அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடும் டிரம்ப் மற்றும் கமலா ஹாரிஸ் இடையே முதல்முறையாக நேரடி விவாதம் நடந்துள்ளது. அமெரிக்க கருக்கலைப்பு சட்டம் முதல் உக்ரைன்-ரஷ்யா போர் வரை இருவரும் தங்களின் நிலைப்பாடுகள் மற்றும் கொள்கைகளை பரிமாறி அமெரிக்காவில் அனல் பறக்கும் விவாதத்தை தூண்டி இருக்கின்றனர்.
அதிபர் தேர்தலில் 3-வது முறையாக களம் இறங்கியுள்ள முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் தற்போதைய துணை அதிபர் கமலா ஹாரிஸ் இடையிலான முதல் நேருக்கு நேர் விவாதத்தை ABC செய்தி நிறுவனம் ஏற்று நடத்தியுள்ளது.
விவாத மேடை
அமெரிக்க அதிபர் தேர்தல் வாக்கெடுப்புக்கு இன்னும் சரியாக 8 வாரங்களே உள்ள நிலையில், குடியரசுக் கட்சி வேட்பாளர் டொனால்ட் டிரம்ப் மற்றும் ஜனநாயகக் கட்சியின் வேட்பாளர் கமலா ஹாரிஸ் ABC நிறுவன விவாத மேடையில் முதல் முறையாக சந்தித்தனர்.
விவாத மேடைகளில் அதிபர் வேட்பாளர்கள் இடையே கடந்த 8 ஆண்டுகளாக கைகுலுக்கிக்கொள்ளும் வழக்கம் இல்லாமல் இருந்ததை, மேடைக்கு வந்த உடன் டிரம்ப்பிடம் கைக்குலுக்கி கமலா ஹாரிஸ் முடிவுக்கு கொண்டு வந்தார்.
அமெரிக்க பொருளாதாரம்: பொருளாதாரம் மற்றும் மக்களின் அன்றாட செலவு அதிகரிப்பு குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு முதலில் பதிலளித்த கமலா ஹாரிஸ், சிறு வணிகர்களுக்கு வரி குறைப்பு செய்யும் திட்டங்களை கொண்டு வருவேன் என்று கூறினார். மேலும், ட்ரம்ப் அதிபரானால் அவர் சேல்ஸ் டேக்ஸ் கொண்டு வருவார் என்றும் அதாவது அன்றாடம் மக்கள் வாங்கும் ஒவ்வொரு பொருளுக்கும் 20 சதவீதம் வரி விதிக்கும் திட்டங்களை தீட்டியுள்ளார் என்றும் கமலா ஹாரிஸ் குற்றம்சாட்டினார்.
ட்ரம்ப் அதிபரானால் பில்லியனர்களுக்கு வரி குறைப்பு செய்து அமெரிக்க பொருளாதாரத்திற்கு எதிர்மறை தாக்கத்தை உருவாக்குவார் என்றும் ஹாரிஸ் குற்றம்சாட்டினார்.
கொரோனா தொற்றுக்குப் பின்னர் ட்ரம்ப் ஏற்படுத்தி வைத்திருந்த பொருளாதார சீரழிவுகளை ஜோ பைடன் சரிசெய்தார். ட்ரம்புக்கு மக்களுக்கான திட்டம் என்று எதுவும் இல்லை. அவர் எப்போதும் அவரை தற்காத்துக் கொள்வதிலேயே முனைப்பு காட்டுவார் என்று கமலா ஹாரிஸ் விமரசித்தார்.
கமலா ஹாரிஸின் கருத்துக்களை மறுத்த ட்ரம்ப், தனது ஆட்சிக் காலத்தில் தான் அமெரிக்கப் பொருளாதாரம் மிக செழிப்பாக இருந்ததாக கூறினார்.
புலம்பெயர் குடியேற்றம்: விவாதம் சூடுபிடிக்கும் வகையில், புலம்பெயர் குடியேற்றம் குறித்த பிரச்சனையில் ஜோ பைடன் நிர்வாகத்தின் செயல்பாடுகளை விவரித்து கமலா ஹாரிஸை குறிவைத்து டிரம்ப் கடுமையாக பேசினார். இதற்கு பதிலளித்த கமலா ஹாரிஸ், நீங்கள் அதே பழைய சோர்வான பிளேபுக்கில் இருந்து, பொய்கள் மற்றும் குறைகளையே உளறுகிறீர்கள் என்று டிரம்ப்பை சாடினார்.
சட்டவிரோத குடியேற்றம் அமெரிக்காவுக்கு சவாலாக இருப்பதாகக் கூறிய ட்ரம்ப், அவ்வாறு குடியேறுபவர்கள் ஓஹியோ நகரவாசிகளின் செல்லப் பிராணிகளை கொன்று உணவாக்கிக் கொள்வதாகக் கூறினார். அதற்கு நெறியாளர் குறுக்கிட்டு “அப்படியான செய்திகளுக்கு எந்த ஒரு ஆதாரமும் இல்லை” என்று தெரிவித்தார்.
