தாம்பரம் மாநகர காவல் பொது அறிவிப்பு – பிரகடணப்படுத்தப்பட்ட குற்றவாளி என்று காஞ்சிபுரம் மாவட்டத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்பு போஸ்டர்கள் பரபரப்பை ஏற்படுத்தின. அந்த போஸ்டரில் பிரகடணப்படுத்த குற்றவாளி சீசிங் ராஜா முதல் கைதாகி, மறுநாள் என்கவுண்டர் செய்யப்பட்டார்.
சில தினங்களுக்கு முன்பு ஒட்டப்பட்டிருந்த அந்த பொது அறிவிப்பு போஸ்டரில், ‘’பொதுமக்களுக்கு இதன் மூலம் தெரிக்விப்பது என்னவென்றால், இந்த அறிவிப்பில் உள்ள புகைப்படத்தில் காணப்படும் ராஜா என்கிற சீசிங் ராஜா, எண்:54, சுபாஷ் சந்திர போஸ் தெரு, ராமகிருஷ்ணா புரம், கிழக்கு தாம்பரம், சென்னை -59 என்பவர், செங்கல்பட்டு மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நீதிமன்ற விசாரணையில் உள்ள எஸ்.சி. எண்:121/2023 வழக்கில் குற்றவாளி ஆவார்.
இவ்வழக்கில் முறைப்படி அழைப்பாணை வழங்கப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜராகாததால் பிடியாணை பிறப்பிக்கப்பட்டது. பிடியாணை பிறப்பிக்கப்பட்ட பிறகும் தொடர்ந்து தலைமறைவாக இருந்து வருகிறார்.
நீதிமன்றத்தால் உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்ட பிறகும் தொடர்ந்து தலைமறைவாக இருப்பதால் 20.8.2024 அன்று சீசிங் ராஜா என்பவர் பிரகடணப்படுத்தப்பட்ட குற்றவாளியாக அறிவித்து செங்கல்பட்டு அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இவரைப்பற்றிய தகவல் தெரிந்தால் தெரிவிக்கவும்’’ என்று சொல்லி தொலைபேசி எண்களுடன் இருந்தது.
ஆற்காடு சுரேஷ் உள்ளிட்ட ரவுடிகளுடன் இருந்த சீசிங் ராஜாவை இதையடுத்து போலீசார் தீவிரமாக தேடி வந்தனர். ஆந்திர மாநிலம் கடப்பாவில் பதுங்கி இருந்த சீசிங் ராஜாவை செப்டம்பர் மாதம் 22ம் தேதி அன்று தனிப்படை போலீசார் கைது செய்து சென்னை அழைத்து வந்தனர்.
கைதான சீசிங்ராஜாவிடம் போலீசார் நடத்திய விசாரணையில், சென்னை நீலாங்கரை கெனல் கிராஸ்ஜ் பகுதியில் துப்பாக்கி உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களை மறைத்து வைத்திருப்பது தெரியவந்தது. இதனால் அந்த இடத்திற்கு அழைத்துச்சென்று அடையாளம் காட்டச் சொன்னபோது, திடீரென்று பட்டாக்கத்தியால் போலீசாரை வெட்ட முயற்சித்ததாகவும், உடனே சீசிங் ராஜாவை தற்காப்புக்காக சுட்டதில் அவர் உயிரிழந்துவிட்டார் என்றும் காவல்துறை தரப்பில் கூறப்படுகிறது.
இந்த என்கவுண்டர் குறித்து சென்னை தெற்கு மண்டல இணைய ஆணையர் சிபி சிக்கரவர்த்தி, ‘’ சீசிங் ராஜா மீது 6 கொலை வழக்குகள் உள்பட 39 வழக்குகள் உள்ளன. இவர் எந்த வாரண்டிற்கும் நீதிமன்றத்தில் ஆஜரானதில்லை. 10 வாரண்ட் நிலுவையில் உள்ள நிலையில் தலைமறைவாகவே இருந்து வந்தார்.
ஒருவரை துப்பாக்கியை காட்டி மிரட்டி பணம் பறித்த வழக்கில்தான் சீசிங் ராஜா கைது செய்யப்பட்டார். சட்டப்படி தண்டனை வாங்கித்தர நினைத்தோம். போலீசாரின் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படும் வகையில் நடந்துகொண்டதால் இந்த என்கவுண்டர் நடந்துவிட்டது’’ என்று விளக்கமளித்துள்ளார்.
அவர் மேலும், ‘’நாங்கள் நடத்திய விசாரணையில் ஆம்ஸ்ட்ராங் கொலைக்கும் சீசிங் ராஜாவுக்கும் தொடர்பில்லை என்பது தெரியவந்துள்ளது.
சீசிங் ராஜாவுடன் சேர்த்து சென்னையில் அடுத்தடுத்து 3 என்கவுண்டர் நடந்துள்ளது பெரும் விவாதங்களை எழுப்பி இருக்கிறது.