கடந்த 10 ஆண்டுகளில், இந்தியா போன்ற வளர்ந்து வரும் நாடுகள் குறிப்பிடத்தகுந்த பொருளாதார வளர்ச்சியை அடைந்துள்ளன. சர்வதேச நாணய நிதியத்தில் (IMF) இருந்து கிடைத்த தரவுகளின் படி, கடந்த 10 ஆண்டுகளில் வேகமாக வளர்ந்து வரும் முதல் 10 பெரிய பொருளாதாரங்களின் பட்டியலில் 7 ஆசிய நாடுகள் இடம் பிடித்துள்ளன.
2014-ம் ஆண்டில் குறைந்தபட்சம் $100 பில்லியன் மதிப்பிலான மொத்த உள்நாட்டு உற்பத்தியை கொண்ட நாடுகளிடையே மேற்கொள்ளப்பட்ட ஆய்வில், உலகளவில் இந்தியாவின் அண்டை நாடான வங்கதேசம் முதல் இடம் பிடித்துள்ளது.
உலகில் வேகமாக வளர்ந்து வரும் 10 நாடுகள்:
- வங்கதேசம்
பிற உலக நாடுகளை ஒப்பிடுகையில், கடந்த 10 ஆண்டுகளில் வங்கதேசம் அதிக வளர்ச்சியை கண்டுள்ளது. 2014-ல், வங்கதேசத்தின் மொத்த உள்நாட்டு உற்பத்தி $207 பில்லியனாக இருந்த நிலையில், சுமார் 120% வளர்ச்சியை அடைந்து 2024-ம் ஆண்டின் நிலவரப்படி $455 பில்லியனாக இருமடங்காக அதிகரித்துள்ளது.
இந்த விரைவான வளர்ச்சி பல்வேறு தொழில்களில் வங்கதேசத்தின் முன்னேற்றத்தையும் உலகப் பொருளாதாரத்தில் அதன் வளர்ந்து வரும் பங்கையும் பிரதிபலிக்கிறது. இருப்பினும், 2024-ல் வங்கதேசத்தின் மொத்த உள்நாட்டு உற்பத்தியானது 2% வருடாந்திர வளர்ச்சியை மட்டுமே பதிவு செய்தது என்பது குறிப்பிடத்தக்கது.
2. அயர்லாந்து
கடந்த 10 ஆண்டுகளில் ஐரோப்பிய நாடான அயர்லாந்தும் குறிப்பிடத்தக்க வளர்ச்சியைக் கண்டுள்ளது. 2014-ல் $259 பில்லியன் பொருளாதாரத்தில் இருந்து சுமார் 117% வளர்ச்சியைக் கண்டு 2024-ல் $564 பில்லியன் பொருளாதார நாடாக உருவெடுத்துள்ளது. கடந்த ஆண்டில், அயர்லாந்தின் பொருளாதார வளர்ச்சி விகிதம் 3.3% ஆக பதிவாகியுள்ளது. இந்த வளர்ச்சிக்கு அயர்லாந்தின் வலுவான தொழில்நுட்பம் மற்றும் நிதித் துறைகள் முக்கிய காரணமாக அமைந்துள்ளது.
3. வியட்நாம்
கடந்த 10 ஆண்டுகளில் $233 பில்லியன் பொருளாதாரத்தில் இருந்து கிட்டத்தட்ட 100% வளர்ச்சியை அடைந்து 2024-ல் $466 பில்லியன் பொருளாதார நாடாக வியட்நாம் விரிவடைந்துள்ளது. வியட்நாமின் வளர்ச்சி அதன் அதிகரித்த உற்பத்தி மற்றும் ஏற்றுமதி தொழில்களால், உலக பொருளாதார சந்தையில் ஒரு முக்கிய நாடாக மாற உதவியுள்ளது. வியட்நாம் 2024-ல் 7.4% GDP வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது.