கருக்கலைப்பு உரிமைகள்: கருக்கலைப்பு உரிமைகள் பற்றி பேசுகையில், “ட்ரம்ப் அதிபரானால் நாடு தழுவிய கருக்கலைப்பு தடை அமலுக்கு வரும் என்றும் பாலியல் வன்கொடுமைகள், நெருங்கிய குடும்ப உறவுகளுக்கு இடையேயான தகாத பாலுறவு மூலம் உருவாகும் கருவினை கலைப்பது கூட ட்ரம்ப் ஆட்சி அமைந்தால் கடினமாகிவிடும் என்றும் கமலா ஹாரிஸ் குற்றம் சாட்டினார்.
“சில மாகாணங்களில் குழந்தைகள் பிறந்தபின்னர் கொல்லப்படுகின்றனர், 9-வது மாதத்தில் கூட கருக்கலைப்பை அனுமதிக்க வேண்டும் என ஜனநாயகக் கட்சி விரும்புகிறது” என்று டொனால்ட் ட்ரம்ப் கூறினார். அப்போது குறுக்கிட்ட நெறியாளர் அமெரிக்காவில் குழந்தைகள் பிறந்தபின்னர் கொலை செய்யப்படுவதை எந்த மாகாண சட்டமும் அங்கீகரிக்கவில்லை என்று தெரிவித்தார். “கருக்கலைப்பு உரிமையை ரத்து செய்து 2 ஆண்டுகளுக்கு முன்பு தீர்ப்பு வழங்கிய உச்ச நீதிமன்ற நீதிபதிகளில் 3 பேர் டிரம்பால் நியமிக்கப்பட்டவர்கள்” என்று கமலா ஹாரிஸ் சுட்டிக்காட்டி பேசினார்.
ஒரு கட்டத்தில், ஹாரிஸ் மீது தனிநபர் தாக்குதல் நடத்திய டிரம்ப், “ஹாரிஸ் ஒரு மார்க்சிஸ்ட். ஹாரிஸின் தந்தை ஒரு மார்க்சிஸ்ட்” என்றார். அப்போது ஹாரிஸ் மேடையில் சிரித்துக்கொண்டே காணப்பட்டார்.
“அமெரிக்காவின் துணை அதிபராக நான் உலகம் முழுவதும் பயணம் செய்துள்ளேன். உலகத் தலைவர்கள் டொனால்ட் டிரம்பைப் பார்த்து சிரிக்கிறார்கள். உங்களை ஒரு அவமானம் என்று சொல்கிறார்கள்,” என்று கமலா ஹாரிஸ் கடுமையாக வசை பாடினார்.
ரஷ்யா – உக்ரைன் போர்: ரஷ்யா – உக்ரைன் போர் குறித்துப் பேசிய கமலா ஹாரிஸ், “எங்களுக்கும் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கிக்கும் இடையே நல்லுறவு இருக்கிறது. நல்லவேளை இந்த போர் மூண்ட தருணத்தில் நீங்கள் (ட்ரம்ப்) அதிபராக இருக்கவில்லை. இல்லாவிட்டால் இந்நேரம் புடின் கீவ் நகரில் அமர்ந்து கொண்டு ஐரோப்பிய நாடுகளை எப்படித் தாக்குவது என்று திட்டம் தீட்டிக் கொண்டு இந்திருப்பார்”, என்று எச்சரித்தார்.
தான் அதிபரானால் அமெரிக்காவின் நலனை கருத்தில் கொண்டு உக்ரைன்-ரஷ்யா போரை நிறுத்துவேன் என்று ட்ரம்ப் கூறியதற்கு, “புடின் ஒரு சர்வாதிகாரி. அவர் உங்களை மதிய உணவாக புசித்துவிடுக்கூடும்” என்று கமலா ஹாரிஸ் விமரசித்தார்.
அதற்குப் பதிலளித்த ட்ரம்ப், “கமலா ஹாரிஸ் தான் அமெரிக்க வரலாற்றிலேயே மிக மோசமான துணை அதிபர். உக்ரைன் – ரஷ்யப் போரை அவர் தடுக்கத் தவறிவிட்டார்” என்றார்.
இஸ்ரேல் – காசா போர் குறித்து பேசிய ட்ரம்ப், “இஸ்ரேல் தாக்குதலில் 40 ஆயிரம் பாலஸ்தீனர்கள் இறந்துவிட்டனர், நான் மட்டும் அதிபராக இருந்திருந்தால் இந்தப் போர் மூண்டிருக்காது. கமலா ஹாரிஸ் அமெரிக்க அதிபரானால் 2 ஆண்டுகளில் இஸ்ரேல் என்ற நாடே இல்லாமல் போகிவிடும்” என்றும் கூறினார்.
அதற்கு பதிலத்த கமலா ஹாரிஸ், ட்ரம்பின் குற்றச்சாட்டை மறுப்பதாகவும் பிரச்சனையை திசை திருப்ப இத்தகைய கருத்தை கூறுகிறார் என்றும் கூறினார். மேலும், டிரம்ப் எப்போதுமே சர்வாதிகாரிகள் மீது அபிமானம் உண்டு என்பது அனைவரும் அறிந்ததே என்றும் அவர் தன்னையே ஒரு சர்வாதிகாரியாகப் பார்க்கவே விரும்புகிறார்” என்று கமலா ஹாரிஸ் பதிலடி கொடுத்தார்.
இருவர் இடையே நடந்த முதல் நேரடி விவாதத்தில் இந்தியா குறித்தோ, இந்தோ பசிபிக்கில் நிலவும் பிரச்சனைகள் குறித்தோ விவாதிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.