டெல்லி சென்றுள்ள முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பிரதமர் நரேந்திர மோடியை நேரில் சந்தித்து 3 கோரிக்கைகள் அடங்கிய மனுவை அளித்துள்ளார். சென்னை மெட்ரோ இரயில் திட்டத்திற்கு நிதி, பள்ளிக் கல்வித் துறைக்கு நிறுத்தி வைக்கப்பட்டுள்ள நிதி விடுவிப்பு மற்றும் தமிழ்நாடு மீனவர்கள் பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு ஆகிய மூன்று கோரிக்கைகள் முன் வைக்கப்பட்டுள்ளது.
1. சென்னை மெட்ரோ இரயில் திட்டம் கட்டம் II- மத்திய அரசும் தமிழ்நாடு அரசும் 50:50 என்ற சமவீத மூலதனப் பங்களிப்பு அடிப்படையில் ஒப்புதல்
சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம், மத்திய அரசும் தமிழ்நாடு அரசும் தலா 50 சதவீத பங்கு மூலதனத்தைக் கொண்ட ஒரு கூட்டு முயற்சி நிறுவனமாகும். வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்களுக்கான அமைச்சகத்தின் செயலாளர் இதன் தலைவர் ஆவார். 54.1 கி.மீ மொத்த நீளத்துடன் இரண்டு வழித்தடங்களுடன் கூடிய சென்னை மெட்ரோ இரயில் திட்டம் கட்டம்–l ஐ மத்திய அரசும் தமிழ்நாடு அரசும் 50:50 என்ற சமவீத மூலதனப் பங்களிப்புடன் செயல்படுத்தியுள்ளது.
பொதுப் போக்குவரத்தினை உயர்த்திட வேண்டிய தேவையைக் கண்டறிந்து, தமிழ்நாடு அரசு சென்னை மெட்ரோ இரயில் திட்டம் கட்டம்-II-ற்கு ஒப்புதல் அளித்து, 50:50 என்ற சமவீத மூலதனப் பங்களிப்புடன் ஒப்புதல் வழங்கவும், இருதரப்பு மற்றும் பன்னாட்டு நிறுவனங்களிடமிருந்து நிதியைப் பெறுவதற்கும், மத்திய அரசிற்கு பரிந்துரை செய்திருந்தது. மத்திய அரசின் பங்களிப்பு வரப்பெறாத காரணத்தினால் பணிகளில் கடந்த ஆண்டு முதல் ஏற்பட்ட வேகக் குறைவு, நடப்பு நிதியாண்டிலும் பாதிப்பினை ஏற்படுத்தி வருகின்றது.
இதனால் இந்த ஆண்டின் மொத்த திட்டச் செலவினம் ரூ.8000 கோடியாகக் குறைக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக, பல்வேறு நிலைகளில் பணி நிறைவடையும் தேதிகள் ஒரு ஆண்டளவிற்கு தாமதமாகி, இறுதியாக கட்டிமுடிக்கும் தேதியை டிசம்பர் 2027-லிருந்து டிசம்பர் 2028 ஆக தள்ளி வைக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இது, மிகுதியான காலம் மற்றும் செலவின அதிகரிப்பை ஏற்படுத்திவிடும், இந்தியாவிலுள்ள பெரும்பாலான மெட்ரோ இரயில் திட்டங்களுக்கு மத்திய அரசு சமவீத மூலதனப் பங்களிப்பு அடிப்படையில் நிதி வழங்கியுள்ளது.
மத்திய அரசும் தமிழ்நாடு அரசும் 50:50 என்ற சமவீத மூலதனப் பங்களிப்புடன், கட்டம்-I-ற்கு வழங்கப்பட்டது போன்றும், பொது முதலீட்டுக் குழு பரிந்துரைத்துள்ளவாறும் விரைவில் ஒப்புதல் வழங்குமாறு தனது கோரிக்கை மனு மூலமாக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பிரதமரிடம் கேட்டுக்கொண்டுள்ளார்.
