பரம்பொருள் பவுண்டேஷன் என்ற பெயரில் பள்ளிக்கூடத்திற்குள் நுழைந்து, வள்ளலார் பற்றிப் பேசுவதாக அனுமதி வாங்கிக் கொண்டு, பாவம்-புண்ணியம், முற்பிறவி-இப்பிறவி என்று பள்ளிக்கூடத்திற்கு சம்பந்தமில்லாவற்றைப் பேசி, மாணவிகளைக் கலங்கச் செய்த மகாவிஷ்ணு என்பவர், எந்தப் பிறவியில் செய்த பாவத்திற்காக சிறைக்குச் சென்றார் என்பதை அவர்தான் சொல்ல வேண்டும்.
மகாவிஷ்ணு பள்ளிக்கல்வித்துறை அமைச்சரையும், தமிழ்நாடு பாடநூல் கழகத் தலைவரையும் சந்தித்திருப்பது தொடர்பான படங்கள், மேலும் பல அமைச்சர்களுடன் அவர் எடுத்துக் கொண்ட படங்கள் தொடர்ந்து வெளிவருகின்றன. இப்படிப்பட்டவர்களைத்தான் தன்னம்பிக்கை பேச்சாளர் என்ற பெயரில் அனுமதிக்கிறீர்களா என்று திராவிட மாடல் அரசை நோக்கிய கேள்விகள் எழுந்ததன் விளைவாக, அரசுப் பள்ளிகளில் வெளியாரை அனுமதிப்பதில்லை என்ற முடிவுடன், பல்வேறு நிபந்தனைகள் அடங்கிய அறிவிப்பை பள்ளிக் கல்வித்துறை வெளியிட்டிருக்கிறது.
மகாவிஷ்ணு அப்படி என்ன தப்பாகப் பேசிவிட்டார் என்றும், ஆன்மிகம் பேசுவது தவறா என்றும் அவருக்கு ஆதரவாக வரிந்த கட்டுகிறவர்களும் இருக்கிறார்கள். அறிவியலுக்குப் புறம்பாக முற்பிறவி பாவ-புண்ணியங்களால்தான் உடல் குறைபாடு ஏற்படுகிறது என்ற பேச்சு எந்தவிதத்திலும் ஆன்மிகம் என்ற அளவுக்குள் அடங்கிவிடுவது அல்ல. அது சமுதாயப் பார்வையற்ற பேச்சு வியாபாரியின் கைத்தட்டல் இலாபத்திற்கானதாக மட்டுமே இருக்க முடியும். அதுமட்டுமின்றி, ஆபாசமான-அபத்தமான பாலுறவு சார்ந்த கருத்துகளை முன்வைத்து காணொளிகளை வெளியிடும் ஒருவர் எப்படி மாணவர்களுக்கானத் தன்னம்பிக்கை பேச்சாளராக இருக்க முடியும்? அவரை ஏன் ஆதரிக்க வேண்டும்?
பழமைப் பெருமை என்ற பெயரில் சமுதாய அடிமைத்தனத்தை நிலைநிறுத்தி, அதன் மீது மதவாத அரசை முழுமையாகக் கட்டமைப்பதுதான் பா.ஜ.க. பரிவாரங்களின் நோக்கம். அதை அவர்கள் கூச்சமின்றித் துணிச்சலாக செய்து வருகிறார்கள். மக்களிடம் உள்ள மதநம்பிக்கையை மதநல்லிணக்கத்தின் அடையாளமாக கடைப்பிடித்து வந்த மண்ணில், மதவெறியை ஊட்டி வளர்த்து, அதற்கேற்ற வகையில் அதிகார மையங்களில் ஆர்.எஸ்.எஸ். பின்னணி கொண்டவர்களை மறைமுகமாக நியமித்து, கல்வி- நீதி-நிர்வாகம்-காவல்துறை என சகல மட்டங்களிலும் தனது ஸ்லீப்பர்செல்கள் இருப்பதை உறுதிசெய்து கொண்டே தங்கள் வேலைகளை செய்து வருகிறார்கள்.
