மலையாள சினிமாவில் நடிகர்கள் முகேஷ், ஜெயசூர்யா, பாபுராஜ், திலீப் உள்ளிட்ட பலர் மீது நடிகைகள் பாலியல் புகார்கள் தெரிவித்ததால் அதிர்ந்து கிடக்கிறது கேரள திரையுலகம்.
2009ம் ஆண்டு இயக்குநர் ரஞ்சித் பாலியல் தொல்லை கொடுத்ததாக நடிகை புகாரளித்திருந்தார். 2013ம் ஆண்டில் நடிகர் ஜெயசூர்யா தன்னிடம் தவறாக நடந்துகொண்டாத நடிகை ஒருவரும், சித்திக் தன்னை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கியதாக நடிகை ஒருவரும், 2017ம் ஆண்டில் திலீப் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கியதாகவும் புகார்கள் எழுந்தன.
கேரள மாநில கம்யூனிஸ்ட் அமைச்சர்கள், எம்.எல்.ஏக்கள் பாலியல் தொல்லை கொடுத்ததாகவும் நடிகைகள் புகார் தெரிவித்துள்ளனர்.
இந்த புகார்களை விசாரிக்க அமைக்கப்பட்ட கேரள அரசு அமைத்த ஓய்வுபெற்ற நீதிபதி ஹேமா கமிட்டியின் அறிக்கையின் படி நடிகரும் எம்.எல்.ஏவுமான முகேஷ் மீது பிணையில் வெளிவர முடியாத பிரிவின் கீழ் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
உரிய விசாரணை நடத்தி அனைவர் மீதும் நடவடிக்கை எடுக்கக்கோரி போராட்டங்கள் நடந்து வருகின்றன. பாலியல் புகாரில் சிக்கிய கொல்லம் எம்.எல்.ஏ. முகேஷ் வீட்டை முற்றுகையிட்டு போராட்டங்கள் நடந்து வருகின்றன.
இதற்கிடையில் பாலியல் குற்றச்சாட்டு புகாரினை விசாரித்து வரும் சிறப்பு குழு, விசாரணை முடிந்து விரைவில் அறிக்கை தாக்கல் செய்யப்படும் என்று தெரிவித்துள்ளது.
இந்த பிரச்சனைகளினால் கேரள திரைப்பட சங்கமான அம்மா அமைப்பின் தலைவர் பதவியில் இருந்து நடிகர் மோகன்லால் விலகினார். அவரைத்தொடர்ந்து நிர்வாகிகள் பலரும் கூண்டோடு விலகியதால் அம்மா அமைப்பு கலைக்கப்பட்டுள்ளது.
பாலியல் புகார்கள் கேரள திரையுலகினை உலுக்கி எடுத்திருக்கும் நிலையில், தமிழ் திரையலிகிலும் அவ்வப்போது பாலியல் தொல்லை குற்றச்சாட்டுகள் எழுந்து வரும் நிலையில், தமிழ்சினிமாவிலும் விசாரணை கமிட்டி அமைக்க வேண்டும் என்று குரல் கொடுத்திருக்கிறார் நடிகை காயத்ரி ரகுராம்.
’’சினிமா துறையில் மட்டுமல்லாது மற்ற துறைகளில் உள்ள பெண்களும் பாலியல் துன்புறுத்தல்கள் குறித்து தைரியமாக வெளிவந்து சொன்னால்தான் மற்ற பெண்கள் காப்பாற்றப்படுவார்கள்’’ என்கிறார் காயத்ரிரகுராம்.
மேலும், ’’இது அரசியல் துறை – சினிமா துறை – பெண்களுக்கு இடையே நடக்கும் போர் என்றுதான் சொல்ல வேண்டும். சினிமா துறையில் நான் உட்பட பல நடிகைகள் சினிமா பின்னணியில் இருந்து வந்தாலும் இதுமாதிரி கசப்பான அனுபவங்களை சந்திக்காத நடிகைகள் இல்லை. ஹேமா கமிட்டி மாதிரி தமிழ்நாட்டிலும் தமிழ்திரையுலகில் நடக்கும் பாலியல் துன்புறுத்தல்களுக்கு விசாரணை நடத்த கமிட்டி அமைக்கப்பட வேண்டும். அப்போதுதான் பல உண்மைகள் வெளிவரும்’’ என்று பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறார்.