தலித் முதல்வராக முடியாது என்று விசிக தலைவர் திருமாவளவன் சொன்னது கடும் விவாதங்களை எழுப்பிய நிலையில், தலித் முதல்வராக முடியாது என்று தான் சொன்னது தேசிய அளவிலான பார்வையில் என்று சொன்னார்.
அவர் சொன்னதில் எந்த மாற்றுக்கருத்தும் இல்லை என்று சொல்லும் விசிகவின் இளைஞரணி செயலாலர் சங்க தமிழன், இந்திய அளவில் மூன்று முறை உத்தரபிரதேசத்தில் மாயாவதி முதல்வர் ஆனார். 8 பேர் தலித்கள் முதல்வர்கள் ஆகி இருக்கிறார்கள். ஆனால் மாயாவதி மட்டும்தான் தலித் கட்சி மூலமாக முதல்வர் ஆனார். மற்ற 7 பேரும் தேசிய கட்சி மூலமாக முதல்வர் ஆனார்கள்.
தேசிய அளவில் இப்படி தலித் முதல்வராக வந்தாலும் தமிழகத்தில் வர முடியவில்லை. தமிழகத்தை தலித் ஆள முடியவில்லை என்கிற கருத்தும் தலைவர் திருமாவின் பேச்சில் உள்ளது என்கிறார்.
தமிழகத்தில் தலித் முதல்வராக முடியவில்லை என்கிற வலியோடு தேசிய அளவிலான பார்வையில் என்று சொல்லி ஒரே கல்லில் 2 மாங்காய் அடித்திருக்கிறோம்.
அதிவிரைவில் எங்கள் தலைவர் திருமா தேசியத்தலைவராக பிரகடனப்படுத்தப்பட உள்ளார். ஆந்திராவில் விசிக உள்ளது, கர்நாடாகா, கேரளா, தெலுங்கானாவிலும் விசிக உள்ளது. மகராஷ்டிராவிலும் விசிக உள்ளது. இன்னும் பல மாநிலங்களிலும் விசிகவை கொண்டு சென்று அதிவிரைவில் தேசிய கட்சி தலைவராக உருவெடுக்கிறார் எங்கள் தலைவர் திருமா என்று சொல்லும் சங்கத்தமிழன்,
காங்கிரசில் கக்கனுக்கு போலீஸ் மந்திரி கொடுத்தது மாதிரி வேறு எந்த கட்சியும் தலித்துக்கு முக்கிய பொறுப்பு கொடுக்கவில்லை. ஆதி திராவிடர் நலத்துறை மட்டுமே வழங்குகிறார்கள் என்று தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தினார். நிதித்துறை, பொதுப்பணித்துறை போன்ற துறைகள் ஒதுக்குவதே இல்லை என்பதை வலியோடு சொல்கிறோம் என்கிறார்.
சங்கத்தமிழன் சொல்வதற்கேற்ப,
*இப்போது நாங்கள் ஆடுகளல்ல !
இளிச்சவாயர் கூட்டமும் அல்ல !
சீறிப்பாயும் விடுதலைச் சிறுத்தைகள் !
*அடங்க மறுப்போம் !
அத்து மீறுவோம் !
திமிறி எழுவோம் !
திருப்பி அடிப்போம் !
*அமைப்பாய்த் திரள்வோம் !
அங்கீகாரம் பெறுவோம் !
அதிகாரம் வெல்வோம் !
என்று திருமாவும் தொடர்ந்து திருமாகுறள் என்று தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டு வருகிறார்.