4. இந்தியா
கடந்த 10 ஆண்டுகளில் இந்தியாவின் பொருளாதாரம் 93% வளர்ச்சியடைந்து, 2014-ல் $2 டிரில்லியனில் இருந்து 2024-ல் கிட்டத்தட்ட $4 டிரில்லியன் பொருளாதாரமாக வளர்ந்துள்ளது. உலகின் மிகப்பெரிய பொருளாதாரங்களில் ஒன்றாக, இந்தியாவின் வளர்ச்சி அதன் விரிவடைந்து வரும் தொழில்நுட்பத் துறை, அதிகரித்து வரும் வெளிநாட்டு முதலீடு மற்றும் வளர்ந்து வரும் நடுத்தர வர்க்கத்தை பிரதிபளிக்கும் ஒன்றாக உள்ளது.
5. ருமேனியா
ருமேனியாவின் பொருளாதாரம் $200 பில்லியனில் இருந்து 10 ஆண்டுகளில் கிட்டத்தட்ட 85% வளர்ச்சியடைந்து $370 பில்லியனாக உயர்ந்துள்ளது. 2024-ல், ருமேனியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 7% அதிகரித்துள்ளது.
6. சீனா
கடந்த 10 ஆண்டுகளில் சீனாவின் பொருளாதாரம் 76% வளர்ச்சியை கண்டுள்ளது. 2014-ல் $10.5 டிரில்லியன் பொருளாதாரமாக இருந்த சீனா, 2024-ல் $18.5 டிரில்லியனாக அதிகரித்து ஒரு முக்கிய உலக பொருளாதார நாடாக உள்ளது. முந்தைய சில ஆண்டுகளுடன் ஒப்பிடுகையில் சீனாவின் வளர்ச்சி விகிதம் குறைந்திருந்தாலும், மிகப்பெரிய உற்பத்தித் திறன் காரணமாக உலகளவில் சீனா தொடர்ந்து ஆதிக்கம் செலுத்துகிறது. 2024-ல் 4.9% வருடாந்திர வளர்ச்சியை சீனா பதிவு செய்துள்ளது.
7. இஸ்ரேல், 8. சிங்கப்பூர்
இஸ்ரேல் மற்றும் சிங்கப்பூர் ஆகிய நாடுகளும் சிறப்பான வளர்ச்சியை அடைந்துள்ளன. இஸ்ரேலின் பொருளாதாரம் 69% வளர்ச்சியடைந்து 531 பில்லியன் டாலர்களை எட்டியும், சிங்கப்பூரின் பொருளாதாரம் 67% வளர்ச்சியடைந்து 525 பில்லியன் டாலர்களை எட்டியுள்ளது. இரு நாடுகளும் வலுவான தொழில்நுட்பம் மற்றும் நிதித் துறைகளைக் கொண்டுள்ளதால், அதன் பொருளாதார வெற்றிக்கு முக்கிய பங்கு வகிக்கின்றன.
9. இந்தோனேசியா
இந்தோனேசியாவின் பொருளாதாரம் 66% வளர்ச்சியை அடைந்து, கடந்த 10 ஆண்டுகளில் $891 பில்லியனில் இருந்து $1.5 டிரில்லியனாக விரிவடைந்துள்ளது. 2024-ல் இந்தோனேசியா 7.6% GDP வளர்ச்சியை பதிவு செய்துள்ளது.
10. அமெரிக்கா
கடந்த 10 ஆண்டுகளில் அமெரிக்க பொருளாதாரம் 63% வளர்ச்சியைக் கண்டுள்ளது. அமெரிக்காவின் பொருளாதாரம் $17.6 டிரில்லியனில் இருந்து $28.8 டிரில்லியனாக வளர்ந்துள்ளது. கடந்த ஆண்டு அமெரிக்காவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 5.2%-ஆக பதிவாகியுள்ளது. உலகளவில் முதிர்ந்த பொருளாதார நாடாக அமெரிக்கா கருதப்பட்டாலும், அதன் புதுமையான கண்டுபிடுப்புகள், பல்வேறு தொழில்துறைகள் காரணமாக தொடர்ந்து வளர்ச்சி அடைந்து வருகிறது.