சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் கைதான செந்தில் பாலாஜிக்கு சுமார் 471 நாட்களுக்குப் பிறகு பிணை கிடைத்து சென்னை புழல் சிறையிலிருந்து வெளியே வந்துள்ளார்.
அதிமுக ஆட்சிக் காலத்தில் போக்குவரத்துத் துறை அமைச்சராக இருந்தபோது வேலை வாங்கி தருவதாக பணம் பெற்ற குற்றச்சாட்டில் அமலாக்கத்துறையால் கடந்த 2023 ஜூன் மாதம் கைதான செந்தில் பாலாஜிக்கு உச்சநீதிமன்றம் பிணை வழங்கியுள்ளது.
செந்தில் பாலாஜிக்கு பிணை வழங்கியதுடன் நீதிபதி அபய் எஸ் ஓகா தலைமையிலான 3 நீதிபதிகள் அடங்கிய உச்சநீதிமன்ற அமர்வு சில முக்கிய சட்டக் கருத்துகளையும் கூறி இருக்கிறது.
உச்ச நீதிமன்றம் கூறியது பின்வருமாறு,
பணமோசடி தடுப்புச் சட்டத்தின்(PMLA) பிரிவு 4-ன் கீழ், செந்தில் பாலாஜி 15 மாதங்களுக்கும் மேலாக சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
PMLA சட்டப் பிரிவு 4-ன் கீழ் குறைந்தபட்ச தண்டனை 3 ஆண்டுகள்; அது 7 ஆண்டுகள் வரை நீட்டிக்கப்படலாம் என தெரிவிக்கிறது.
மனுதாரர் மீதான வழக்கில், அதிகபட்ச தண்டனை 7 ஆண்டுகள் ஆகும்; இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட நபர்கள் அதிக எண்ணிக்கையில் உள்ளனர்.
(குறிப்பு: அதாவது வேலை வாங்கி தருவதாக பணம் கேட்கப்பட்டாலும், அதை கொடுக்கும் அனைவரும் குற்றவாளிகளே என சட்டம் கூறுகிறது)
விசாரணை விரைவாக நடத்தப்பட்டாலும், 2,000-க்கும் மேற்பட்ட குற்றம் சாட்டப்பட்ட நபர்களிடம் விசாரணை நடத்தும் செயல்முறையும் பல மாதங்கள் எடுக்கும்.
குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டப் பிறகு, சட்ட நடவடிக்கைகளை எடுக்கவும் மேலும் பல காலம் எடுக்கும்.
விசாரணையில் 600-க்கும் மேற்பட்ட சாட்சியங்களை விசாரிக்க வேண்டியுள்ளது. சில சாட்சிகள் கைவிடப்பட்டாலும், பல நூறு பேர் சாட்சியம் அளிக்க வேண்டி இருக்கிறது.
மேலும் குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் பிரிவு 313 இன் கீழ் அவர்களின் வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட வேண்டும். இந்த விசாரணை செயல்முறைகள் 3 முதல் 4 ஆண்டுகளுக்குள் முடிவடைய வாய்ப்பில்லை.
டெல்லி முன்னாள் துணை முதல்வர் மனிஷ் சிசோடியாவுக்கு எதிரான அமலாக்கத்துறையின் வழக்கில், விசாரணையைக் கூட தொடங்காமல் நீண்ட கால சிறைவாசம் (17 மாதங்கள்) அனுபவிக்க வைப்பது, ‘விரைவான விசாரணைக்கான அடிப்படை உரிமையை’ மீறுவதாக இந்த உச்ச நீதிமன்றம் கருதியது.
தண்டனையின் ஒரு வடிவமாக ஜாமீன் மறுக்கப்படக் கூடாது என்றும், விசாரணையின்றி நீண்ட காலம் சிறையில் இருப்பது நியாயமற்றது என்றும் நீதிமன்றம் வலியுறுத்தி இருந்தது.
UAPA சட்டத்தின் கீழ் கைதான நஜீப் என்பவருக்கு எதிரான வழக்கில், ஒரு விசாரணையை நியாயமான நேரத்தில் முடிப்பது சாத்தியமில்லையா? என்பதை நீதிமன்றங்கள் பரிசீலிக்க வேண்டும் என்றும் குற்றம்சாட்டப்பட்டவர் நீண்ட காலம் சிறையில் இருப்பது ஜாமீனுக்கு வழிவகுக்கும் என்றும் இந்த நீதிமன்றம் கூறியது.
விசாரணை தாமதமாகினாலோ அல்லது தொடங்கப்படாவிட்டாலோ நீண்டகாலமாக குற்றம்சாத்தப்பட்டவர் சிறையில் இருப்பது அடிப்படை உரிமைகளை மீறும் ஒன்றாகும்.
“ஜாமீன் என்பது விதி, சிறை என்பது விதிவிலக்கு” என்ற கொள்கை தான் நீதித்துறையின் முடிவுகளை வழிநடத்துகிறது.
ஆயிரக்கணக்கான ஆவணங்கள் மற்றும் சாட்சிகளை உள்ளடக்கிய சிக்கலான வழக்குகளால் ஏற்படும் அதிக காலதாமதத்தின் காரணமாக, குற்றம் சாட்டப்பட்டவரை நீண்ட காலம் சிறையில் வைத்திருப்பதை நியாயப்படுத்த முடியாது.
ஜாமின் வழங்க கடுமையான சட்டப்பூர்வ விதிகள் இருந்தாலும், நீதிமன்றங்கள் அரசியலமைப்புப் பிரிவு 21-ன் கீழ் ஒருவரின் அடிப்படை உரிமையை மீறும் பட்சத்தில் ஜாமின் வழங்கலாம்.
நீண்ட காலம் ஒருவர் சிறைவாசம் அனுபவித்தப் பிறகு, இறுதியில் அவர் நிரபராதி என்ற காலதாமதமான பல தீர்ப்புகளும் வழங்கப்பட்டுள்ளன.
ஒரு விசாரணை நியாயமான கால வரம்புகளுக்கு அப்பால் செல்ல நேரிட்டால், குறிப்பாக PMLA அல்லது NDPS போன்ற சட்டங்களின் கீழ், இந்த நீதிமன்றம் ஜாமின் வழங்க பரிசீலிக்கலாம்.
PMLA இன் பிரிவு 45(1)(ii) போன்ற சட்டப்பூர்வ ஜாமீன் விதிகள், அடிப்படை உரிமைகளை மீறக்கூடிய நியாயமற்ற கைதுக்கான கருவிகளாக மாறாமல் இருப்பதை நீதிமன்றங்கள் உறுதி செய்ய வேண்டியது அவசியம்.
குற்றம் சாட்டப்பட்டவர்களால் விசாரணையில் தாமதம் ஏற்பட்டாலோ, சமூகத்திற்கு அச்சுறுத்தலாக இருந்தாலோ ஜாமீன் மறுக்கப்படலாம்.
செந்தில் பாலாஜி மீதான வழக்கு விசாரணை பல ஆண்டுகளாக முடிவடையாமல் இருக்கும் சாத்தியக்கூறுகள் இருக்கிறது.
“அவரை சிறையில் அடைப்பது சட்டப்பிரிவு 21-ன் கீழ் விரைவான விசாரணைக்கான அவரது அடிப்படை உரிமையை மீறும் என்பதால், நிபந்தனைகளுடன் ஜாமின் வழங்கி இந்த நீதிமன்றம் உத்தரவிடுகிறது” என தெரிவித்து உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.