வேலூர் அடுத்த அகரம்சேரியில் 85 ஏக்கரில் அமையும் தோட்டக்கலை பூங்காதான் தமிழ்நாட்டின் மிகப்பெரிய தோட்டக்கலை பூங்கா. சுற்றுலா வளர்ச்சி பெறுவதற்கான வாய்ப்புள்ளது என்று அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
அரசு தாவரவியல் பூங்காக்களில் 55 ஏக்கரில் அமைந்துள்ளது உதகை பூங்கா. 10 ஏக்கரில் அமைந்துள்ளது ஊட்டி ரோஸ் கார்டன். 30 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது குன்னூர் சிம்ஸ் பூங்கா. 20.50 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது ஏற்காடு பூங்கா. இதில் அகரம்சேரியில் அமையும் பூங்கா 85 ஏக்கர் பரப்பளவு கொண்டது. அதனால் தமிழ்நாட்டிலேயே இதுதான் மிகப்பெரிய தோட்டக்கலை பூங்கா என்ற பெருமையை பெற்றிருக்கிறது.
வேலூர் மாவட்டத்தில் சென்னை – பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையை ஒட்டி அகரம்சேரியில் அமைகிறது இந்த தோட்டம்.
பாரம்பரிய மருத்துவங்களில் குறிப்பிடப்பட்டுள்ள அரிய வகை மரங்கள், மூலிகை பயிற்கள், செடிகள் உற்பத்தி செய்யப்பட்டு பொதுமக்கள், வேளாண் பெருமக்கள், மாணவர்களுக்கு குறைந்த விலையில் விற்பனை செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. விவசாயிகளுக்கு தரமான நாற்றுகள், செடிகள் விற்பனை செய்யப்பட இருக்கின்றன. மூலிகைப்பொருட்கள் இங்கே குறைந்த விலையில் விற்க திட்டமிடப்பட்டுள்ளது.
வெளிக்கூட்டரங்கம், உள் கூட்டரங்கம், குழந்தைகளுக்கான விளையாட்டு சாதனங்கள் என்று சிறப்பம்சங்களுடன் அமையவிருக்கிறது இந்த பூங்கா.
தற்போது நடைபெற்று வரும் பணிகள் முடிந்து விரைவில் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு இப்பூங்கா வரும் என்றும், இந்த பூங்காவினால் வேலூர் மாவட்டத்தில் சுற்றுலா வளர்ச்சி பெறுவதற்கான வாய்ப்பு பிரகாசமாக இருக்கிறது என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.