மத்திய பிரதேசத்தில் இந்தூரில் இருந்து 30 கி.மீ. தொலைவில் அம்பேத்கர் நகருக்கு மோவ் கண்டோன்மெண்ட் நகரத்தில் உள்ள 23, 24 வயதுடைய காலாட்படை இளம் பயிற்சி அதிகாரிகள் 2 பேர் தங்கள் பெண் தோழிகளுடன் செவ்வாய்க்கிழமை அன்று இரவு காரில் சுற்றுலா சென்றிருக்கிறார்கள். புதன்கிழமையான நேற்று அதிகாலை 2 மணியளவில் மோவ் – மண்டலேஷ்வர் சாலையில் திடீரென்று வந்த 7 பேர் துப்பாக்கி முனையில் மிரட்டி காரில் இருந்த இரண்டு ராணுவ அதிகாரிகளையும் தாக்கி உள்ளனர். காரில் இருந்த பெண்களையும் தாக்கி, அந்த ராணுவ அதிகாரிகளின் கண் முன்னேயே அவர்களின் ஒரு தோழியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.
ஒரு ராணுவ அதிகாரியிடம் 10 லட்சம் ரூபாய் பணம் எடுத்து வரச்சொல்லி யாரிடமாவது பேசு என்று மிரட்டவும், அவர் அந்த சந்தர்ப்பத்தில் உயரதிகாரிகளுக்கு தகவல் கொடுக்க, அவர்கள் சம்பவ இடத்திற்கு போலீசாரை அனுப்பி வைத்துள்ளனர்.
போலீசாரைப் பார்த்ததும் மர்ம நபர்கள் தப்பி ஓடி இருக்கிறார்கள். பாதிக்கப்பட்ட 4 பேருக்கும் 6.30 மணியளவில் மருத்துவ பரிசோதனை நடந்துள்ளது. ராணுவ அதிகாரிகளின் உடலில் காயங்களும், ஒரு பெண் வன்கொடுமைக்கு ஆளானதும் தெரியவந்துள்ளது.
கூட்டு பலாத்காரம், வழிப்பறி உள்ளிட்ட பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து இதுவரை 2 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். அதில் ஒருவர் மீது 2016ல் கொள்ளை வழக்கு பதிவாகி இருக்கிறது.
ராணுவ அதிகாரிகளை தாக்கி, அவர்களின் கண் முன்னே அவர்களது தோழியை பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் நாடெங்களிலும் அதிர்வலைகளை ஏற்படுத்தி கண்டனங்கள் வலுத்து வருகின்றன.
’’மத்தியப் பிரதேசத்தில் ராணுவ வீரர்கள் இருவர் மீதான வன்முறையும், அவர்களது துணைவியார் பலாத்காரமும் செய்யப்பட்ட சம்பவம் ஒட்டுமொத்த சமூகத்தையும் அவமானப்படுத்தும் அளவுக்கு உள்ளது’’ என்று வேதனை தெரிவித்திருக்கிறார் நாடாளுமன்ற எதிர்க்கட்சித்தலைவர் ராகுல்காந்தி.
அவர் மேலும், ‘’பாஜக ஆளும் மாநிலங்களில் சட்டம்-ஒழுங்கு சரியாக இல்லை. பாஜக ஆளும் மாநிலங்களில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து வருவது மிகவும் கவலையளிக்கிறது.
பாஜக ஆளும் மாநிலங்களின் நிர்வாகத்தின் முழுமையான தோல்வி அடைந்ததன் விளைவுதான் குற்றவாளிகள் இப்படி அச்சமின்மையுடன் இருக்கிறார்கள். இதன் காரணமாக, நாட்டில் வளர்ந்து வரும் பாதுகாப்பற்ற சூழல் இந்தியாவின் மகள்களின் சுதந்திரத்தையும் அபிலாஷைகளையும் கட்டுப்படுத்துகிறது.
இதற்கு சமூகமும், அரசாங்கமும் வெட்கப்பட வேண்டும், தீவிரமாகச் சிந்திக்க வேண்டும் என்று கொதித்தெழுந்திருக்கும் அவர், நாட்டின் மக்களைப் பாதுகாக்கும் பொறுப்பை இன்னும் எத்தனை நாளைக்குத்தான் கண்டுகொள்ளாமல் இருப்பார்கள்? என்று வெடித்திருக்கிறார்.
’’வீடு முதல் அலுவலகம் வரையிலும் பெண்களுக்கு பாதுகாப்பில்லை. மக்கள் தைரியத்தை இழந்துவிட்டனர். நாட்டில் தினமும் 86 பெண்கள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகின்றனர். மொத்த மக்கள் தொகையில் பாதிபேர் பாதுகாப்பற்றவர்களாக உள்ளனர்’’ என்று தனது கண்டனத்தை பதிவு செய்திருக்கிறார் பிரியங்கா காந்தி.