தமிழ் வளர்ச்சித்துறை விருதுகளுக்கு இணயாக தூய தமிழ் ஊடக விருதுத் தொகையை உயர்த்த வேண்டும் என்று தமிழ்நாடு அரசை வலியுறுத்தி இருக்கிறார் தமிழ்க்காப்புக் கழக தலைவர் இலக்குவனார் திருவள்ளுவன்.
தமிழ் வளர்ச்சித்துறையின் கீழ் செயல்பட்டு வரும் செந்தமிழ் சொற்பிறப்பியல் அகரமுதலித் திட்ட இயக்ககத்தின் வழியாக தூய தமிழை பயன்படுத்துகின்ற காட்சி, அச்சு ஊடகங்களுக்கு ஆண்டுதோறும் விருதுக்கான பாராட்டு சான்றிதழுடன் பரிசுத்தொகையையும் வழங்கி வருகிறது தமிழ்நாடு அரசு. இந்த விருதுத்தொகையினைத்தான் உயர்த்த வேண்டும் என்று வலியுறுத்துகிறார் இலக்குவனார் திருவள்ளுவன்.
இது குறித்து அவர் அரசுக்கு விடுத்துள்ள கோரிக்கையில், ‘’தமிழ்வளர்ச்சித்துறை விருதுகள் விருதாளர் ஒவ்வொருவருக்கும் 2 இலட்சம் வழங்கப்படுகிறது. தூய தமிழ் ஊடக விருதுத்தொகை ரூ.50,000 / மட்டுமே. மேலும் 25, 000 ரூ. மதிப்பிலான தங்கப்பதக்கம் மட்டுமே வழங்கப்படுகிறது. ஆனால், தமிழ் வளர்ச்சித்துறையில் விருதாளர் ஒவ்வொருக்கும் 1 சவரன் தங்கப்பதக்கம் வழங்கப்படுகிறது.
தூயதமிழ்ப் பற்றாளர் விருது மாவட்டந்தோறும் ஒருவருக்கு ரூ.20,000/ விருதுத் தொகையாக வழங்குகிறது. தூயதமிழ்ப் பற்றாளர் பரிசு மாநில அளவில் மூவருக்கு ஒவ்வொருவருக்கும் ரூ.5,000/வீதம் வழங்குகிறது. இவற்றிற்குக் காரணமான தூய தமிழ் ஊடகத்திற்குக் கூடுதல் தொகையில் விருது வழங்காவிட்டாலும் பிற விருதுகளுக்கு இணையாகவாவது வழங்க வேண்டாமா?’’ என்ற கேள்வியை எழுப்பி இருக்கிறார்.
மேலும், ‘’அறிஞர்களையும் வல்லுநர்களையும் பாராட்டும் பொழுது சமநிலை இருக்க வேண்டும். சமநிலை இல்லை என்பதைச் சுட்டிக்காட்டி அக்குறையைக் களைய வேண்டுகிறோம்.
இப்போது அறிவித்துள்ள 2023ஆம் ஆண்டிலிருந்தே ஊடகத்தமிழ் விருதிற்கான பரிசுத்தொகையை இரண்டு நூறாயிரமாக உயர்த்தியும் தங்கப்பதக்கத்தை 1 சவரனாக உயர்த்தியும் அகரமுதலி இயக்ககக்தின் பிற விருதுத் தொகைகளையும் உயர்த்தியும் சமநிலை பேண வேண்டுகிறோம்’’ என வலியுறுத்தி இருக்கிறார்.