மூன்று முறை பா.ஜ.க. தொடர்ச்சியாக மத்தியில் ஆட்சி அமைத்துவிட்டதால், நமக்கேன் பொல்லாப்பு என்று நியாயக்குரல்களும் முடங்கிப் போகின்றன. நீதிதேவன்களின் மயக்கத்தில் சட்டம் தள்ளாடுகிறது. கல்விநிலையங்களைப் பொறுத்தவரை பள்ளிக்கூடங்கள் முதல் பல்கலைக்கழகங்கள் வரை மதவாத செயல்பாடுகளைக் கொண்டவர்களே அதிகாரம் செலுத்துகிறார்கள். பத்தாண்டுகள் தொடர்ச்சியாக ஒருசில நடைமுறைகள் கடைப்பிடிக்கப்படும்போது, அடுத்துவரும் தலைமுறையும் இதுதான் சட்ட நடைமுறை என்று நம்பும். அதனால்தான், ஆர்.எஸ்.எஸ்.சுடன் தொடர்புடையவர்களை நேரடியாகப் பொறுப்புக்கு கொண்டு வருவதற்கான வாசல் திறக்கப்பட்டிருக்கிறது.
இது திராவிட மாடல் ஆட்சி நடைபெறும் தமிழ்நாட்டில் மட்டுமல்ல, கம்யூனிஸ்ட்டுகள் ஆளும் அண்டை மாநிலமான கேரளாவிலும் இந்த ஊடுருவல் தொடர்கிறது. அந்த மாநிலத்தில் ஏ.டி.ஜி.பியாக உள்ள எம்.ஆர்.அஜித்குமார் என்ற ஐ.பி.எஸ் அதிகாரி, ஆர்.எஸ்.எஸ் பொதுச்செயலாளரையும் மற்ற நிர்வாகிகளையும் திருச்சூரில் சந்தித்துப் பேசியது கேரளாவை ஆளும் இடது முன்னணிக்குப் பெரும் நெருக்கடியை உண்டாக்கியுள்ளது. எதிர்க்கட்சியான காங்கிரஸ் இந்த விவகாரத்தில் நேரடியாக முதலமைச்சர் பினரயி விஜயன் மீது குற்றம்சாட்டுகிறது. கேரளாவில் முதன்முறையாக நாடாளுமன்றத் தேர்தலில் பா.ஜ.க. வெற்றி பெற்றிருக்கிறது. அது, திருச்சூர் தொகுதியில்தான். பினரயி விஜயன்தான் விட்டுக்கொடுத்துவிட்டார் என்பது காங்கிரஸ் குற்றச்சாட்டு. அதன் தொடர்ச்சியாகவே ஏ.டி.ஜி.பி-ஆர்.எஸ்.எஸ் நிர்வாகிகள் சந்திப்பை அரசியல் கண்ணோட்டத்தில் பார்க்கிறார்கள். ஆளுங்கூட்டணியான இடது முன்னணியில் உள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட தோழமைக் கட்சிகளும் முறையான விசாரணையைக் கோருகின்றன.
ஸ்லீப்பர் செல்கள் எல்லாப் பக்கமும் நிறைந்திருப்பதால், கம்யூனிஸ்ட் ஆட்சியாக இருந்தாலும், திராவிட மாடல் ஆட்சியாக இருந்தாலும் சர்ச்சை வலைப்பின்னலில் சிக்கிக்கொண்டு தவிக்க வேண்டிய தருணங்கள் அடிக்கடி உருவாகின்றன. தேர்தல் களத்தில் எதிரிகளுடன் மோதும்போது மக்கள் தீர்ப்பளிப்பார்கள். அதிகார மையத்தில் ஊடுருவியுள்ள கண்ணுக்குத் தெரியாத எதிரிகளை அடையாளம் காண்பதில்தான் ஆட்சியின் திறமை உள்ளது.