“கடவுளே காப்பாற்று” என்று பக்தர்கள் வேண்டிக் கொள்வார்கள். அவர்களைக் காக்க வேண்டிய கடவுளையே காக்க வேண்டிய சூழலை உருவாக்கியிருக்கிறார்கள் மத உணர்வை ஓட்டுகளாக மாற்றும் அரசியல்வாதிகள். இந்தியாவில் அதிக பக்தர்கள் நாள்தோறும் வணங்கிச் செல்லக்கூடிய திருத்தலம் ஆந்திராவில் உள்ள திருப்பதி வெங்கடேசப் பெருமாள் திருக்கோவில். அந்தக் கோவிலின் லட்டு பிரசாதத்தில் சேர்க்கப்படும் நெய்யில் மாட்டுக் கொழுப்பு கலந்திருப்பதாகவும், மீன் எண்ணெய்யும் லட்டில் கலந்துள்ளது என்றும் ஆந்திர மாநில முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு குற்றம்சாட்டினார். முன்னாள் முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி ஆட்சியில் வழங்கப்பட்ட நெய் ஒப்பந்தம்தான் இதற்கு காரணம் என்றார் இன்றைய முதலமைச்சர்.
சந்திரபாபு நாயுடு தற்போது பா.ஜ.க.வுடன் கூட்டணி அமைத்து மாநிலத்தில் ஆட்சி நடத்துகிறார். மத்தியில் பா.ஜ.க. ஆட்சி நடத்துவதற்கு இவருடைய தெலுங்கு தேசம் கட்சியின் ஆதரவும் முக்கிய காரணம். இந்த நிலையில், பக்தர்கள் மிகுந்த நம்பிக்கை வைத்துள்ள திருப்பதி கோவில் லட்டு பிரசாதத்தில் கலப்படம் என்பது பெரும் சர்ச்சையையும் கொந்தளிப்பையும் உண்டாக்கியது. பைபிள் படிக்கும் ஜெகன்மோகன் ரெட்டியின் ஆட்சியில் இந்துக்களின் வழிபாட்டை இழிவுபடுத்தி, பக்தர்களின் மனதைப் புண்படுத்திவிட்டார்கள் என்ற வகையில் மத உணர்வுடன் இந்தக் குற்றச்சாட்டு பரவியது.
ஆந்திர மாநிலத்தின் துணை முதலமைச்சரான பவன் கல்யாண், முதல்வர் சந்திரபாபு நாயுடுவை ஓவர்டேக் செய்யும் வகையில், பெருமாள் சிலையைக் கையில் ஏந்திக்கொண்டு சனாதான தர்மம் காக்கும் குருஷேத்திரத்தில் இறங்கினார். கோவில் படிகளை சுத்தம் செய்தார். தன்னைப் போன்ற சக சினிமா நடிகர் கார்த்தி சொன்ன வார்த்தைகளுக்காக அவரை மன்னிப்பு கேட்க வைத்தார். லட்டு விவகாரத்தைத் தொடர்ந்து திருப்பதி கோவில் உண்டியல் விவகாரம் வரை கிளப்பப் போவதாக வரிந்து கட்டினார்.
சைவ லட்டு-அசைவ லட்டு என்று சமூக வலைத்தளங்களில் கேலி-கிண்டல் செய்யப்பட்டது. சென்னை மயிலாப்பூரைச் சேர்ந்த இரண்டு பெண்மணிகள், “கண்டவர்களின் கையும் படுவதால் நாங்க திருப்பதி லட்டு சாப்பிடுவதேயில்லை” என்று வாக்குமூலம் கொடுத்து, லட்டுத் தயாரிப்பு என்பது பிராமணர்களுக்கு மட்டுமே உரியது என்பதை வலியுறுத்தினார்கள். வழக்கம்போல ஆர்.எஸ்.எஸ்-பா.ஜ.க.-இந்து மத அமைப்பினர், கோவில்களைத் தனியாரிடம் ஒப்படைக்க வேண்டும் என்று குரலெழுப்பினர்.
திருப்பதி லட்டு பற்றி ஒரு யூ-டியூப் சேனல் வெளியிட்ட வீடியோ நீக்கப்பட்டது. திருப்பதிக்கு நெய் வழங்கிய தமிழ்நாட்டு நிறுவனம்தான், பழநி பஞ்சாமிர்தத்திற்கும் வழங்குகிறது என்றும் அதனால் பழநி பஞ்சாமிர்தத்திலும் கலப்படம் இருப்பதாக செய்திகள் பரவின. பஞ்சாமிர்தத்தில் கருத்தடை மாத்திரை கலப்பதாக ஒரு திரைப்பட இயக்குநர் பரபரப்பைக் கிளப்பினார். இத்தனைக்கும் அடிப்படையாக இருந்தது ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, திருப்பதி லட்டுத் தயாரிப்பு பற்றி வெளியிட்ட செய்திகள்தான்.
குஜராத் மாநிலத்தில் உள்ள ஒரு ஆய்வகத்தில் நடத்தப்பட்ட சோதனையின் அடிப்படையில்தான் ஆந்திர முதல்வர் லட்டு பற்றிய குற்றச்சாட்டை எழுப்பினார். இது தொடர்பாக சுப்பிரமணியசாமியும், ஒய்.எஸ்.ஆர்.காங்கிரசாரும் தொடர்ந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், “லட்டு விவகாரம் தொடர்பான ஆய்வக அறிக்கை மீதான விசாரணை நடந்துகொண்டிருக்கும் நிலையில், எந்த அடிப்படையில் மாட்டுக்கொழுப்பு, மீன் எண்ணெய் கலந்திருப்பதாக ஆந்திர முதலமைச்சர் சொன்னார்?” எனக் கேள்வி எழுப்பியது. ஆந்திர மாநில அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர்கள் தரப்பிடம் உரிய பதிலில்லை. செப்டம்பர் 25ஆம் நாள்தான் லட்டு விவகாரம் தொடர்பாக எஃப்.ஐ.ஆர். பதிவு செய்யப்பட்டுள்ளது. சிறப்பு விசாரணைக் குழு அமைக்கப்பட்டுள்ளது. ஆனால் செப்டம்பர் 18ந் தேதியே ஆந்திர முதல்வர், மாட்டுக்கொழுப்பு என்ற சர்ச்சையைக் கிளப்பிவிட்டார்.
இதனைக் கண்டித்த உச்சநீதிமன்றம், “அதில் இருப்பது சோயா பீன்ஸ் எண்ணெய்யாகக்கூடி இருக்கலாம். கோடிக்கணக்கான மக்களின் உணர்வுகளைப் பாதிக்கும் வகையில், மிகப் பெரும் பொறுப்பில் இருப்பவர் பேசியது எப்படி?” என்றும் கேட்டது. அத்துடன், “கடவுளை அரசியலில் இருந்து தள்ளி வையுங்கள்” என்றும் உச்சநீதிமன்றம் எச்சரித்துள்ளது.
திருப்பதி லட்டு பிரசாதத்தில் மாட்டுக்கொழுப்பு கலக்கப்பட்டதா என்பது உறுதியாகவில்லை. ஆனால், அதற்கான பரிகாரம் என்ற பெயரில் கோமியம் எனப்படும் மாட்டு மூத்திரம் கலந்த புனிதநீரை லட்டுகள் மீது தெளித்து பக்தர்களுக்கு வழங்கியுள்ளார்கள். ஆண்டவனும் பக்தர்களும் மதவாத அரசியல்வாதிகளாலும் அவர்களின் கூட்டாளிகளாலும் அல்லாடுகிறார்கள்.