லெபனான் நாட்டில் பேஜர்கள், வாக்கி டாக்கிகள் உட்பட வயர்லெஸ் தகவல் தொடர்பு சாதனங்கள் வெடித்து சிதறியதில் இரு குழந்தைகள் உட்பட 32 பேர் உயிரிழந்த நிலையில், ஆயிரக்கணக்கானோர் படுகாயங்களுடன் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
லெபனானின் அரசியல் கட்சியாகவும் ஆயுதமேந்திய போராளி இயக்கமாகவும் செயல்பட்டு வரும் ஹிஸ்புல்லா இயக்கத்தினரை குறிவைத்து இந்த தகவல் தொடர்பு சாதனங்கள் வெடிப்பு சம்பவம் நிகழ்த்தப்பட்டுள்ளது.
கடந்த செவ்வாய்(17/09/2024) அன்று நடந்த முதல் தாக்குதல் சம்பவத்தில் லெபனான் முழுவதும் பேஜர்கள் வெடித்ததில் 12 பேர் கொல்லப்பட்ட நிலையில், 3000-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.
தொடர்ந்து அடுத்த மறுநாளே(18/09/2024) , வாக்கி டாக்கிகள், சோலார் பேனல்கள், கைரேகை பதிவு இயந்திரங்கள் உள்ளிட்ட சாதனங்கள் வெடித்ததில் 20 பேர் கொல்லப்பட்டதாக லெபனான் அரசு தெரிவித்துள்ளது.
இஸ்ரேலின் நீண்டகால திட்டம்
வயர்லெஸ் சாதனங்கள் வெடிப்பு சம்பவத்தை, இஸ்ரேல் தான் நிகழ்த்தியதாக ஹிஸ்புல்லா குற்றம் சுமத்தியுள்ளது.
இதற்கு இஸ்ரேலிய அரசு மவுனம் காத்து வந்தாலும், இந்த மிகப் பெரிய தொழில்நுட்பத் தாக்குதலை நீண்டகாலமாக திட்டம் தீட்டி இஸ்ரேல் தான் செயல்படுத்தி உள்ளதாகவே சர்வதேச செய்தி நிறுவனங்கள் கூறுகின்றன.
லெபனானின் அண்டை நாடான இஸ்ரேலுக்கும் ஹிஸ்புல்லா இயக்கத்துக்கும் இடையிலான மோதல், காசா போா் விவகாரத்தால் புதிய உச்சத்தில் இருக்கும் சூழலில் இந்தச் சம்பவம் நடந்துள்ளது. இது இஸ்ரேலின் அதீத திறன் கொண்ட தொழில்நுட்பத் தாக்குதலாக இருக்கும் என நம்பப்படுகிறது.
பேஜர்களை ஒரே நேரத்தில் வெடிக்க வைப்பது ஹிஸ்புல்லாவுக்கு எதிரான “ஆல்-அவுட்” தாக்குதலின் நடவடிக்கையின் ஒரு பகுதியாக நீண்டகாலம் முன்பே இஸ்ரேல் திட்டமிட்டு இருந்ததாக, பெயரிட விரும்பாத அமெரிக்க மற்றும் இஸ்ரேலிய அதிகாரிகள் Axios செய்தி நிறுவனத்திடம் கூறியுள்ளனர்.
ஆனால், சமீப நாட்களில் இஸ்ரேலின் இந்த திட்டம் ஹிஸ்புல்லாவுக்கு தெரியவந்ததோ என்ற அச்சத்தால், முன்கூட்டியே இந்த பேஜர்களை இஸ்ரேல் வெடிக்க செய்துள்ளதாக கூறப்படுகிறது.
இஸ்ரேலிய அதிகாரிகள் இந்த குற்றச்சாட்டுகள் குறித்து கருத்து தெரிவிக்கவில்லை என்றாலும், பெரும்பாலான ஆய்வாளர்கள் தாக்குதலின் பின்னணியில் இஸ்ரேல் இருக்கலாம் என்று ஒப்புக்கொள்வதாக BCC செய்தி நிறுவனம் கூறியுள்ளது.
“இஸ்ரேல் தனது இலக்கைக் கண்காணிக்க தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதில் ஒரு முன்னோடி என்பதை நாம் அறிவோம், இந்தத் தாக்குதலின் வீரியம் இதுவரை நாம் பார்த்திறாத ஒன்று என்று Lancaster பல்கலைக்கழக பேராசிரியர் சைமன் மாபோன் BBC-யிடம் கூறியுள்ளார்.
தாக்குதல்களின் பின்னணியில் இஸ்ரேல் இருப்பதாக குற்றம் சாட்டிய ஹிஸ்புல்லா தனது அறிக்கையில், “பொதுமக்களையும் குறிவைத்து நடத்தப்பட்ட இந்த குற்றவியல் நடவடிக்கைக்கு இஸ்ரேல் தான் முழுப் பொறுப்பு” என்றும் கூறியுள்ளது.
