சட்டம் ஒழுங்கை சீரழிக்க சீமான் சதி வேலை செய்வதாக குற்றம்சாட்டியிருக்கும் விசிகவின் துணை பொதுச்செயலாளர் வன்னிஅரசு, இந்த உளறலை எளிதில் கடந்து போககூடாது என்றும் காவல்துறையை எச்சரித்திருக்கிறார்.
திருச்சி எஸ்.பி. வருண்குமாருக்கும் நாம் தமிழர் கட்சிக்கும் இடையேயான பிரச்சனையில், காக்கிச்சட்டயை கழற்றி வைத்துவிட்டு வாருங்கள் என்று சவால் விடுத்திருந்தார் சீமான்.
இதற்கு, ‘’நான் காக்கிச் சட்டையில் இருப்பது அவ்வளவு பயமோ?’ என்று கேட்டிருக்கும் வருண்குமார், ’’ சிலரைப்போல பிச்சை எடுத்து வந்தது அல்ல இந்தப்பதவி. பிச்சை எடுப்பது, பெண்களை ஆபாசமாக பேசுவது, நில அபகரிப்பு, ரவுடித்தனம் செய்வதை எல்லாம் சிலர் நிறுத்தினால் நான் காக்கி சட்டையை கழற்றுவது பற்றி யோசிக்கிறேன்’’என்றார்.
இதற்கு சீமான், ’’திருச்சி எஸ்.பி. வருண்குமார் ஐபிஎஸ் வேலையை மட்டும் பார்க்கட்டும். அதை விட்டுவிட்டு கட்சி வேலை எல்லாம் பார்க்கக்கூடாது. உங்க மனைவியை மட்டும்தான் எழுதுகிறார்களா? என் தாய், மனைவி பற்றியும்தான் எழுதுகிறார்கள். உங்கள் குடும்பத்திற்கு இப்படி நடந்தால்தான் தெரியும். அவரவர்க்கு வலித்தால்தான் தெரியும்.
உங்களைப்பற்றி எழுதுபவன் எல்லாம் என் ஆள் என்று சொன்னால் எப்படி? எங்கள் செல்போனில் இருந்தஆடியோக்களை எல்லாம் எடுத்து வெளியிட்டது எப்படி நியாயம்? இதே மாதிரி அனைத்து தலைவர்களின் செல்போன்களையும் எடுத்து அதில் உள்ள ஆடியோக்களை வெட்டி, ஒட்டு வெளியிடுங்கள் பார்க்கலாம்’’ என்று குமுறியிருக்கிறார்.
இந்த விவகாரம் குறித்து வன்னி அரசு, ’’காக்கிச்சட்டை கழற்றி வைத்து விட்டு வந்தால் என்ன புடுங்குவார் இந்த ஆர்.எஸ்.எஸ். பேர்வழி சீமான் ?’’ என்று கேட்கிறார்.
மேலும், ‘’இது தனிப்பட்ட காவல்துறை அதிகாரி வருண்குமார் அவர்களுக்கு விடப்பட்ட சவால் அல்ல; சட்டம் ஒழுங்கை சீரழிக்கும் சதி வேலை. சீமானின் இந்த உளறலை
கடந்து போவது நாளை மற்ற காவல்துறை அதிகாரிகளுக்கும் நேரும் என்பதை எச்சரிக்க கடமை பட்டுள்ளேன்’’ என்றும் வன்னி அரசு கூறியிருக்கிறார்.