’’என்னோட உசிரு விவசாயம்; எனக்கு எல்லாமே இந்த மண்ணுதான்’’ என்று வாழ்ந்தவர் கோயம்புத்தூர் பத்மஸ்ரீ பாப்பம்மாள். இயற்கை விவசாயத்திலும் மக்கள் சேவையிலும் முன்னுதாரணமாகத் திகழ்ந்து மறைந்துள்ளார்.
கோயம்புத்தூர் மாவட்டத்தில் மேட்டுப்பாளையம் தேவனாபுரம் பகுதியைச் சேர்ந்த மருதாச்சலம் – வேலம்மாள் தம்பதி பக்கத்து கிராமமான தேக்கம்பட்டிக்கு குடிபெயர்ந்தனர். இவர்களது மகள் பாப்பம்மாள் என்கிற ரங்கம்மாள். பாப்பம்மாளின் கணவர் ரங்கப்பன்.
1916ல் பெற்றோர் மறைந்த பின்னர் கணவருடன் சேர்ந்து தங்களுக்கு சொந்தமான 10 ஏக்கர் விவசாய நிலத்தில் இயற்கையான முறையில் விவசாயம் செய்து வந்தார் பாப்பம்மாள். கணவர் மறைந்து 20 ஆண்டுகளுக்கு மேலாகியும் கூட இயற்கை முறையில் தொடர்ந்து விவசாயம் செய்து வந்தார் பாப்பம்மாள்.
ஆரம்பத்தில் 10 ஏக்கரில் விவசாயம் செய்து வந்த பாப்பம்மாள் கடைசியாக சில ஆண்டுகளாக 2 ½ ஏக்கர் நிலத்தில் நவதானியம் எள்ளு, கொள்ளு, தட்டாம்பயிறு, உளுந்து பயிர், வாழை விவசாயம் செய்து வந்தார்.
விவசாயத்தின் மூலம் கிடைத்த வருமானத்தில் வீடு கட்டி வாடகைக்கு விட்டிருந்தார் பாப்பம்மாள். அதில் வரும் வாடகை பணத்தில் தனது தேவை போக மீதத்தை பேரன், பேத்திகளுக்கு கொடுத்து வந்தார்.
பாப்பம்மாளுக்கு குழந்தை இல்லை என்பதால், தன் தங்கையை கணவருக்கு இரண்டாம் தாரமாக அவரே கல்யாணம் செய்து வைத்தார். அவருக்கு ஒரு பெண் குழந்தை பிறந்து வளர்ந்து ஆசிரியை ஆகி ஓய்வு பெற்றுவிட்டார்.
ஆனாலும் கடந்த 2021ல் 105 வயதாகியும் ஓய்வு இல்லாமல் விவசாயத்தில் தன்னை ஈடுபடுத்தி வந்தார் பாப்பம்மாள். தன் நிலத்தில் விவசாயம் செய்து வந்ததோடு அல்லாமல், ஊரில் யார் நாற்று நட்டு வைக்க கூப்பிட்டாலும் சென்று வந்தார். அவர் இதுவரையிலும் 8000 வேப்ப நாற்று நட்டிருக்கிறார்.
கடந்த 45 ஆண்டுகளாக தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தின் விவசாயிகள் கலந்துரையாடல் குழுவில் பங்கேற்று செயல்பட்டு வந்தார். 1959ல் தேக்கம்பட்டி ஊராட்சி வார்டு உறுப்பினர், 1964ல் காரமடை ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர், மாதர் சங்கத்தலைவி என மக்கள் சேவையிலும் ஈடுபட்டு வந்தார்.
90 ஆண்டுகளாக இயற்கை விவசாயம் செய்து வரும் பாப்பம்மாளுக்கு 2021ம் ஆண்டில் பத்மஸ்ரீ விருது வழங்கி மத்திய அரசு கவுரவித்தது. பிரதமர் மோடி கோயம்புத்தூர் கொடிசியா வந்தபோது பாப்பம்மாளை அழைத்து பேசினார். அப்போது பாப்பம்மாளுக்கு 105 வயது என்பதால், ‘’கண்ணு தெரியுதா?’’ என்று பிரதமர் மோடி கேட்டதற்கு, ‘’நல்லா தெரியுது’’ என்றார் பாப்பம்மாள்.
பாப்பம்மாளின் இந்த ஆரோக்கியத்திற்கு காரணம் என்ன? என்பது அவரே பத்திரிகைகளுக்கு அளித்த பேட்டியில் பதிவு செய்திருக்கிறார். ‘’அந்த கால உடம்பு இது. அதனால இப்போது வரைக்கும் எந்த நோயும் கிடையாது. கடுமையாக உழைப்போம். காலையில் சீக்கிரமே எழுந்து வயல்காட்டுக்கு போவோம். மதியம் 2 மணி வரை வேலை செய்வேன்.’’ என்று கூறியிருந்தார். கடைசிக்காலங்களில் வாழை பயிரிட்டிருந்தார். இரண்டு நாளுக்கு ஒரு முறை தண்ணீர் பாய்ச்சி வந்தார்.
