போலீசின் சாகசமாக கொண்டாடப்படுகின்றன என்கவுன்ட்டர் கொலைகள். தமிழ்நாட்டில் கடந்த 13 மாதத்தில் 12 ரவுடிகள் என்கவுன்ட்டர் செய்யப்பட்டிருக்கிறார்கள் என்பது தலைப்புச் செய்தியாக வெளியாகிறது. பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் படுகொலை வழக்கில் கைது செய்யப்பட்ட ரவுடி திருவேங்கடம் சில வாரங்களுக்கு முன் போலீசின் என்கவுன்ட்டரில் பலியான நிலையில், தற்போது சீசிங் ராஜா என்ற ரவுடி என்கவுன்ட்டருக்கு இரையாகியிருக்கிறார். திருச்சி ஸ்ரீரங்கம் அருகே ஜம்புகேஸ்வரன் என்ற ரவுடியைப் போலீசார் சுட்டுப் பிடித்திருக்கிறார்கள்.
சட்டம் ஒழுங்குக்கு சவாலான சூழல்கள் ஏற்படும்போது காவல்துறையின் நடவடிக்கைகளில் முதன்மையானதாக என்கவுன்ட்டர் அமைகிறது. சந்தனக்காடு வீரப்பன், அயோத்திகுப்பம் வீரமணி, வெங்கடேஷ் பண்ணையார், மணல்மேடு சங்கர் எனப் பிரபலமான நபர்களின் என்கவுன்ட்டர் அரசியல் அரங்கிலும் தாக்கத்தை ஏற்படுத்தின. தற்போது நடைபெறும் என்கவுன்ட்டர்கள் அன்றாட செய்திகளில் ஒன்றாகக் கடந்து விடுகிறது. காவல்துறை இப்படிப்பட்ட நடவடிக்கைகளில் இறங்கினால்தான் பொதுமக்களுக்க ‘நம்பிக்கை’ வருகிறது.
கைது செய்யப்பட்ட ரவுடி, காவல்நிலைய பாத்ரூமில் வழுக்கி விழுந்து கைகளையோ கால்களையோ ஒடித்துக் கொள்வது தமிழ்நாட்டில் கடந்த சில ஆண்டுகளாகத் தொடர்ந்து வருகின்றன. சட்டத்திற்கு சவாலாக இருந்த நபர் கைது செய்யப்பட்ட செய்தி கிடைத்ததுமே, ‘பாத்ரூமில் வழுக்கி விழுவார் என்று எதிர்பார்க்கிறோம்’ என சமூக வலைத்தளங்களில் பதிவுகளைக் காண முடிகிறது. பொதுமக்களின் எதிர்பார்ப்புக்கேற்ப, எந்தவொரு காவல்நிலையத்தின் பாத்ரூமும் ப்ளீச்சிங் பவுடரால் சுத்தம் செய்யப்படுவதில்லை போலும்.
சீசிங் ராஜா என்ற ரவுடி 39 குற்ற வழக்குகளில் தொடர்புடைய நபர் என்றும், பல முறை குண்டர் சட்டத்தில் அடைக்கப்பட்டவர் என்றும், கொடூரக் குற்றங்களில் ஈடுபட்டவர் என்றும் பதிவாகியுள்ளது. இவரைப் போல கொலை, கொள்ளை போன்றவற்றில் கைதேர்ந்த ரவுடிகள் என்கவுன்ட்டரில் பலியாகும்போது போலீஸ் தரப்பில், “சம்பவ இடத்திற்கு அழைத்துச்சென்று, குற்றச் செயல் எப்படி நடந்தது என்று விசாரித்துக்கொண்டிருந்தபோது, போலீஸை கைதி துப்பாக்கியால் சுட்டார், அரிவாளால் வெட்டினார். போலீசார் தங்களைப் பாதுகாத்துக்கொள்ள திருப்பிச் சுட்டதில் கைதி பலியானார்’ என்பதுதான். அதற்கேற்ப, போலீசாரின் சுண்டு விரலிலோ, கால் நகத்திலோ துப்பாக்கி குண்டு பாய்ந்து, கட்டுப்போட்ட நிலையில் இருக்கும் படமும் வெளியாகும்.
