சாதி வாரி கனக்கெடுப்பு ஏன் முக்கியம்? ஏன் நடத்தப்பட வேண்டும்? என்பது குறித்து தமிழ்நாடு பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் நேர்காணல் வீடியோ ஒன்றில் தெளிவான விளக்கம் ஒன்றை அளித்திருக்கிறார்.
’’சாதிவாரி கணக்கெடுப்பு என்பது இன்றைக்கு இருக்கும் காலத்தின் கட்டாயம். சாதிக்கு எதிரான கொள்கை கொண்ட கட்சி திமுக. சாதியை ஆதரிக்கக்கூடிய, சாதிய கட்டமைப்புகள் தொடர்வதை ஏற்றுக்கொள்ளக்கூடிய அமைப்பு அல்ல திமுக. ஆனால் இந்த சாதி என்கிற கட்டமைப்பு தொடர்கின்ற காலம் வரையிலும், அதற்குள் ஒரு நீதி இருக்க வேண்டும். எல்லோருக்கும் சம வாய்ப்பு கிடைக்க வேண்டும் என்பது நமது கொள்கை. அதன் அடிப்படையில், ஒவ்வொரு சாதிக்கும் மக்கள் தொகையில் எவ்வளவு பங்களிப்பு உள்ளது. அந்த வகையில்தான் அந்த பங்களிப்புக்கு ஏற்ற வகையில்தான் அவர்களுக்கு பிரதிநிதித்துவம் கிடைக்க வேண்டும். வேலைவாய்ப்புகள் கிடைக்க வேண்டும் என்பன போன்றவை அடிப்படையாக நாம் கருத்தில் கொள்ள வேண்டும்.
சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படுவதன் மூலமாகத்தான் இன்றைக்கு பல்வேறு சாதிகளுக்கு இடையே இருக்கக்கூடிய பிரச்சனைகள், நாம் புறக்கணிக்கப்படுகிறோம் என்ற அந்த நிலையை நாம் போக்க முடியும். இதுதான் தக்க தருணம். இதை சாதி ஒழிப்புக்கு முந்தைய ஒரு நடவடிக்கையாகக் கூட பார்க்கலாம்.
சாதிவாரி கணக்கெடுப்பினை அறிமுகப்படுத்தி, அதன் மூலமாக வேலைவாய்ப்பு, கல்வி போன்ற பல்வேறு அம்சங்களில் திட்டங்களை தீட்டுகின்ற நேரத்தில் அந்த கொள்கைகளை வகுக்கின்ற நேரத்தில் எந்த ஒரு ஏற்றத்தாழ்வுகளும் மறைந்து போகும் வாய்ப்புகள் கண்டிப்பாக வரும். அப்படி வருகின்ற நேரத்தில், காலப்போக்கில் சமத்துவ சமுதாயம் ஏற்பட்டு சாதியம் என்ற அடிப்படையே இல்லாமல் போகும் வாய்ப்பு ஏற்படும்’’ என்கிறார் அமைச்சர் மனோ தங்கராஜ்.