ஆரோக்கியத்திற்கு காரணமாக அவர் மேலும், ‘’ அந்த காலத்தில் கம்பு , சோளம், வரகு, சாமை, கேப்பை, தினை என்று சாப்பிட்டு ஆரோக்கியமாக இருப்போம். பண்டிகை வந்தால் மட்டும்தான் அரிசிச்சோறு சாப்பிடுவோம். அதுவும் கொஞ்சமாகத்தான் சாப்பிடுவோம். வாழை இலையில்தான் சாப்பிடுவேன். தட்டில் இதுவரைக்கும் சாப்பிட்டதே இல்லை. மதியம் சாப்பிட்டு தூங்கிடுவேன். இரவில் ரொம்ப அளவாதான் சாப்பிடுவேன்.
இப்போது இரவில் 2 இட்லிதான் அளவாக சாப்பிடுவேன். அதிகம் நேரம் கண்விழிக்காமல் இரவில் 930 மணிக்கே தூங்கிவிடுவேன். கறி குழம்பு விரும்பி சாப்பிடுவேன். எதையும் சூடாதான் சாப்பிடுவேன். நன்றாக வேக வைத்துதான் சாப்பிடுவேன். டீ, காபி சாப்பிட்டது கிடையாது. என்றைக்குமே கொத்தமல்லி காபிதான் சாப்பிடுவேன்’’ என்று சொல்லி இந்த தலைமுறையினருக்கு ஆரோக்கியம் அறிவுறுத்தி இருக்கிறார்.
இந்த தலைமுறையினருக்கு மேலும் ஆரோக்கிய விசயத்தில் அக்கறையோடு, ‘’உணவுதான் மருந்து. இதை மறந்துவிடுகிறார்கள். சின்ன வயசிலேயே எல்லா கெட்ட பழக்கத்திற்கு பழகிடுறாங்க. இதனால் வியாதிதான் அதிகமாகுது. அப்போது எல்லாம் நாங்க மருத்துவமனை பக்கமே போகமாட்டோம். மருந்தை எல்லாம் கண்ணுல கூட பார்த்தது இல்லை. எந்த வியாதி வந்தாலும் கை வைத்தியம்தான் செய்துகொள்வோம்’’ என்று அறிவுறுத்தி இருந்தார்.
திமுக மீதும் கலைஞர் கருணாநிதி மீதும் அளவற்ற பற்று கொண்டிருந்தவர் பாப்பம்மாள். இதனால் தனது இறுதி மூச்சு வரையிலும் திமுகவின் மூத்த நிர்வாகியாகவே இருந்து வந்தார். திமுகவின் பல்வேறு போராட்டங்களில் பங்கெடுத்துக்கொண்டார். இதுகுறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது இரங்கல் அறிக்கையில், ‘’1965ம் ஆண்டு நடந்த இந்தி திணிப்புக்கு எதிரான போராட்டம் தொடங்கி நீட் தேர்வுக்கு எதிரான போராட்டக்களங்களையும் நெஞ்சுரத்தோடு எதிர்கொண்டவர்’’ என்று குறிப்பிட்டிருக்கிறார்.
கலைஞர் கருணாநிதி மீது பற்றும், பாசமும் கொண்டிருந்த பாப்பம்மாள் கலைஞரை சந்திக்க வேண்டும் என்று ரொம்பவே ஆசைப்பட்டிருந்திருக்கிறார். அது முடியாமல் போன வருத்தம் அவரிடம் இருந்தது.
கடந்த 17ம் தேதி அன்று சென்னை நந்தனத்தில் திமுக முப்பெரும் விழாவினை முன்னிட்டு, பாப்பம்மாளுக்கு பெரியார் விருது வழங்கி அந்த வருத்தத்தை துடைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்.
மண்ணு, மனுசங்க என்று வாழ்ந்த பாப்பம்மாள் உடல்நலக்குறைவால் தனது 108 வயதில் மறைந்துள்ளார். பிரதமர் மோடி உள்பட தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
‘’என் குடும்பத்தில் ஒருவரைப்பிரிந்த வலியுடன் தவிக்கிறேன்’’ என்று தனது இரங்கல் கடிதத்தில் உருக்கமுடன் குறிப்பிட்டிருக்கிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின்.
விவசாயிகளுக்கு மட்டுமல்லாது இளைய தலைமுறையினருக்கும் ஒரு பாடமாக வாழ்ந்து காட்டி இருக்கிறார் பாப்பம்மாள்.