எடப்பாடி பழனிச்சாமிக்கும் அண்ணாமலைக்குமான மோதல் நாளுக்கு நாள் வலுத்துக்கொண்டே செல்கிறது.
‘’நான் முதலமைச்சராக இருந்தபோது எம்.ஜி.ஆரின் நூற்றாண்டை முன்னிட்டு அவருக்கு நாணயத்தை வெளியிட்டேன். இதை அண்ணாமலை விமர்சித்திருப்பது சிறுபிள்ளைத்தனமானது. வரலாறு தெரியாமால் பேசுகிறார் அண்ணாமலை. நீ பிறப்பதற்கு முன்பாகவே ஆட்சியில் அமர்ந்தவர் எங்கள் தலைவர் எம்.ஜி.ஆர். அப்போதெல்லாம் உங்கள் தலைவர்கள் எந்த பதவியிலும் இல்லை. அண்ணாமலை பேசுவது எல்லாம் பொய். அனைத்து தலைவர்களும் உழைத்து பதவிக்கு வந்தவர்கள். அண்ணாமலை ஒருவர் மட்டும்தான் உழைக்காமல் பதவிக்கு வந்தவர். பதவி கிடைத்தவுடன் தலை,கால் புரியாமல் ஆட்சிக்கொண்டு வருகிறார். மைக்கை கண்டாலே பேசும் வியாதி அண்ணாமலைக்கு உள்ளது. அவருக்கு வாயும் நாக்கும்தான் முதலீடு’’ என்று கடுமையாக விளாசி எடுத்திருந்தார் எடப்பாடி.
இதற்கு பதிலடி கொடுத்த அண்ணாமலை, ‘’ அன்றைய அமைச்சர் ஒருவரின் துணையால் கொலை வழக்கிலிருந்து தப்பித்தவர், எனக்கு நேர்மை, நியாயம் குறித்துப் பாடம் நடத்த வேண்டாம். எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோரின் கட்சியை, கூவத்தூரில் எடப்பாடி பழனிசாமி நடத்திய விதம், அலங்கோலம் என்பதை அவரால் மறைக்க முடியாது. சட்டமன்ற உறுப்பினர்களுக்குப் பணம் கொடுத்து, காலில் விழுந்து பதவி வாங்கிய அவருக்கு, காவல்துறையில் நேர்மையாகப் பணி செய்த விவசாயியின் மகனான என்னைப் பற்றிப் பேச என்ன தகுதி இருக்கிறது? வரும் 2026 தேர்தலில், எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுகவுக்கு நான்காவது இடம் கூடக் கிடைக்காது’’என்று கடுமை காட்டி இருந்தார்.
இதையடுத்து செல்லும் இடங்களில் எல்லாம் கருப்புக்கொடி காட்டுவோம் என்று அண்ணாமலைக்கு எச்சரிக்கை விடுத்து போஸ்டர்கள் அடித்துள்ளனர் அதிமுகவினர்.
எடப்பாடி குறித்து அண்ணாமலை விமர்சனம் செய்ததற்கு, ‘’மாநிலத்தலைவருக்கு கருத்து சொல்ல உரிமை உள்ளது. ஆனால், கடும்சொற்கள் கூடாது’’ என்று முன்னாள் பாஜக தலைவர் தமிழிசை கூறியிருக்கிறார்.
இந்நிலையில், ’’அண்ணாமலை தாந்தோன்றித்தனமாக பேசி வருகிறார். அவரைப்போல பரிந்துரையால் கட்சிக்கு வரவில்லை. அடுத்த தேர்தலில் அதிமுக 4வது இடத்திற்கு செல்லும் என்ற அண்ணாமலையின் கனவு பலிக்காது’’ என்று அதிமுக முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமி பதிலடி கொடுத்திருந்தார்.
அவர் மேலும், ‘’தலைமை பொறுப்பும் நமக்கு தொடர்ந்து இருக்காது. இருக்கின்ற வரையில் எதையாவது சொல்லி விட்டு செல்லலாம் என்று அண்ணாமலை பேசிக்கொண்டிருக்கிறார். நிச்சயமாக தலைமை உணர்ந்து விரைவில் அவர் மாநில தலைவர் பதவியில் இருந்து வெளியேற்றப்படுவார். அவரை எப்படி வெளியேற்றுவது என்று கட்சி யோசித்துக் கொண்டிருக்கையில் லண்டனுக்கு படிக்கச்செல்கிறேன் என்று சொல்லி ஏமாற்றிக் கொண்டிருக்கிறார்’’ என்று கடுமையாக தாக்கி இருக்கிறார்.