சென்னை சிபிஐ அலுவலகத்தில் நான்கு வாரங்களுக்கு நேரில் ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என்கிற நிபந்தனையுடன் முன்னாள் போலீஸ் ஐஜி பொன் மாணிக்கவேலுவுக்கு முன் ஜாமீன் வழங்கியது உயர்நீதிமன்றம் மதுரைக்கிளை.
சிலை கடத்தல் வழக்கில் குற்றவாளி தீனதயாளனை தப்பிக்க வைக்க தன் மீது பொய் வழக்கு போட்டு தன்னை சிறையில் அடைத்தார் என்று சஸ்பெண்ட் செய்யப்ப்பட்ட எஸ்.பி. காதர் பாட்ஷா உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழகை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், சிபிஐ இவ்வழக்கை விசாரிக்க உத்தரவிட்டது.
சிபிஐ விசாரணையில் பொன் மாணிக்கவேல் மீதான குற்றச்சாட்டில் முகாந்திரம் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து பொன் மாணிக்கவேலு மீது வழக்கு பதிவு செய்தது. இதன் பின்னர் அவரை கைது செய்து மேற்கொண்டு விசாரணை நடத்த இருந்த நிலையில், தன் மீதான குற்றச்சாட்டில் முகாந்திரம் இல்லை என்று சொல்லி மதுரை உயர்நீதிமன்ற கிளையில் மனு தாக்கல் செய்திருந்தார் பொன் மாணிக்கவேல்.
வழக்கின் விசாரணையின் போது, பொன் மாணிக்கவேலுவுக்கு முன் ஜாமீன் வழங்கக்கூடாது. அவரை கைது செய்து விசாரித்தால்தான் சிலை கடத்தலில் நடந்த உண்மைகள் வெளியே வரும் என்று சிபிஐ தரப்பு கடுமையாக வாதிட்டது. காதர் பாட்ஷா தரப்பும் கடுமையாக வாதிட்டது. ஆனாலும் இரு தரப்பு வாதங்களுக்கு பின்னர் இன்று அளித்துள்ள தீர்ப்பில், பொன் மாணிக்கவேலுவுக்கு நிபந்தனை ஜாமீன் அளித்துள்ளது நீதிமன்றம்.
ஆனாலும், நாங்களாக இந்த வழக்கை விசாரிக்கவில்லை. உயர்நீதிமன்றம் உத்தரவிட்டதன் பேரிலேயே விசாரணை நடத்தி வறுகிறோம் என்று சிபிஐ தரப்பு நீதிமன்றத்தில் வாதத்தை முன் வைத்திருக்கிறது. இதனால் இப்போதைக்கு பொன் மாணிக்கவேல் தப்பித்தார் என்கிறது சிபிஐ வட்டாரம்.