உலகின் பழமையான நாகரிகங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது சிந்துசமவெளி நாகரிகம். வரலாற்று ஆய்வுகளின் படி சிந்து சமவெளி நாகரிகம் திராவிட நாகரிகம் என்று இருக்கையில் அதை ஆரிய நாகரிகம் என்று மாற்றி இந்திய வரலாற்றை மாற்றி எழுத முனைகிறது மத்திய பாஜக அரசு. இதற்கு கடுமையான கண்டனங்கள் வலுத்து வருகின்றன.
பிராமணர்கள் ராஜ்ஜியம் – மத்திய அரசின் பாரபட்சம்:
திராவிடத்தொடர்பினை துண்டிக்கும் குறிக்கோளுடன் சிந்து சமவெளி நாகரிகத்தின் வரலாற்றை பாஜக தலைமையிலான மத்திய அரசு மாற்ற முயற்சிக்கிறது என்றும், இதற்காக ஒரு குழுவினை மத்திய அரசு அமைத்துள்ளது என்றும் திமுக பொதுச்செயலாளரும், தமிழ்நாடு நீர்வளத்துறை அமைச்சருமான துரைமுருகன் குற்றம்சாட்டுகிறார்.
அவர் தனது குற்றச்சாட்டில், ‘’ஹரப்பா, மொகஞ்சதாரோவை திராவிட நாகரிகம் என்று வரலாற்று ஆய்வுகள் கூறி வருகின்ற நிலையில், இந்திய வரலாற்றை மாற்றி எழுத மத்திய அரசால் நியமிக்கப்பட்டிருக்கும் குழு, ’அது திராவிட நாகரிகம் அல்ல; ஆரியர்களின் நாகரிகம், சரஸ்வதி நாகரிகம்’ என்கிறது.
மத்திய அரசால் நியமிக்கப்பட்டிருக்கும் அந்தக்குழுவில் 17 பேர் இடம் பெற்றுள்ளனர். இதில் அரசு அதிகாரிகள் 3 பேர் இடம் பெற்றுள்ளனர். மீதமுள்ள 14 உறுப்பினர்களும் பிராமணர்களே. இந்தக்குழுவில் மேலும் ஒருவர் தேவைப்பட்டதால், நம் வரலாற்றை எழுத கனடாவில் இருந்து ஒரு பிரமாணரை தேர்ந்தெடுத்துள்ளார்கள். அவர் கனடா பிராமண சங்கத்தின் தலைவராக உள்ளார்.
மத்திய பாஜக அரசு தனது நிலைப்பாட்டினை மாற்றிக்கொள்ள வேண்டும். இல்லாவிட்டால் இந்த விவகாரத்தில் திமுக தனது பலத்தை வெளிப்படுத்தும்’’ என்று கூறியிருந்தார்.
சொன்னபடியே திமுக தனது பலத்தை வெளிப்படுத்தத் தொடங்கிவிட்டது. சிந்து சமவெளி நாகரிகம் திராவிட நாகரிகமே என்று 20.9.1924 அன்று இந்திய தொல்லியல் துறையின் தலைவராக இருந்த சர் ஜான் மார்ஷல் அறிவித்ததை தற்போது ஓங்கி ஒலிக்கத்தொடங்கிவிட்டது.
சிந்துவெளி பண்பாட்டுக் கருத்தரங்கம்:
சிந்து சமவெளி நாகரிகம் திராவிட நாகரிகமே என்று சர் ஜான் மார்ஷல் அறிவித்து 100 ஆண்டுகள் நிறைவு பெறுவதை முன்னிட்டு, தமிழ்நாடு அரசின் சார்பில் சென்னையில் விரைவில் பன்னாட்டு அறிஞர்கள் கலந்துகொள்ளும் ‘சிந்துவெளி பண்பாட்டுக் கருத்தரங்கம்’ நடத்தப்படும் என்று திமுக தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலின் அறிவித்திருக்கிறார். சர் ஜான் மார்ஷலை போற்றுகின்ற வகையில் மிக முக்கியமான இடத்தில் அவரது சிலையும் அமையும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருக்கிறார்.
திராவிட நாகரிகம்தான் – ஆய்வுகளும் சான்றுகளும்:
மொழியியல் அடிப்படையில் ஆய்வு செய்தாலும் சரி, கலாச்சாரக்கூறுகளின் அடிப்படையில் ஆய்வு செய்தாலும் சரி, கீழடியோடும் திராவிட மொழிகளோடும் ஒத்துப்போகிற நாகரிகமாகத்தான் சிந்து சமவெளி நாகரிகம் உள்ளது.
மரபணு ஆய்வுகளின்படி சிந்துவெளியில் வாழ்ந்த மக்கள் கருப்பு நிற திராவிடர்கள். வெள்ளை நிற ஆரியர்கள் அல்ல.