‘தைவானில் தயாரிக்கப்பட்ட பேஜர்கள்’
லெபனானில் வெடித்த பேஜர்கள் தைவானின் Gold Apollo நிறுவனத்தின் பெயரில் ஒரு ஐரோப்பிய நிறுவனத்தால் தயாரிக்கப்பட்டது என தெரியவந்துள்ளது.
இது குறித்து அறிக்கை வெளியிட்டுள்ள Gold Apollo நிறுவனம், பேஜகளை நாங்கள் தயாரிக்கவில்லை என்றும், இந்த சம்பவத்தால் எங்களின் நிறுவனமும் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாக குற்றம்சாட்டியுள்ளது.
ஐரோப்பிய நாடான ஹங்கேரியை சேர்ந்த BAC என்ற நிறுவனம் Gold Apollo-வின் பிராண்ட் பெயரை பயன்படுத்தி பேஜர்களை தயாரித்து விநியோகித்துள்ளது.
இஸ்ரேலிய உளவுத்துறை உடன் இணைந்து BAC நிறுவனம், வெடிமருந்து பொருத்தப்பட்ட பேஜர்களை தயாரித்ததாக குற்றம் சாட்டப்படுகிறது.
கடந்த 5 மாதங்களுக்கு முன்பு தைவானில் இருந்து லெபனான் அரசு பேஜர்களை இறக்குமதி செய்ததும் தெரியவந்துள்ளது.
‘ஜப்பானில் தயாரிக்கப்பட்ட வாக்கி டாக்கிகள்’
லெபனான் தொலைத்தொடர்பு அமைச்சகம் புதன்கிழமை(18/09/2024) வெடித்த வாக்கி டாக்கிகள் ‘Icom V82s’ என அடையாளம் கண்டுள்ளது.
ஜப்பானின் ஒசாகாவை தளமாகக் கொண்ட Icom நிறுவனம், V82s யூனிட்டின் உற்பத்தியை நிறுத்தி சுமார் 10 ஆண்டுகள் ஆகிறது என விளக்கம் அளித்துள்ளது.
10 ஆண்டுகளுக்கு முன்னர் மத்திய கிழக்கு நாடுகளுக்கு Icom நிறுவனம் ஏற்றுமதி செய்த சாதனங்கள் தான், இந்த வெடிப்புச் சம்பவங்களில் பயன்படுத்தப்பட்டதா என்பதை நிறுவனத்தால் உறுதிப்படுத்த முடியாது என்றும் அந்நிறுவனம் கூறியுள்ளது.
இது குறித்து மேற்படி விசாரணையை நடத்த உள்ளதாகவும் Icom நிறுவனம் அறிவித்துள்ளது.
வயர்லெஸ் சாதனங்கள் வெடித்தது எப்படி?
ஹிஸ்புல்லாவுக்கு பேஜர்கள் கிடைக்கும் முன்பு அதில் மிகச் சிறிய வெடிக்கும் சாதனங்கள் பொறுத்தபட்டிருக்கலாம். பின்னர் அவை அனைத்தும் ஒரே நேரத்தில் ரேடியோ சிக்னல் மூலம் தூண்டப்பட்டிருக்கலாம், என்று Associated Press செய்தி நிறுவனம் கூறியுள்ளது.
ஒரு வெடிக்கும் சாதனத்திற்கு ஒரு கொள்கலன்(Container), ஒரு பேட்டரி(Battery), ஒரு தூண்டுதல் சாதனம்(Triggering Device), ஒரு டெட்டனேட்டர் (detonator) மற்றும் வெடிமருந்து(Explosives) ஆகிய 5 முக்கிய கூறுகள் தேவைப்படும்.
சாதாரணமாக பேஜரில் ஏற்கனவே 3 கூறுகள் இருக்கும்; டெட்டனேட்டரையும் வெடிமருந்தை மட்டும் சேர்த்தால் போதும் என கூறப்படுகிறது.
ஹிஸ்புல்லா-இஸ்ரேல் இடையே முழு நீண்ட போர் மூளுமா?
இஸ்ரேலின் பரம எதிரியான ஈரானுடன் ஹிஸ்புல்லா இயக்கம் இணக்கமாக இருந்து வருகிறது. ஈரானின் ‘Axis of Resistance’ என்ற ராணுவ கூட்டணியில் அங்கம் வகித்து வரும் ஹிஸ்புல்லா கடந்த பல மாதங்களாக இஸ்ரேலுடன் சிறிய அளவிலான போரில் ஈடுபட்டுள்ளது.
இஸ்ரேலின் வடக்கு எல்லையில் ஹிஸ்புல்லா இயக்கம் அடிக்கடி ராக்கெட் தாக்குதலகளை நடத்தி வந்த நிலையில், இந்த வயர்லெஸ் சாதனங்கள் வெடிப்பு சம்பவத்தால் நிலைமை கட்டுக்கடங்காமல் போகலாம் என்ற அச்சம் நிலவுகிறது.