பல கொலைகளை கச்சிதமாகவும், ஈவு இரக்கமின்றி கொடூரமாகவும் செய்த குற்றவாளி, போலீசாரை சுடும்பபோதும் வெட்டும்போதும் மட்டும் உயிருக்கு பாதிப்பில்லாத இடங்களாகப் பார்த்து தாக்குவது என்பது ‘தொடர்கதை’யாக இருக்கிறது. காக்கிச்சட்டைகளைப் பார்த்தால், ‘தாய்ப்பாசத்தில் மிஞ்சியவர்களாக’ கொடூரக் குற்றவாளிகளுக்கும் இரக்கம் வந்துவிடுகிறது. இத்தகைய என்கவுன்ட்டர் கதைகள் தமிழ்நாட்டில் மட்டுமல்ல, இந்தியாவின் பல மாநிலங்களிலும் தொடர்ந்து கொண்டிருக்கிறது. தீவிரவாதிகள், நக்சலைட்டுகள், மாவோயிஸ்ட்டுகள் என என்கவுன்ட்டர் கதைகளில் முத்திரை குத்தப்பட்டுவிடும். உரிமை கோருபவர்களை அர்பன் நக்சல்கள் என்று அரசாங்கமே சொல்லும்போது, காவல்துறை தனது நடவடிக்கைகளைத் தொடர்வது எளிதாகிவிடுகிறது.
பொதுமக்களின் பார்வையில் இத்தகைய என்கவுன்ட்டர்கள் வரவேற்பு பெறுவதற்கு காரணம், இந்தியாவின் சட்டரீதியான நியாயத் தீர்ப்புகள் வருவதற்கு காலதாமவதுதான். அதுவரை இத்தகைய குற்றவாளிகளுக்கு அரசாங்க செலவில் சோறு போட்டு, பாதுகாப்பு அளித்து, ஜாமீனும் கிடைக்கக்கூடிய சூழல்கள் இருப்பதை மக்கள் விரும்பவில்லை. விரைவான தீர்ப்பு, உடனடி தண்டனை என்று மூன்று மணி நேர திரைப்படம் போல வழக்குகள் முடித்துவைக்கப்பட வேண்டும் என எதிர்பார்க்கிறார்கள். அதனால்தான், “அரசாங்கத்துக்கு ஆண்டுக்கணக்கில் செலவு வைக்காமல், ஒரே ஒரு தோட்டாவை மட்டும் செலவு செய்து தண்டனை கொடுத்தால் போதும்’ என்கிற சினிமா பஞ்ச் வசனம் பாணியிலானத் தீர்ப்புகளை வரவேற்கிறார்கள். இது நீண்டகாலத்திற்கான நிரந்தரத் தீர்வைத் தராது.
அதிகக் குற்றங்களில் ஈடுபட்ட ரவுடிகளின் ‘ஜாதகம்’ காவல்துறை அதிகாரிகளிடம் இருக்கும். எத்தகைய குற்றங்கள் அதிகம் நடக்கின்றன என்பதையும் அவர்கள் கவனித்தே வருவார்கள். அதன் பின்னணியில் யார்யார் இருக்கிறார்கள் என்பதையும் அறிவார்கள். அதிகரிக்கும் குற்றவகைகளையும் அதற்கு நேரடியாகவும் மறைமுகமாகவும் காரணமானவர்கள் யாராக இருந்தாலும் அவர்களை சட்ட நடவடிக்கைக்கு உட்படுத்தும் வலிமையும் சுதந்திரமும் காவல்துறையிடம் இருக்க வேண்டும். அதற்கான கட்டமைப்புகளை ஒன்றிய-மாநில ஆட்சியாளர்கள் உருவாக்க வேண்டும். அதற்கு மாறாக, குற்றவாளிகளுக்குத் ‘தண்டனை’ என்று காவல்துறையினர் தங்கள் கைகளில் சட்டத்தை எடுத்துக்கொள்வதும் குற்றமேயாகும்.