’பிரதமர் நரேந்திரமோடியின் முதுகில் குத்தியவர் எடப்பாடி’ என்று அண்ணாமலை ஆவேசமாக சொல்லும்போதே இதில் ஏதோ உள்குத்து இருக்கிறதே என்று பார்த்தால், தன் முதுகில் குத்திவிட்டார் என்கிற ஆத்திரத்தில்தான் அதை வெளியே சொல்ல முடியாமல், மோடி முதுகு என்று கதறியிருக்கிறார் என்பது தெரிகிறது.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமிக்கும் தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலைக்கும் இடையேயான மோதல் போக்கு வலுத்துக் கொண்டே செல்கிறது. அதிமுக ஊழல்களையும் அக்கட்சியின் முன்னாள் பொதுச்செயலாளர் ஜெயலலிதாவையும் கடுமையாக விமர்சித்து வருகிறார் அண்ணாமலை.
இதில் அதிமுக – பாஜக இடையேயான மோதல் வலுத்தது. தான் சொல்கிறபடி இபிஎஸ் நடந்துகொள்ள வேண்டும் என்று அண்ணாமலை எதிர்பார்க்க அது நடந்தேறாமல் போனதால் ஆத்திரத்தில் அதிமுகவை கடுமையாக விமர்சித்தார். அதிமுகவின் ஊழல் பைல்களை வெளியிடுவேன் என்று மிரட்டி வந்தார் அண்ணாமலை.
இபிஎஸ்க்கும் அண்ணாமலைக்குமான மோதல் தொடர்ந்தால் அதிமுக – பாஜக இடையே கூட்டணி மலர வாய்ப்பில்லை என்பதை உணர்ந்த டெல்லி பாஜக தலைமை, படிக்கப்போகிறேன் என்று சொல்லிவிட்டு கொஞ்ச நாள் வெளிநாடு சென்றுவிட்டு வா. அதற்குள் இங்கிருக்கும் பிரச்சனைகளை சரிசெய்து விடுகிறோம் என்று சொல்லி இருக்கிறார்கள்.
வெளிநாடு செல்வதில் விருப்பம் இல்லாமல் இருந்து வந்த அண்ணாமலை, எடப்பாடி பழனிச்சாமியை அவரது வீட்டில் நேரில் சந்தித்து, ’’எனக்கும் உங்களுக்கும் உள்ள பிரச்சனையால்தான் என்னை வெளிநாடு அனுப்புகிறார்கள். அந்த பிரச்சனை சமாதானம் ஆகி முடிந்துவிட்டது என்று நீங்க தலைமையிடம் சொன்னால், தலைமை என்னை வெளிநாடு போகச்சொல்லாது என்று கேட்டிருக்கிறார்.
ஆனால் எடப்பாடியோ, காரியம் ஆகணும் என்னவெல்லாம் செய்கிறார் பாருங்க என்று கமெண்ட் அடித்திருக்கிறார். இது வேலுமணி மூலமாக அண்ணாமலைக்கு தெரியவந்திருக்கிறது. தனக்கு உதவியும் செய்யாமல் கிண்டல் செய்கிறாரே என்றுதான், காலில் விழுந்து பதவி வாங்கியவர் என்று எடப்பாடியை கிண்டலடித்திருக்கிறார்.
இந்த ஆத்திரத்தில் அண்ணாமலையின் வீடியோவை வெளியிடப்போவதாக சொல்லி இருக்கிறது இபிஎஸ் தரப்பு. அண்ணாமலை பேசியது எல்லாம் எடப்பாடி வீட்டில் இருந்த கேமராவில் பதிவாகி இருக்கிறது. இதைத்தான் வெளியிடப்போவதாக எச்சரித்திருக்கிறது. மேலும், அண்ணாமலையின் ஊழல் பைல்சையும் வெளியிடப்போவதாக அறிவித்திருக்கிறது எடப்பாடி தரப்பு.