2. தமிழ்நாட்டிற்கான சமக்ரசிக்க்ஷா திட்டத்திற்கான நிதி ஒதுக்கீடு கோருதல்
தமிழ்நாட்டில் சமக்ரசிக்க்ஷா திட்டத்திற்கான நிதி ஒதுக்கீடானது, ஒவ்வொரு ஆண்டும் மத்திய அரசின் திட்ட ஏற்பளிப்புக்குழுவால் ஏற்பளிக்கப்பட்டு வழங்கப்பட்டு வருகிறது. ஏற்பளிக்கப்பட்ட நிதி ஒதுக்கீடானது மத்திய மற்றும் மாநில அரசால் 60:40 என்ற விகிதத்திலான பங்களிப்புடன் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
மத்திய அரசின் நிதி பங்களிப்புடன் பள்ளிக் கல்வித் துறையில் செயல்படுத்தப்பட்டு வரும் சமக்ரசிக்க்ஷா திட்டம் மூலம் தமிழ்நாட்டிலுள்ள அரசுப் பள்ளிகளில் பயின்று வரும் 43,94,906 மாணவர்கள், 2,21,817 ஆசிரியர்கள் மற்றும் 32,701 அலுவலகப் பணியாளர்கள் ஆகியோர் பயன்பெற்று வருகின்றனர். இத்திட்டத்திற்கான நிதி விடுவிக்கப்படவில்லையெனில் ஒன்றிய அரசானது மாணவர்களின் எதிர்காலத்தை வடிவமைப்பதில் மிகவும் முனைப்புடன் செயல்பட்டு வரும் மாநிலங்களில் ஒன்றான தமிழ்நாட்டிற்கு வழங்கிடும் முக்கியத்துவத்தை குறைப்பதாகவே அமைந்திடும்.
எனவே, தமிழ்நாட்டில் கல்வி பயிலும் 43,94,906 மாணவர்களின் எதிர்கால நலன்கருதி, ஏற்கெனவே சமக்ரசிக்க்ஷா திட்டத்தின் கீழ் செயல்பட்டு வரும் திட்ட பணிகளுக்கான நிதியினை உடனே விடுவித்திடுமாறு முதலமைச்சர் வலியுறுத்தி உள்ளார்.
3. இந்திய மீனவர்களின் பாரம்பரிய உரிமைகளை பாதுகாக்கவும், சிறைபிடிக்கப்பட்ட மீனவர்கள் மற்றும் அவர்களின் மீன்பிடி கலன்களை விடுவிப்பதற்கும் நிரந்தர தீர்வு ஏற்படுத்துதல்.
சமீப காலமாக அடுத்தடுத்து இந்திய மீனவர்கள் மீன்பிடி கலன்களுடன் இலங்கை அரசால் கைது செய்யப்படுகின்றனர். நீண்டகாலமாக தீர்க்கப்படாமல் இருக்கும் இந்தப் பிரச்சனையின் காரணமாக தமிழ்நாட்டில் உள்ள பெரும்பாலான ஏழை மீனவக் குடும்பங்களின் வாழ்வாதாரம் முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது.
2018-ஆம் ஆண்டுக்கு பிறகு சிறைபிடிக்கப்பட்ட 191 மீன்பிடி படகுகளின் தற்போதைய நிலை இதுவரை அறியப்படாமல் உள்ளதால் அலுவலர்கள் மற்றும் மீனவர்கள் அடங்கிய குழு படகுகளை ஆய்வு செய்ய அனுமதியினை பெற்றுத் தருமாறும் ஏற்கனவே கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. அண்மை காலத்தில் இலங்கை அரசால் சிறைபிடிக்கப்பட்ட படகுகளை நாட்டுடமையாக்கப்படும் கொள்கையால், இலட்சக்கணக்கான தமிழக மீனவர்களின் வாழ்வாதாரம் மற்றும் அவர்களின் குடும்பங்களின் எதிர்காலம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. மேலும் ஏழை மீனவர்கள் மீது இலங்கை நீதிமன்றங்கள் மிக மிக அதிகப்படியான அபராதத் தொகையினை விதித்து வருகிறது. எனவே, இதனை அரசாங்க ரீதியிலான பேச்சு வார்த்தை மூலம் தடுக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும்.
இந்திய இலங்கை கூட்டு பணிக்குழு கூட்டம் 2024 -ம் ஆண்டு அக்டோபர் 29-ம் தேதி கொழும்புவில் நடைபெற உள்ளதாக அறியப்படுகிறது. எனவே, 2016 ஆம் ஆண்டுக்கு பிறகு இரு நாட்டு மீனவர்கள் இடையே பேச்சுவார்த்தை நடைபெறாத நிலையில், இக்கூட்டத்தினையும் உடனடியாக கூட்டிட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று முதலமைச்சர் கோரிக்கை வைத்துள்ளார்.
அத்துடன் கைது செய்யப்பட்டுள்ள 145 மீனவர்களையும், அவர்களது படகுகளையும் உடனடியாக விடுவித்திடவும் நடவடிக்கை மேற்கொள்ளுமாறு பிரதமர் மோடியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது மனுவில் கேட்டுக் கொண்டுள்ளார்.