ஆரியர்களின் வருகைக்கு முன்னரே சிந்துசமவெளி நாகரிகம் சிறந்து இருந்தது. அங்கே இருந்ததும் திராவிடர்களே. அவர்கள் பேசியதும் தொல் திராவிட மொழியே என்பதற்கான பல்வேறு சான்றுகளும், ஆய்வுமுடிவுகளும் உள்ளன. ’’சிந்துவெளி நாகரிக கால மக்களுக்கு எந்தவிதத்திலும் சமஸ்கிருதத்துடன் தொடர்பில்லை. அவர்கள் ஒன்றுக்கும் மேற்பட்ட மொழிகளைப் பேசினார்கள். அவை அனைத்தும் திராவிட மொழிக் குடும்பத்தைச் சேர்ந்தவை’’ என்பதே சர் ஜான் மார்ஷல் முன்வைத்த முக்கிய ஆய்வு முடிவுவாக உள்ளது.
ஆரியர்களின் வருகைக்கு முன்னர் இந்தியா முழுவதுமே திராவிடர்களே பரவியிருந்தனர் என்பதற்கும், திராவிட மொழிக்குடும்பமே சிந்து சமவெளியிலும் இருந்தது என்பதற்கு பல்வேறு வரலாற்று ஆய்வுமுடிவுகள் சான்றாக உள்ளன.
திராவிட மொழிக் குடும்பத்தைச்சேர்ந்த பிராகுயி எனும் மொழி இப்போதும் பலூசிஸ்தானத்தில் பேசப்படுகிறது என்று நமித் அரோரா எனும் ஆய்வாளர் ’இந்திய நாகரீகம்’ எனும் தனது ஆய்வு நூலில் விளக்கி உள்ளார்.
“தமிழ் அல்லது திராவிடம் என்பது தென்னிந்தியாவின் மொழியாக மட்டும் இருக்கவில்லை. மாறாக அது ஆரியர்கள் வருவதற்கு முன்னர் இந்தியா முழுவதும் இருந்தது” என்றே டாக்டர் அம்பேத்கரும் திராவிட நாகரிகத்திற்கு வலு சேர்க்கிறார்.
சிந்து சமவெளியில் கடவுள், மதம் சார்ந்த அடையாளங்கள் கண்டு பிடிக்கப் படவில்லை. எந்த மன்னரின் கட்டுப்பாட்டிலும் சிந்து சமவெளி நாகரிகம் இல்லை. அங்கே எந்த அரண்மனையும் இல்லை. மக்களின் வாழ்வியல் சார்ந்த மண் பாண்டங்கள், அச்சுக்கள், சிறிய களிமண் பொம்மைகள் ஆகியவை மட்டுமே அங்கே கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. கீழடியிலும் இதே வாழ்வியல் கூறுகள்தான் உள்ளன. இங்கும் பானைகளும், ஓடுகளும்தான் கிடைக்கின்றனவே தவிர, மதம் சார்ந்த சிலைகளோ, கடவுள் சார்ந்த வழிபாட்டுக் கூடங்களோ கிடைக்கப்பெறவில்லை. இந்த ஒற்றுமை மிக முக்கியமானது.
’ராஜேஷ் பி.என்.ராவ்’ ஆய்வின்படி, சிந்து சமவெளியில் கண்டறியப்பட்டுள்ள எழுத்துகளுக்கும் வடமொழிக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. ஆனால், தென்னிந்திய மொழிகள் பெரும்பாலும் ஒத்துச்செல்கிறது என்பது தெரியவந்திருக்கிறது.
‘பகத்தா அன்சுமலி முகபத்யாயா’ எனும் மென்பொருள் பொறியாளர் தனது ஆய்வின்படி, தொல் திராவிட மொழியைப்பேசிய சிந்துவெளி மக்கள் ஆரியர்களின் வருகைக்கு பின் தென்ந்திய பகுதிகளுக்கு இடம் பெயர்ந்திருக்கலாம் என்று கருதுகிறார்.
யானைகள் கன்னடத்தில் பில்லு என்றும், பிள்ளுவம் என்று தமிழிலும், பிளிரு என தெலுங்கிலும் அழைக்கப்படுகின்றன. சிந்து வெளியில் யானையை ‘பிலு’ என்று குறித்திருக்கிறார்கள். இவை அனைத்திற்கும் வேர்ச் சொல்லாக இருப்பது ‘பல்’. மொழியியல் அறிஞர்கள், ‘பிலு’ என்கிற வார்த்தை சமஸ்கிருதத்தில் பின்னாட்களில் திராவிட மொழியில் இருந்து பெறப்பட்டது என்கின்றனர். இதன் மூலம் சிந்து சமவெளியில் பேசியது தொல் திராவிட மொழிதான் என்கிறார் பகத்தா.
சிந்துசமவெளி நாகரிகம் அப்படியே தமிழ்க் கலாச்சாரத்துடன் ஒத்துப்போகிறது இத்தனை ஆதாரச்சான்றுகள் இருந்தும் இதை ஒத்துக்கொள்ளாமல் ஆரியர் நாகரிகம் என்று மாற்றும் முயற்சியில் இருக்கும் மத்திய பாஜக அரசுக்கு கண்டனங்கள் வலுக்கிறது.