல வேண்டும். சூப்பர் ஸ்டார் ரஜினி இதுகுறித்து பேசிய பேச்சுக்குத்தான் அதிக கைத்தட்டல் எழுந்தது. நான் அதுபற்றி எதுவும் சொல்லக்கூடாது. ஏன் என்றால், மனதில் வைத்துக்கொண்டு பேசுகிறேன் என்று சொல்லிவிடுவார்கள்’’ என்றார்.
ரஜினி vs துரைமுருகன் விவகாரம் சலசலப்புகளை ஏற்படுத்திய நிலையில், சென்னை விமான நிலையத்தில் ரஜினியை சந்தித்த செய்தியாளர்கள், துரைமுருகன் பதிலடி குறித்து கேட்க, ‘’அமைச்சர் துரைமுருகன் எனது நீண்டகால நண்பர். அவரை எனக்கு ரொம்ப பிடிக்கும். அவர் என்ன சொன்னாலும் எனக்கு பிடிக்கும். அவர் சொன்னதில் எனக்கு வருத்தம் கிடையாது. அவருடனான நட்பு தொடரும்’’ என்று சொல்லி சமாதானக்கொடியை பறக்கவிட்டுள்ளார்.
‘’நானும் ரஜினியும் எப்போதும் நண்பர்களாகவே இருப்போம். ரஜினி குறித்து நான் கூறியது நகைச்சுவைதானே தவிர; பகைச்சுவை அல்ல’’ என்று அமைச்சர் துரைமுருகனும் வேலூரில் செய்தியாளர்களிடம் பேசும்போது சமாதானக்கொடியை ஏற்றி இருக்கிறார்.