மதச்சார்பின்மை எனும் கொள்கை ஐரோப்பாவில்தான் உருவானது என்றும், இந்தியாவிற்கு மதசார்பின்மை தேவையில்லை என்றும் பேசிய ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு எதிர்க்குரல்கள் வலுக்கின்றன. கூட்டாட்சி முறையும் ஐரோப்பிய கொள்கையாகவே இருந்தது. கூட்டாட்சி முறைக்கு இந்தியாவில் இடமில்லை என்று அறிவித்துவிடலாமா? என்ற கேள்வியை எழுப்பி இருக்கிறார் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம்.
கன்னியாகுமரி மாவட்டம் திருவட்டாறில் வெள்ளிமலை இந்துதர்ம வித்யாபீடத்தின் பட்டமளிப்பு விழாவில் பங்கேற்ற ஆளுநர் ஆர்.என்.ரவி சனாதன தர்மம், மதசார்பின்மை குறித்து நீண்ட உரையாற்றினார்.
மதசார்பின்மை குறித்து பேசியபோது, ‘’சில சக்திகள் நம்மை பலவீனப்படுத்தவும், பிரிக்கவும் தொடர்ந்து வேலை செய்து வருகின்றன. மொழியை வைத்து நம்மை பிரிக்க முடியாது. வெள்ளைக்காரர்கள் சென்ற பின்னர் பல ஏமாற்று வேலைகள் இங்கே அரங்கேறின. நமக்கு தவறான கோட்பாடுகள் சொல்லப்பட்டன. அதில் முக்கியமானது மதச்சார்பின்மை. அரசியல் அமைப்பு சட்டத்தை எழுதும்போது, அரசியல் சாசனத்தில் மதச்சார்பின்மை எனும் வார்த்தை கொண்டு வர வேண்டுமா? என்ற ஆலோசனை வந்தது. ஆனால், மதச்சார்பின்மை எனும் வார்த்தை நமது அரசியல் சாசனத்தில் இடம்பெறவே இல்லை.
பின்னர் 25 ஆண்டுகள் கழித்து அவசரக்கால நிலை அமல்படுத்தப்பட்டபோது சில சமுதாயத்தினரை திருப்திப்படுத்துவதற்காகவே மதச்சார்பின்மை எனும் வார்த்தை சொருகப்பட்டது.
நாடாளுமன்ற விவாதத்தின் போது, நம் நாட்டில் உள்ள மதச்சார்பின்மை என்பது ஐரோப்பாவில் உள்ள மதச்சார்பின்மை அல்ல. ஐரோப்பிய மதச்சார்பின்மை என்பது ஐரோப்பிய ஆட்சியாளர்களுக்கும், அங்கிருக்கும் மதம் சார்ந்தவர்களுக்கும் உள்ள பிரச்சனையை தீர்க்கின்ற விதத்தில் கொண்டு வரப்பட்டது. உன் பங்கை நீ வைத்துக்கொள். என் பங்கை நான் வைத்துக்கொள்கிறேன் என்பதுதான் ஐரோப்பிய நாட்டு மதச்சார்பின்மை. இதை நம் நாட்டில் ஏற்றுக்கொள்ள முடியாது என்று சொன்னார்கள். நம் நாடு தர்மத்தின் அடிப்படையிலான நாடு. தர்மத்தின் அடிப்படையில் அனைவருமே சமம். சர்வ மத சமவத்துவம்தான் உண்மையான மதச்சார்பின்மை ஆகும்’’ என்று குறிப்பிட்டார்.
’’அரசியலமைப்பில் பிரதானமான மதச்சார்பின்மை ஐரோப்பாவில் இருந்து இறக்குமதி ஆனது என்றும், இதனால் இந்தியாவிற்கு மதச்சார்பின்மை தேவையற்றது என்ற ஆளுநர் ரவி, அரசியலமைப்பு சட்டத்திற்கு முரணாக செயல்படுகிறார். அரசமைப்பு சட்டத்திற்கு விரோதமாக செயல்படும் அவ ரை ஆளுநர் பதவியில் இருந்து நீக்க வேண்டும்’’ என்கிறார் காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ்.
’’நாட்டில் உ ள்ள அனைத்து மதங்களையும் அரசமைப்பு சட்டம் சமமாக பாவிக்கிறது. மக்கள் தங்களின் விருப்பத்திற்கு ஏற்ப ஒரு சமயதுதை ஏற்றுக்கொள்ளவும், அதை பரப்பவும் உரிமை கொண்டுள்ளார்கள். அரசு சமயம் என்றோ, அரசு ஆதரவு பெற்ற சமய்ம் என்றோ இந்தியாவில் எதுவும் இல்லை. ஆனால், இதற்கு கேடு விளைவிக்கின்ற வகையில் ஒரு மாநிலத்தின் ஆளுநரே மதச்சார்பின்மை கொள்கையினை விமர்சனம் செய்து மதவெறுப்பினை வளர்க்கும் வகையில் பேசி இருப்பது மிகப்பெரிய குற்றமாகும். ஆளுநரின் பேச்சு மதநல்லிக்கணத்தை சீர்குலைத்து கலவரத்தை தூண்டுகின்ற முயற்சியாகவே கருத வேண்டியதிருக்கிறது’’ என்கிறார் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை,
காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான ப.சிதம்பரம், ‘’திருவள்ளுவருக்கு காவி அங்கியை அணிவித்த தமிழக ஆளுநர், மதச்சார்பின்மை என்பது ஐரோப்பிய கருத்து என்றும் அதற்கு இந்தியாவில் இடமில்லை என்றும் இப்போது கண்டுபிடித்துள்ளார்.
அவர் சொல்வது சரி என்று வைத்துக்கொண்டால் கூட, கூட்டாட்சி என்பதும் ஐரோப்பிய கோட்பாடுதான். கூட்டாட்சி முறைக்கு இந்தியாவில் இடமில்லை என்று அறிவித்துவிடலாமா? என்ற கேள்வியை எழுப்பி இருக்கிறார்.
அவர் மேலும், ‘’ஒரு நபர், ஒரு வாக்கு என்பது ஒரு ஐரோப்பிய கோட்பாடுதான். அப்படி இருக்கும் போது சிலருக்கு வாக்களிக்கும் உரிமை கிடையாது’’ என்று அறிவித்து விடுவோமா?’’ என்று கேட்டிருக்கும் ப.சிதம்பரம்,
’’ஜனநாயகம் என்பது மன்னர்களால் ஆளப்பட்ட இந்தியாவிற்குத் தெரியாத ஐரோப்பிய கொள்கை. இந்தியாவுக்குத் தெரியாத ஒரு ஐரோப்பிய கோட்பாடு. அதனால், இந்த நாட்டில் ஜனநாயகம் புதைக்கப்படும் என்று அறிவித்துவிடாமா?’’ என்று ஆளுநருக்கு பதிலடி கொடுக்கும் விதமாக அவருக்கு அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பி இருக்கிறார்.